மாநிலக் குழு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பேர் பலி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வலியுறுத்தல்!!!

Pattasu

விருதுநகர் அருகே, வச்சக்காரப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் பெரும் வேதனையளிக்கிறது.  இந்த ஆலையில், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்ததால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில், ஏப்ரல் 14 அன்று ஆண்டியாபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவே இதுபோன்ற விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன.

எனவே, இந்த விபத்து குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும், படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  தரமான சிகிச்சையும், உரிய இழப்பீடும் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும், பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத ஆலைகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இதுபோன்ற விபத்துக்கள் இனிமேல் நிகழாத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்

Leave a Reply