24 வது மாநில மாநாடு

தமிழகமும் அடையாள அரசியலும்!

457261061 1026520755519483 912731772479248720 N

என்.குணசேகரன் ,

மாநில செயற்குழு உறுப்பினர்.


தமிழகத்தில் நீண்டகாலமாக அடை யாள அரசியல் இயங்கி வருகிறது. சமூக ஆர்வலர்கள், அறிவுத்துறை யினர் பலர் அடையாள அரசியல் மீது நேசம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இடதுசாரி கொள்கைகளிலும்,மார்க்சிய சித்தாந்தத்தின் மீதும் தங்களுக்கு பற்று உண்டு என்று பேசுகிற வர்களில் கூட சிலர் அடையாள அரசியல் செயல்பாடு கொண்டவர்களாகவும் உள்ளனர். உலக அளவில்,இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவ பொருளாதாரம் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்கு நேரடி எதிர்வினையாக அடையாள அர சியல் தோன்றியது.அதன் தத்துவ பின்புலமாக பின் நவீனத்துவம் வளர்ந்தது.இவற்றின் தாக்கம் இன்று வரை இந்தியாவிலும் தமிழகத்திலும் நீடித்து வருகிறது.

அடையாள அரசியலின் நோக்கம் என்ன?

அடையாள அரசியல் என்பது ஒரு நபர் அல்லது குழுவின் மதம் சாதி இனம் பாலினம் உள்ளிட்ட சுய அடையாளத்தினை அடிப்படை யாகக் கொண்டது. அடையாள அரசியலில் மையமானது அங்கீகாரம் அல்லது மரியாதை கோருவதும்; சுயாட்சி அல்லது உரிமைகள் மற்றும் அங்கீகாரங்களுக்காக ஒன்றுதிரள்வதும் ஆகும்.அடையாள அரசியல் என்பது சமூக-கலாச்சார வேறுபாட்டின் அரசியல் எனலாம்.அடை யாளத்தை மட்டுமே மையமாகக் கொண்டு தனித்தனி தீவுகளாக மக்கள் குழுக்களை திரட்டு வதும், அந்த திரட்டலை குறுகிய அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதும் அடையாள அரசியல். சமூகத்தில் உயர் மேலடுக்கில் வாழுகிற சொத்துடைமை கொண்ட முதலாளிகள், நில உடைமையாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரிவினர் வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. ஆனால் ஏழைகள்,குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர மக்கள், அடித்தட்டு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிற நிலையில் அவர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய சூழலில் உள்ளனர் .ஆனால் அவர்களது ஒற்றுமையை, அடையாள அடிப்படையில் பிரித்து கூறு போடுகிற வேலையை அடையாள அரசியல் செய்கிறது. தமிழகத்திலும் இந்திய நாட்டிலும் அமலாக்கப் பட்டு வருகிற நவீன தாராளமய கொள்கைகள் சமூக ஏற்றத்தாழ்வை அதிகரித்து வருகின்றன. இந்த கொள்கைகளை பயன்படுத்தி பெரும் மூலதன சக்திகள் தங்களது சொத்துக்களை மேலும் மேலும் பெருக்கி வருகின்றனர் என்பதுதான் கடந்த 30 ஆண்டு பொருளாதார வரலாறு. அதே நேரத்தில் சாதாரண உழைக்கும் மக்க ளின் வருமான வீழ்ச்சி அதிகரித்து வருகிறது.இந்த சூழலில் சமூகத்தில் கடைக்கோடி விளிம்பில் தள்ளப்பட்டு வருகிற சாதாரண மக்கள் ஒன்று திரண்டு குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் உள் ளது. ஆனால் அடையாள அரசியல் அவர்களைப் பிரித்து தனித்தனி குழுக்களாக சிதறுண்டு கிடக்க வைக்கிறது.இதன் வழியாக அடையாள அரசியல் பெரு மூலதனத்தின் அதிகாரத்திற்கும் சுரண்டலுக்கும் சேவை செய்கிறது.

அடையாள திரட்டலுக்கு மதம்

இந்துக்கள் முஸ்லிம்களால் காலம் காலமாக ஒடுக்கு முறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி வந்துள்ளதாகவும்,இந்துக்கள் என்கிற வகையில் ஒன்றுபட வேண்டுமெனவும் ஓர் இந்துத்துவா வாதி போதிக்கிறார்.ஒரு பொய்யான கருத்தியலைச் சொல்லி பாதிக்கப்பட்ட மனநிலையை இந்துக்களி டம் விதைக்கின்றனர். இந்து என்ற அடையாளம் வலுப்படுத்தப்பட்டு அடையாளத் திரட்டலை முன்னெடுக்கின்றனர். தேர்தலின் போது இதை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறார்கள். பல பத்து ஆண்டுகளாக இந்த வேலையை அவர்கள் தமிழகத்தில் மேற்கொண்டு வந்துள்ள னர். தேர்தலில் அவர்கள் இந்து மதவாத அடை யாள திரட்டலோடு சாதிய திரட்டலையும் இணைத்து தங்களுக்கென்று வாக்கு வங்கியை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.இன்று இந்துத்துவா அடையாளத் திரட்டல் சமூகம், அரசியல்,பண்பாடு என அனைத்திலும் இயங்கி வருகிறது.இந்த வேலையை அவர்கள் செய்வதற்கு கார்ப்பரேட் முதலாளித்துவம் இந்துத்துவாவாதி களுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது. சிறுபான்மை மக்கள் மத்தியில் செயல்படுகிற அடையாள இயக்கங்கள் இந்துக்கள் அனைவரும் இந்துத்துவவாதிகள் என்றும்,இந்துக்கள் முழுவதும் சிறுபான்மையின ரை ஒடுக்குவதாகவும் கட்டமைத்து சிறு பான்மை அடிப்படை வாதத்தை வளர்த்து வருகின்றன.

