மாநிலக் குழு

2026 ஜூலை 31, ஆகஸ்ட் 1: சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

1 PS copy

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2026 ஜூலை 31, ஆகஸ்ட் 1 தேதிகளில் கன்னியாகுமரியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..

தீர்மானம் 1

ஆகஸ்ட் 10 விவசாயிகள் – தொழிலாளர்களின் சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் !

ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாய, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 10 இல் அறிவித்துள்ள சிறை நிரப்பும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய  முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

தொழிலாளர் வர்க்கம் தொடர்ந்து போராடிப் பெற்ற பல்வேறு உரிமைகளை பறிக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும், இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத்தில் 60 க்கும் மேற்பட்ட  உறுப்பினர்களை பெற்றிருந்த போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ((UPA (1)) இருந்தபோது இடதுசாரிகளின் அழுத்தத்தால்  கொண்டுவரப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை பிஜேபி அரசு ரத்து செய்து வி.பி.ஜி ராம் ஜி எனும் பெயரிலான சட்டத்தை, 2026 ஜூலை 1  முதல் அமல்படுத்தி இருப்பதால் பறிக்கப்பட்டுள்ள வேலை உரிமையை மீட்டெடுத்திடவும், 200 நாள் வேலை நாள் ஒன்றுக்கு 700 கூலியை உறுதி செய்யும் வகையில் சட்டம் அமைந்திட வேண்டும், மேலும் விவசாயத்தையும் உணவு இறையாண்மையையும் அழிப்பதோடு, விதைச்சட்டம் வாயிலாக கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு விதையை தாரை வார்ப்பதையும் கைவிட வேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்து மின்சாரத்தை முழுக்க தனியார் வசம் கொண்டு செல்லக் கூடிய வகையில் மின்கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தும் அபாயம் கொண்ட  மின்சாரத் திருத்தச் சட்டம் கைவிடப்பட வேண்டும் என நான்கு கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு, விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை ஆகஸ்ட் 9  வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் அறிவித்துள்ளனர்.

காலனி ஆதிக்கத்திற்கு எதிராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட முற்போக்கு பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையில் நடைபெறும் நாடு தழுவிய இப்போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு முழு ஆதரவையும், புரட்சிகர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2

ஆகஸ்ட் 26 – 31, 2026 மக்கள் சந்திப்பு இயக்கம்

வெற்றி பெறச் செய்வீர்!

நாட்டில் இன்று வகுப்புவாத – கார்ப்பரேட் கூட்டின் பிரதிநிதியாக உள்ள ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும், ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து அரசியலமைப்பு நிறுவனங்களை, சட்ட அமைப்புகளை, நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் இடதுசாரிகள், முற்போக்கு சக்திகள் போராடி வருகின்றன.

அதே போல், தமிழ்நாட்டின்  ஆட்சி மாற்றம், அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளின் மீது தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. குறிப்பாக குடிநீர் விநியோகத்தை சூயஸ் கம்பெனிக்கு கொடுப்பதற்கு எதிராக, ஒன்றிய அரசின் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரியும், பட்டா கோரியும், ஆணவப்படுகொலைக்கு எதிராகவும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், காவல் நிலையம், சிறைக்கைதிகள் மரணங்களுக்கு எதிராகவும், போதை, சாதிவெறி, மதவெறிக்கு எதிராகவும், அமோனியா கசிவு பலியான தொழிலாளர்களுக்கு நீதி கேட்டும், தேசத்தின் வளங்களையும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரங்களை குழி தோண்டி புதைக்கும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகிறது.

