உ.வாசுகி, மத்திய குழு.
வர்க்க சமூக அமைப்பு உருவான காலம் தொட்டு நிலவும் பெண்ணடிமைத்தனம், நில உடமை சமூகத்தில் தத்துவமாக நிலை பெறுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பு, தன் லாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிறது.
பெண்ணுரிமை, பெண் விடுதலை போன்ற அம்சங்களை தலைமையின் உணர்வோட்டமாக மட்டும் குறுக்கி விடாமல், மார்க்சிய சித்தாந்தத்தின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொண்டால் தான், கம்யூனிச இயக்கம் அதில் முன்னத்தி ஏர் என்பது தெளிவாகும். அனைத்துவித பாகுபாடுகளையும் எதிர்க்கும் இயக்கம் இது. வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டும் இலக்கைக் கொண்டது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முழக்கம், ஆண் தொழிலாளர்களுக்கு மட்டுமான அறைகூவலாக இல்லை.
ஆணாதிக்கம் மட்டுமல்ல
சில பகுதியினர் கூறுவதைப் போல, பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கத்தை மட்டும் காரணமாக மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் நிறுவவில்லை. ஆணாதிக்கத்துடன், நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் பெண்ணடிமைத்தனத்துக்கான காரணிகளாக, அதனை நியாயப்படுத்தி, நீட்டிக்கும் தத்துவங்களாக உள்ளன என்பதையும், பெண்ணடிமைத்தனம் சமூகக் கட்டமைப்போடு பிணைந்தது; இதற்கான பொருள்சார் சூழல் நிலவுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் பெண், உழைப்பாளி, குடிமகள் என்று மூன்று வகைகளில் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை அமைவதாக கட்சித் திட்டம் விளக்குகிறது. மேலும் சாதி-வர்க்கம்-பாலினம் என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய அடிப்படையிலும், பெண்கள் மீதான சுரண்டல் நிகழ்வதை கவனிக்க வேண்டும். அப்படியானால், சில தனிநபர்களின் மனச் சிதைவு காரணமாக பெண்ணின் மீதான ஒடுக்குமுறை நிகழ்கிறது என்ற வாதமும், மறுபுறம் அதற்குத் தீர்வு ஆண் எதிர்ப்பு என்பதும் நிராகரிக்க வேண்டிய கருத்தியலாகின்றன. தனிநபர் அணுகுமுறைதான் காரணம் என்றால், பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்குச் சமூக ஒப்புதல் கிடைப்பது எப்படி? சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் இது நிலவுவதும், நியாயப்படுத்தப் படுவதும், இது ஒரு பொதுக்கருத்தாக, பொதுப் புத்தியாக மாறியிருப்பதும், புராண, இதிகாசங்கள் உள்ளிட்டவை இதற்குத் துணை போவதும், ஆண்மை பெண்மை என்று வேறுபட்ட முறையிலான கற்பிதமும் எவ்வாறு நிகழ்கின்றன? பல நூறாண்டுகளாக இது நீடிப்பது எப்படி?
சமூக அமைப்பின் ஆழம்
வரலாற்றில் தனியுடமை தோன்றியதும், பெண்ணடிமைத்தனம் உருவானதும் ஒத்திசைந்து நிகழ்ந்ததாக ஏங்கெல்ஸ் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கிறார். வர்க்க சமூக அமைப்பு உருவான காலம் தொட்டு நிலவும் பெண்ணடிமைத்தனம், நில உடமை சமூகத்தில் தத்துவமாக நிலை பெறுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பு, தன் லாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிறது. புதிய வடிவங்களில் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது. பண்பாடு அதைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பில் நிலைபெற்றுள்ள இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒரு குடும்பத்தில் ஆணாதிக்கம், மற்றொரு குடும்பத்தில் பெண்ணாதிக்கம் என்று போகிற போக்கில் சமப்படுத்தி விட முடியாது. உதாரணமாக, பெண் விவசாயத் தொழிலாளி குறைவான கூலிக்கு உழைக்க நேரும் போது அங்கு பாலினம்/வர்க்கம் என்ற இரண்டு அம்சங்களில் ஒடுக்கப்படுவது நடக்கிறது. தலித் பெண் உழைப்பாளி என்றால், சாதி என்பதையும் சேர்த்து மூன்று விதங்களிலும் அவர் ஒடுக்கப்படுகிறார். தலித்துகளுக்கும், பெண்களுக்கும் குறைவான கூலி கொடுக்கப்படுவதே அவர்களது தாழ்த்தப்பட்ட சமூக அந்தஸ்து காரணமாகத்தான். அதேபோல், பெண்ணைச் சுமையாகப் பார்க்கும் நில உடமை கருத்தியல் இன்னும் காலாவதியாகி விடவில்லை. முதலாளித்துவ சமூக அமைப்பில், இது பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. உதாரணமாக, முன்னேறிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பெண்கரு அழிப்பு நடைபெறுவதைக் கூற முடியும்.
சோஷலிசச் சாதனைகள்
1917 பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பிறகு அமைக்கப்பட்ட சோவியத் அரசு பெண்களுக்கான வாக்குரிமையை உலகத்திலேயே முதன் முதலாக அங்கீகரித்தது. அவர்களுக்கான சட்டங்களைக் கொண்டு வந்தது. தனிப்பட்ட முறையில் குடும்பங்களில் பெண்கள் செய்யும் வீடு சார் வேலைகளைச் சமூகமயமாக்கியது. இதனால் பல்வேறு துறைகளில் பெண்களால் முன்னுக்கு வர முடிந்தது, முத்திரை பதிக்க முடிந்தது.