ஒடுக்குமுறை எதிர்ப்பு

அடையாளத் திரட்டல் ஒடுக்கு முறைக்கு ஆளான மக்களிடையே தீவிரமாக வேலை செய்கிறது. சாதி ஒடுக்கு முறையை அகற்ற பட்டியலின மக்கள் தங்களது சாதி அடிப்படையில் அணிதிரளுமாறு தூண்டப்படுகின்றனர். ஒடுக்கு முறைக்கு எதிராக பட்டியல் இன மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவது ஜனநாயக போராட்டமாகும்.அதனை அடையாள அரசியல் திரட்டலாக மட்டும் பார்க்க இயலாது.இந்த வகையான அடையாள திரட்டலில் உள்ள சில நியாயமான கவலைகளை தன்னுள் உட்படுத்திக்கொள்ளும் திறன் மார்க்சியத்திற்கு மட்டுமே உண்டு.அதனால்தான் காலம் காலமாக வர்க்க ஒடுக்குமுறையுடன் இணைத்து சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக மார்க்சிஸ்ட்கள் வர்க்க ஒற்றுமையைக் கட்டி போராடி வந்துள்ளனர். ஆனால் அடையாள அரசியலின் நோக்கம் மிகவும் குறுகியது.அதன் தலைவர்கள் வர்க்க ஒற்றுமை மீது அக்கறை காட்டுவதில்லை.பட்டியலின மக்கள் தங்கள் அடையாளம் சார்ந்து நிரந்தர ஒற்றுமையை உருவாக்கிடவும், இதர உழைக்கும் மக்களோடு இணைந்து போராடும் நிலை வராமல் தடுப்பதற்கும் அடையாள அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இதனை பட்டியலின மக்கள் உணர்ந்து உழைக்கும் மக்களின் ஒற்றுமை என்கிற வகையில் அணி திரள வேண்டியது அவசியமாகும்.

பண்பாட்டு உரிமைகள் பாதுகாப்பு

இனம், மொழி சார்ந்த ஒடுக்கு முறைகளை எதிர்கொள்ள இனம், மொழி அடிப்படையில் அடையாளம் சார்ந்த திரட்டல் நடைபெறுகிறது. இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதை நிராகரித்து நாடு தழுவிய அளவில் இந்து தேசியம் என்ற பெயரில் மத அடையாளத் திரட்டல் நடக்கிறது.ஒவ்வொரு தேசிய இனத்தின் பண்பாடு, தனித்தன்மைகள் அழிக்கப்பட்டு, பன்முகத் தன்மையை சீர்குலைத்து இந்த அடையாள திரட்டல் நடைபெறுகிறது. இத்தகைய சூழலில் ஒவ்வொரு இனத்தின் உழைக்கும் மக்கள் தங்களது முற்போக்கான பண்பாட்டுப் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மொழி உரிமையை பாதுகாக்கவும் அணி திரள்வது அவசியம். ஆனால் வர்க்க விடுதலை நிகழ்ச்சி நிரலை பின்னுக்குத் தள்ளி நிரந்தரமான அடையாளம் சார்ந்த ஒற்றுமையை உருவாக்கு வது வர்க்க ஒற்றுமையை பலவீனப்படுத்தும். நாடு தழுவிய அளவில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையையும் அது பாதிக்கும். இனம், மொழி, பண்பாடு சார்ந்த உரிமைகளை பாதுகாப்பதற்கும் அடையாள அரசியல் பயன்படாது. இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அடையாளம் சார்ந்து தனித்தனியாக எதிர்ப்பை முன் வைக்கிற போது ஒடுக்குமுறை யாளர்களின் கரம் வலுவடையும் வாய்ப்புதான் ஏற்படுகிறது . சில அடையாளம் சார்ந்த திரட்டல்கள் தமிழ கத்தில் சில முன்னேற்றங்களை சாதித்தது உண்மையே.இருந்தாலும் வர்க்க விடுதலை நோக்கிய பயணத்திற்கு அடையாளம் சார்ந்த திரட்டல் உதவிடவில்லை. எடுத்துக்காட்டாக, தமிழ கத்தின் பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவினர் மற்றும் பட்டியலின மக்கள் மீது சமூகத்தின் மேலடுக்கு சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் பிற் படுத்தப்பட்ட மக்களின் இயக்கமாக பிராமண ரல்லாத இயக்கம் உருவானது .இது திராவிட இயக்கமாக பரிணமித்தது.கல்வி, வேலை வாய்ப்பில் சமூக நீதி கோட்பாடு ஓரளவு அம லாக்கப்படுவதற்கு பிற்படுத்தப்பட்ட மக்களின் இந்த அணி திரட்டல் உதவிற்று. ஆனால் கிராமப்புற நிலமற்ற விவசாயிகளின் வாழ்நிலை, வறுமை, வேலையின்மை என பல்வேறு வாழ்க்கை பிரச்சனைகளின் தாக்குதலிலிருந்து இன்றும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின ஏழை நடுத்தர மக்கள் மீளவில்லை. ஒடுக்குமுறை எதிர்ப்பு என்ற புள்ளியிலிருந்து எழுகிற அடையாளம் சார்ந்த ஒற்றுமை இட ஒதுக்கீடு போன்ற சட்ட ரீதியான சில முன்னேற்றங் களை சாதித்திருந்தாலும், அதற்கு மேலான சமத்துவத்தை அடையாள அரசியலால் சாதிக்க முடியாது.அது வர்க்க ஒற்றுமையால்தான் சாத்திய மாகும். எனவே சமூக ஒடுக்குமுறை மற்றும் மேலாதிக்கத்தை அகற்றுவதற்கும் விரிவான வர்க்க ஒற்றுமை தேவை.