  1. மதச்சார்பின்மை, ஜனநாயகம், பன்மைத்துவம் ஆகியவற்றை பாதுகாத்திட வலியுறுத்தியும்,
  2. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமான மாதம் ரூ. 26,000 உறுதி செய்வது,
  3. வேலையின்மை பிரச்சனை தீர்வு காண, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, குறிப்பாக, அரசு துறைகளில் ஒப்பந்த வேலைகளை மாற்றி நிரந்தர பணிகளாக மாற்றக் கோரி,
  4. சிறு, குறு, நடுத்தர தொழில்களை பலப்படுத்த மின்கட்டணம் – சொத்துவரிக் குறைப்பு, ஒன்றிய, மாநில அரசுகளின் வரிக்கொள்கைகளை சீரமைப்பது உட்பட வலியுறுத்தி,
  5. கல்வி, மருத்துவம் வணிகமயமாக்கலுக்கு எதிராக அரசின் முழுக் கட்டுப்பாட்டில் செயல்படுத்துவதும், மாநிலப் பட்டியலில் முழுமையாக கொண்டு வரவும்
  6. நிதி போதாமை ஏற்கனவே  கிராமப்புற வேலை உறுதிச்சட்டத்தில் 50 நாட்கள் வேலையையே உறுதி செய்யாத நிலையில் தற்போது விபிஜிராம்ஜி எனும் பெயரில் திட்டத்தில் மாநிலங்கள் 40 சதவிகிதம், ஒன்றிய அரசு 60 சதவிகிதம் என்று நிதி வழங்கலில் வஞ்சிப்பதை கைவிட்டு, மாற்றாக ஆண்டுக்கு 200 நாள் குறைந்தபட்ச கூலி ரூ 700/- என்பதை வழங்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி
  7. விவசாயிகளுக்கான விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து உட்பட விவசாய மூலப் பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்திடவும், குறைந்த பட்ச ஆதார விலையாக உற்பத்தி செலவு + C+50 என்பதை வலியுறுத்தியும், கார்ப்பரேட்டுகளின் தலையீட்டை தடுக்கவும்,
  8. நீர்ப்பாசன திட்டங்களை மேம்படுத்தி குடிநீர், விவசாயத்திற்கான நீர் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்ய நிதி ஓதுக்கீடுகளை அதிகப்படுத்த வலியுறுத்தி,
  9. சமய நிலங்கள், இனாம் நிலங்களில் குடியிருக்கும் மற்றும் விவசாயம் செய்யும் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க,
  10. நகர்ப்புறங்களில் நீண்டகாலம் அரசின் பல்வேறு வகையான நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கிடுவதும், வீடற்றவர்களுக்கு பட்டாவுடன் கூடிய வீட்டுமனை வழங்க கோரியும்,
  11. குடிநீர் விநியோகம் உட்பட அரசு சேவைகளை தனியார்மயமாக்காமல் அரசின் பொறுப்பில் விநியோகம் செய்வது,
  12. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனைகளை நவீனப்படுத்தி தரம் உயர்த்தி 24 மணிநேர செயல்பாட்டை உருவாக்க கோரி,
  13. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும்,  அனைத்துப் பொருட்களும் தரமான முறையில் ரேசன் கடைகளில் வழங்குவது மற்றும் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தவும்,
  14. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு சட்ட வரைவை முன் நிபந்தனைகள் ஏதுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரியும்,
  15. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்தக் கோரியும்,
  16. குழந்தைகள், முதியோர் நலனை பாதுகாக்கவும்,
  17. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஆணவப்படுகொலை தடைச் சட்டத்தை இயற்ற கோரியும், சிறுபான்மையினர் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கவும்,
  18. கடலோர வாழ்மக்களின் உரிமைகளை, வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும்

உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக மதவெறி, சாதியத்தை தங்களின் அரசியல் அதிகார லாபத்திற்காக பயன்படுத்த நினைக்கும் மதவாத, சாதிய சக்திகளுக்கு மாற்றாக உழைப்பாளி மக்களின் வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, தேச நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 26-31 வரை தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தை வெற்றி பெறச் செய்யுமாறும், இதற்கு மக்கள் பேராதரவு தர வேண்டுமென்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3

குறுவை பொய்த்து பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு தருக!

காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. கடந்த ஆண்டு 1.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் வெறும் 500 ஏக்கரில் தான் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இதுதான் நிலைமை. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வருவாய் இன்றி, வேலையின்றி கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்கள், சென்னை உட்பட 22 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகி வருகிறது. நாகை உட்பட சில மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. போதிய மழை இல்லை.

அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறி கொஞ்சம் கூட காவிரியில் தண்ணீரை திறக்க மாட்டோம் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் சிவக்குமார் கூறுகிறார். கர்நாடக அரசு தமிழகத்திற்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கூட அமல்படுத்த முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் கூறியது கண்டனத்திற்குரியது.

மேகேதாட்டில் அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள கர்நாடக மாநில அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையை நிறைவேற்றாமல், நேர்மாறாக கர்நாடக அணை கட்ட தமிழ்நாட்டிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறது. இது தமிழ்நாட்டிற்கான காவிரி உரிமையை மறுக்கிற செயலாகும்.

தமிழகத்திற்கு காலம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது, மேகேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை ஒன்றிய பாஜக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி வினாடிக்கு 3500 கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு வழங்கிட கர்நாடக அரசை  ஒன்றிய அரசு நிர்பந்திக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பொய்த்து வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15000/- ரூபாய் இழப்பீட்டையும், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 10000/- ரூபாயும் மாநில அரசு நிவாரணமாக வழங்கிட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிபந்தனைகள் இன்றி நிறைவேற்றிடக் கோரி..

