மற்றவை

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்பு கொடி போராட்டம்!

POrattam

பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது என்ற போர்வையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கான சட்டத் திருத்தத்தை  நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு  ஏப்ரல் 16 முதல் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்திட உள்ளது. பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி பல ஆண்டு காலமாக  பாராளுமன்றத்திற்குள்ளும், நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. இச்சட்டம் நிறைவேற்றிய போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றதுடன் இதனை காலதாமதமில்லாமல் உடனடியாக அமல்படுத்திட வேண்டுமெனவும் அழுத்தமாக வற்புறுத்தியிருக்கிறது.

கடந்த 2023 செப்டம்பர் மாதம் இதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆதாயம் அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு பாஜக மேற்கொண்ட நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. தற்போது ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பான பணிகள் மே 4ந் தேதி வரை உள்ளது. குறிப்பாக, மேற்குவங்கம், தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் வகையில் அவசரமாக பாராளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டிய எந்த அவசியமுமில்லை. எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்காமல் தன்னிச்சையாக பாரதிய ஜனதாக கட்சி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

தொகுதி மறுவரையறை செய்வதற்காக 131வது சட்ட திருத்தத்தை ஏப்ரல் 16ந் தேதி முன்மொழிய இருக்கிறார்கள். இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்ற வடமாநிலங்களோடு ஒப்பிடும் போது குறையும். மேலும், நிதி இழப்பு, வரிப் பகிர்வு, மாநில உரிமைகள்  உள்ளிட்டு பலவிதமான பாதிப்புகளை தமிழகம் எதிர்கொள்ள நேரிடும். தேசத்தின் நலன் கருதி மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்வதை சிபிஐ(எம்) கண்டிக்கிறது.

தற்போது பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை பயன்படுத்தி கொல்லைப்புற  வழியாக அவர்கள் நினைத்த அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவர மோடி அரசு முயற்சிக்கிறது.

எனவே, தமிழ்நாட்டிற்கு விரோதமான ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு நமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவும் நாளை (ஏப்ரல் 16ந் தேதி)  வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், மக்கள் கருப்பு சட்டை அணிந்தும் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்

Leave a Reply