இந்திய முன்னெடுப்புகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை 1920இல் தாஷ்கண்ட் நகரத்தில் அமைக்கப்பட்ட போது அதில் இடம்பெற்ற ஏழு பேரில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் ஆட்சி செய்த மேற்கு வங்கம், கேரளம், திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலின சமத்துவத்துக்குப் பாதை போடப்பட்டது. மேற்கு வங்கத்தில் கூட்டுப்பட்டா, உள்ளாட்சிகளில் கூடுதல் பிரதிநிதித்துவம், கேரளாவில் பெண்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த குடும்பஸ்ரீ போன்ற திட்டங்கள், அடிமட்டத் திட்டமிடல், கடை ஊழியர்கள் உட்காரும் உரிமைச் சட்டம், திரிபுராவில் பழங்குடிப் பெண் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை சாத்தியமாகியுள்ளன. திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதிபதி ஹேமா கமிட்டி மலையாளத் திரைத்துறையில் உருவாக்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட முயற்சி எடுக்கப்பட்டதில்லை. 33% இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க ஊசலாட்டமற்ற போராட்டத்தை சிபிஎம் நடத்தியது. “பெண்கள் பிரச்சினைகள் குறித்த மார்க்சியப் பார்வை” என்கிற ஆவணத்தை கட்சியின் மத்தியக்குழு உருவாக்கியது. அனேகமாக வேறு எந்த நாட்டிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இதுவரை செய்யாத முயற்சி இது.
தமிழகத்தில்…
தொழிலாளர், விவசாயி, விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்கான வர்க்கப் போராட்டங்களில் பெண்களை அதிகம் அணிதிரட்டியுள்ளோம். சின்னாம்பதி, சிதம்பரம் அண்ணாமலைநகர், வாச்சாத்தி உள்ளிட்டு தமிழகம் முழுவதும் நடக்கும் வன்கொடுமைகளுக்கு நியாயம் கேட்டுத் தொடர் இயக்கங்கள் நடத்தியுள்ளோம். சென்னையில் குடும்ப வன்முறை எதிர்ப்புச் சிறப்பு மாநாடு, குமரி மாவட்டம் தக்கலையில் பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாடு போன்றவை நடத்தப்பட்டதோடு, அவற்றின் தீர்மானங்கள், முடிவுகள் துண்டறிக்கை போடப்பட்டு, மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. கடந்த காலத்தில் சேலத்தில் கருக்கொலை எதிர்ப்பு மாநாடு, கோவை, குமரி மாவட்டங்களில் வரதட்சணை எதிர்ப்பு ஆய்வு மற்றும் மாநாடு, சேலத்தில் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு மாநாடு, குழந்தைகள் மீதான வன்முறை எதிர்ப்பு இணையவழிக் கருத்தரங்கம் நடத்தி, ஆலோசனைகளை அரசுக்கு அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற, 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான வன்முறைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். தற்போதைய தமிழக அரசு உருவாக்கியிருக்கும் மகளிர் கொள்கை குறித்த ஒரு முழுமையான விமர்சனப் பூர்வக் குறிப்பைத் தயாரித்து அரசுக்கு அனுப்பினோம்.
கட்சியின் உள்ளே…
பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயம் கேட்டுப் பல தலையீடுகள் செய்யப்படுகின்றன. நமது மாதர் இயக்கத்துடன் சேர்ந்து நீதி கிடைக்க முயற்சிகளை எடுக்கிறோம். சாதி ஆணவக் குற்றங்களை வலுவாகக் களத்திலும் கருத்தியல் தளத்திலும் முன்னெடுப்பது மார்க்சிஸ்ட் கட்சிதான். இதைத் தடுக்கும் தனிச் சட்டத்துக்கான நகல் வரைவைத் தனிநபர் மசோதாவாக அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய தயாரித்து அனுப்பினோம். ஊருக்குத்தான் உபதேசம் என்று இல்லாமல் கட்சி உறுப்பினர்களுக்குப் பாலின நிகர்நிலை உணர்வூட்டுகிறோம். குடும்ப வன்முறை ஒரு குற்றமாக, கட்சி அமைப்பு விதிகளில் இடம்பெற்றுள்ளது. பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க உள்மட்டக் கமிட்டி பல மட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இது கட்டாயமல்ல என்ற போதும், இதை நாம் செய்திருக்கிறோம்.
எதிர்கால சவால்கள்
சமத்துவத்துக்கான பெண்கள் போராட்டம், ஜனநாயகத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதி என மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் அழுத்தமாக முன்வைக்கிறது. இருவித ஒடுக்குமுறைகளைச் சந்திக்கும் பெண் தொழிலாளிகளின் பிரச்சினைகளில் பிரத்தியேகக் கவனம் செலுத்துகிறது. இன்றைய ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் மனுவாதச் சித்தாந்தம், பெண்களைப் பல நூறாண்டு பின்னுக்குத் தள்ளக்கூடியது. அதனைப் புறந்தள்ளி, கருத்தியல் தளத்தில் கூடுதலாக இடதுசாரி கண்ணோட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. தனியார்மயப் பொருளாதாரப் பாதையில் பெண்களுக்கான வேலை வாய்ப்பும் சுருங்கி வருகிறது. உயர்கல்வி தீவிரமாக வணிகமயப்படுத்தப்படும் சூழலில் பெண்களுக்கான உயர்கல்வியும் நிச்சயமாகப் பாதிக்கப்படும். கொள்கை, நடைமுறை இரண்டிலும் பாலின சமத்துவத்தைச் சமரசமின்றி முன்னெடுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி முன்னத்தி ஏர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.