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை தொகுதி மறு வரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற நிபந்தனைகளின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இந்தியாவில் மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள்  இருப்பினும், அரசியல் முடிவெடுக்கும் அமைப்புகளான நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு ஆணாதிக்க சமூக அமைப்பின் வெளிப்பாடாகவும், பெண்களுக்கு அரசியல் அதிகாரம் மறுக்கப்படுவதன் அடையாளமாகவும் உள்ளது.

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறு வரையறை ஆகியவற்றுடன் திட்டமிட்டு இணைத்த பிஜேபி அரசு, நடைமுறைககு கொண்டு வராமல்  காலம் தாழ்த்தி வருகிறது. பெண்களின் நீண்டகால போராட்டத்தின் விளைவாக கிடைத்த உரிமையை காலவரையறையின்றி தள்ளிப்போடுவதற்கான அரசியல் சூழ்ச்சியாகவே இது அமைந்துள்ளது.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை தொகுதி மறு வரையறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து போராடி வருகின்றன. குறிப்பாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே தினந்தோறும் தர்ணா போராட்டங்களை நடத்தி, உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி வருகின்றன. ஒன்றிய பிஜேபி அரசாங்கம்  பெண்களுக்கு அதிகாரப் பகிர்வை மறுப்பதை ஏற்க முடியாது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடக்க காலம் முதலே பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதிலும், அதை 50 சதவீதமாக உயர்த்துவதிலும் இடதுசாரி இயக்கங்கள் முன்னணிப் பங்காற்றியுள்ளன.

பெண்களுக்கான அரசியல் அதிகாரம்  என்பது சமூக நீதிக்கும், ஜனநாயகத்தின் விரிவாக்கத்திற்கும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதற்குமான அடிப்படை அரசியல் நடவடிக்கையாகும்.

எனவே, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை தொகுதி மறு வரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக அமல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென  தமிழ்நாடு அரசை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் சாதி மக்களுக்கு வழங்கிடக் கோரி..

1892ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் சுமார் 12,61,013 ஏக்கர் விளை நிலங்களை  சுமார் 2604 கிராமங்களை சேர்ந்த பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கியது.

134 ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்ட இந்த பஞ்சமி நிலங்களை பட்டியல் சமூகம் அல்லாதவர்களுக்கு கை மாற்ற முடியாது; பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ முடியும்; மற்ற சமூகத்தவருக்கு கை மாற்றம் செய்யப்பட்டு இருந்தால் அந்த நிலத்தை அரசு பறிமுதல் செய்யும், இழப்பீடாக எதையும் பெற முடியாது என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவாய்த்துறை பதிவேட்டில் பஞ்சமி நிலங்கள் என தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், 1960ல் கூட்டுறவு முறையில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் பட்டியல் சமூக மக்களுக்கு கூடுதலான  நிலம் வழங்கப்பட்டுள்ளது.

2011ல் தமிழ்நாடு அரசால் பஞ்சமி நிலம் மீட்புக்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் வழங்கியுள்ள தீர்ப்புகளில், பஞ்சமி நிலங்களை வைத்துள்ள பட்டியல் சாதி அல்லாதவர்களின் பட்டா  ரத்து செய்யப்படும், நிபந்தனைகளை மீறி விற்கப்பட்ட நிலங்களை அரசு மீட்கலாம், மீட்கப்பட்ட நிலங்கள் தகுதியான ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும், பஞ்சமி நில பரிமாற்றங்களை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளில் ஆக்கிரமிப்பாளர்கள் உரிமைகோர முடியாது என்று ஏற்கனவே நடைமுறையில் இருந்த சட்ட விதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும், தமிழ்நாடு முழுவதும் பஞ்சமி நிலங்கள் பல ஆண்டு காலமாக சட்ட விதிகளை மீறி பட்டியல் சாதி அல்லாத நபர்களால் வீட்டு மனைகளாக, பள்ளிக்கூடங்களாக, குடியிருப்புகளாக, மற்றும் அரசின் தேவைகளுக்காக என்ற வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாக பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் சமூக மக்களுக்கு கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. மாநில அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில், பஞ்சமி நிலங்களை கண்டறிந்து களப் போராட்டங்களை மேற்கொண்டு நிலங்களை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6

டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தொடுக்கப்படும் வழக்குகள், கைதுகள், பழிவாங்கல்களைக் கண்டித்து..