இடதுசாரி அரசியலே மாற்று

தமிழகத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிற பிறமொழி பேசுகிற மக்கள் மீது வெறுப்பு அரசியலை முன்வைத்து தமிழ்த் தேசியம் எனும் பெயரில் அடையாள அரசியலை சீமான் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். இது வர்க்க ஒற்றுமையை பிளவுபடுத்தும் முயற்சி மட்டுமல்லாது, அடையாள உணர்வுகளை தூண்டி இளைஞர்களை திசை திருப்பும் முயற்சியாகவும் அமைந்துள்ளது. தமிழகத்தில் அடையாள அரசியலுக்கு இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் நடிகர் விஜய், திராவிடமும் தேசியமும் தனது கொள்கைகளாக அறிவித்தார்.இளைஞர்களை அதிகமாக தனது கட்சியில் திரட்டி உள்ளதாக அவர்கள் கூறினாலும் நடிகர் விஜய் மாநாட்டில் பேசுகிறபோது வேலையின்மை பற்றியோ அதன் காரணங்களைப் பற்றியோ அலசவில்லை. அடை யாள அரசியல் கூறுகளை பயன்படுத்தினால் அரசியலில் வெற்றி பெறலாம் என்று அவர்கள் கருதுவதாக தெரிகிறது. தமிழகத்தில் பொதுவாக சாதி, மத அடை யாளங்களை முன்னிறுத்தும் கட்சிகளால் அந்தந்த பிரிவு மக்களை முழுதாக தங்கள் செல்வாக்கு தளத்தில் திரட்டிட முடிவதில்லை. இது எதைக் காட்டுகிறது? இன்னமும் தமிழக மக்கள் அடையாள திரட்டலுக்கு ஆளாவதில் நாட்டம் கொள்ளவில்லை. ஏனெனில் பெரும் பகுதி மக்கள் தங்களது அடையாளங்களை தாண்டி சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

அடையாள அரசியல்வாதிகளால் ஒரு கேள்விக்கு விடை அளிக்க இயலாது. அந்தக் கேள்வி இதுதான்:‘பன்னாட்டு மூலதனமும், இந்திய முதலாளித்துவமும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கி வரும் இன்றைய சூழலில், சுரண்டலி லிருந்து விடுதலையை அடையாள அரசியல் வழியாக அடைய முடியுமா?’ அடையாள அரசியலால் இந்த விடுதலையை சாதிக்க முடியாது என்பது மட்டுமல்ல;அந்த விடு தலை நிகழ்ச்சி நேரலை அது தள்ளிப் போடுகிறது; உழைக்கும் மக்கள் அந்த விடுதலையை நோக்கி பயணப்படுவதை தடுக்கிற வேலையைத்தான் அடையாள அரசியல் செய்து வந்துள்ளது. இந்த விடுதலையை சாதிக்கும் வல்லமை கொண்டது, இடதுசாரி அரசியலே. தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றைக்குமே அடையாள அரசியலால் கிடைக்கும் உடனடி அரசியல் ஆதாயங்களை நம்பி இருந்ததில்லை. அந்த சுயநல அரசியலை உறுதியாக தவிர்த்து சோசலிச இலட்சியப் பாதையில் மார்க்சிஸ்ட் கட்சி பயணித்து வந்துள்ளது.வர்க்க அரசியலை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக முன்னெடுத்து வந்துள்ளது. இடதுசாரி அரசியல் வலுப்பெறுகிற போது அடையாளங்களைக் கடந்து இடதுசாரி நீரோட்டத்தில் தமிழக மக்களும் அணி திரள்வார்கள்.

Leave a Reply