டெல்லியில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வதோடு, அவர்களின் வீடுகள் மற்றும் கல்வி வளாகங்களுக்கு சென்று கைது செய்யும் நடவடிக்கைகளில் டெல்லி காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்திய மாணவர் சங்க  தலைவர்களில் ஒருவரான அய்ஷே கோஷ் அவர்களை கைது செய்யும் நோக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி பவனுக்குள் டெல்லி காவல்துறை அத்துமீறி நுழைந்திருக்கிறது.

நீட் முறைகேடுகளை தடுக்க வேண்டும், தேசிய தேர்வு முகமையை முற்றாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை பழிவாங்குவது, அவர்களின் எதிர்காலத்தை பறிப்பது உள்ளிட்ட நோக்கத்தோடு செயல்படும் டெல்லி காவல்துறை நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

போராட்டங்கள் நடைபெற்ற வீதிகளில் ஆங்காங்கே இருந்த கண்காணிப்பு கேமராக்கள், மாணவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் வாயிலாக மாணவர்களை கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. டெல்லி காவல் துறையினுடைய உளவுப் பிரிவு மாணவர்களை கைது செய்வதற்காக பிரத்தியேக  செயற்கை நுண்ணறிவு கருவியையும் பயன்படுத்துகிறது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களில் இதுவரை சுமார் 2,800 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறையின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகள் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளையும், ஜனநாயக மாண்புகளையும் மீறுகிற நடவடிக்கையாகும்.  மேலும் மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய போது ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டா போராடும் மாணவர்கள் மீது எந்தவித வழக்குகளோ, பழிவாங்கும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாது என அளித்த வாக்குறுதியை மீறும் வகையில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் உள்ளது.

டெல்லி காவல்துறையின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, பேச்சுரிமை கருத்துரிமை மற்றும் போராடுகிற உரிமைகளை பறிப்பது,  சட்ட மற்றும் ஜனநாயக மாண்புகளை மீறுவது உள்ளிட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மற்றும் டெல்லி காவல்துறை முற்றாக கைவிட வேண்டுமெனவும், மேலும் இதே காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களுக்கு பிறகும் சில இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படுவது தவறான நடவடிக்கை. இது கைவிடப்பட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7

கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி..

கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாகும். உலகம் முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். எனினும் மக்கள் வந்து செல்ல போதிய ரயில் வசதி இல்லாமல் உள்ளது. எனவே, அரசு ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் பத்மநாபபுரம் கோட்டை, உதயகிரி கோட்டை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, மாத்தூர் தொட்டிப்பாலம், காளிக்கேசம், உலக்கையருவி, சொத்தவிளை முட்டம் கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உரிய வசதிகளை ஏற்படுத்திடவும் அரசு நடவடிக்கை எடுத்திடவும், அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் சுற்றுலாத் துறையை மேம்படுத்திட உரிய நிதியை ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுத்திடவும் அரசு முன்வர வேண்டும்.

குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தினால் தனது சொந்த நிலங்களை அவசர தேவைகளுக்கு விற்கவும், வாங்கவும் முடியாத நிலையும், அரசின் அனுமதி பெற்றே நிலங்களை விற்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளன. அரசின் அனுமதி பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு முழு விலக்கு அளித்திட அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மார்த்தாண்டம் தேன், ஈத்தாமொழி தேங்காய், மலையோர மட்டி வாழைப்பழம் ஆகிய புவிசார் குறியீடு பெற்ற விவசாய பொருட்களின் உற்பத்தி, உரிய விலை நிர்ணயம், அரசு கொள்முதல் செய்யும் சந்தை ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை ஏற்படுத்திட வேண்டும். விவசாய விளை பொருட்கள் மற்றும் பழங்கள் எளிதில் கெட்டு விடாமல் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதன கிடங்குகளை ஏற்படுத்திட வேண்டும்.

மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏழை பெண் தொழிலாளர்கள் பயன்பெற்று வந்த முந்திரி தொழிலுக்கு ஒன்றிய அரசின் தவறான வரிவிதிப்பு கொள்கையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் கச்சா முந்திரியை இறக்குமதி செய்வதுடன் கேரள மாநிலத்தைப் போன்று முந்திரிக்கழகம் அமைத்து பாதுகாத்திட ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 71 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரை பகுதி உள்ளது. இதில் 48 கிராமங்களில் அடர்த்தியாக வசித்து வரும் பல லட்சம் மீனவர்களில் பெரும்பாலான மீனவர்கள் கடலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் திடீரென காணாமல் போவதும், பல நாட்களாக கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையும் இருந்து வருகிறது. மேலும், விபத்துக்கள் ஏற்பட்டு மீனவர்கள் மரணம் அடையும் நிலையும் உள்ளது. இந்நிலையில் காணாமல் போகும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்திட நிரந்தர ஹெலிகாப்டர் மற்றும் கடல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திட அரசுகள் உரிய நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும்.

மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திட கனரக ரப்பர் ஆலை, தோவாளை சென்ட் ஆலை, தமிழக அரசு அறிவித்த டைடல் பார்க் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்,  ராணித்தோட்டம், மீனாட்சிபுரம் பணிமனைகளில் அரசு பேருந்துகளுக்கு கூண்டுக்கட்டும் பிரிவை மீண்டும் செயல்படுத்திட வேண்டும், பாரம்பரியமான சிறு, குறு தொழில்களை பாதுகாத்திடும் வகையில் மானியத்துடன் கூடிய கடன்களை அரசுகள் வழங்கிட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைத்திடவும், புற்றுநோய் சிகிச்சைக்கான உயர் மருத்துவ உபகரணங்களை அமைத்திடவும், இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்திடவும் ஒன்றிய அரசு 106 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகளாகியும் இதுவரையிலும் அமைக்கப்படாமல் இருந்து வரும் நிலையில் இ.எஸ்.ஐ பல்நோக்கு மருத்துவமனையை உடனடியாக அமைத்திட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டுள்ள நலவாரியங்களில் பதிவு செய்துள்ள கட்டுமானம் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட நலவாரிய பணபலன் தொடர்ச்சியில்லாத EPF, ESI கணக்கை காரணம் காட்டி மறுக்கப்படுகிறது. எனவே, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் பண்பலன்கள் முறையாகக் கிடைத்திட தமிழக  அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8

பெரம்பலூர் எம்.ஆர்.எப். டயர் தொழிலாளர் வேலை நிறுத்தம் : சுமூக தீர்வு காண தமிழக அரசு தலையிட வேண்டும் !

                பெரம்பலூர் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 03.07.2026 முதல் 736 நிரந்தர தொழிலாளர்கள் 30 நாட்களாக சட்டப்பூர்வ வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 34 மாதங்களாக ஊதிய உயர்வு கோரிக்கையின் மீது பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் எம்.ஆர்.எப் நிர்வாகம் தொழிற்சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வந்தது.

                நிர்வாகம் கோரிய டயர் உற்பத்தி இலக்குகளை தொழிலாளர்கள் நிறைவேற்றி வந்த போதும் உண்மைக்கு மாறான காரணங்களை கூறி பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்தி வந்தது. தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் முதல்கட்டமாக 44 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்தது. வேலை நிறுத்த காலத்தில் மேலும் 26 தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

                ஊதிய உயர்வுக்காக போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கவும், நிர்வாகத்தால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட 70 தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகளைத் திரும்பப் பெறவும் தமிழக அரசு தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 9

அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறைக்கு தீர்வு – ஆட்குறைப்பு கைவிடல் – பணி நிரந்தரம் – நிரந்தர நியமனங்களை வலியுறுத்தி..

அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு 7 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து  210 செவிலியர் பணியிடங்களை வேறு  மருத்துவமனைகளுக்கு பணி நிரவல் செய்யும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் இதுபோன்று பொது சுகாதார துறையிலிருந்தும்,  அரசு மருத்துவமனைகளிலிருந்தும் 292 பணியிடங்களை மறு சீரமைப்பு என்ற பெயரில் ஆட்குறைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் புதிதாக தொடங்கப்படும் 6 செவிலியர் கல்லூரிகளிலும் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களையே பணியமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 6500 செவிலியர்கள் நிரந்தர பணியிடங்கள் இல்லாத காரணத்தால் தொகுப்பூதிய முறையிலேயே 9 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஆட்குறைப்பு  நடவடிக்கையால் அவர்களின் பணி நிரந்தரம் கேள்விக்குறியாகும். மேலும், இந்த நடவடிக்கை 5 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணி செய்யும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக உள்ளது.

தமிழ்நாடு அரசு இந்த ஆட்குறைப்பு அரசாணை 204ஐ ரத்து செய்து தேவைக்கேற்ப புதிய நிரந்தர பணியிடங்களை தோற்றுவிப்பதுடன் அரசு மருத்துவமனைகளில், அரசு செவிலியர் கல்லூரிகளில் நிரந்தர பணியிடங்களில் மட்டுமே ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

(பெ.சண்முகம்)

மாநில செயலாளர்

Leave a Reply