இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் தலைமையேற்றுள்ளார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் முதள் நாளான இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;
தீர்மானம் 1 :-
தொடரும் காவல்நிலைய மரணங்கள்: கொலை வழக்கு பதிவு செய்து – கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதியின் மரணமும், நாகை மாவட்டத்தில் சிறைக் கைதியின் மரணமும் அதிர்ச்சி தரும் செய்திகளாக வந்துள்ளன. இதோடு சேர்த்து, கடந்த ஓராண்டில் 8 மரணங்கள் நடந்திருக்கும் நிலையில், இப்பிரச்சனையில் தீவிரமான நடவடிக்கை தேவை என்று சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்தில், கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அப்பு (எ) ராஜசேகர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லை. விசாரணையின் பேரால் காவல் நிலையத்தில் வதைக்கப்பட்டு, 12 ஆம் தேதியன்று மரணமடைந்தார்.
திட்டச்சேரியை அடுத்துள்ள பனங்காட்டூரில் வசித்து வந்த சிவசுப்பிரமணியன், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கைது செய்யப்பட்டு, சிறைச் சாலையில் வதைக்கப்பட்டுள்ளார். 3 நாட்களுக்கு பின் திடீரென உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு நிகழ்வுகளோடு சேர்த்து, கடந்த ஓராண்டில் மட்டும் 8 காவல் நிலைய, சிறைச்சாலை மரணங்கள் நடந்திருப்பதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலே குறிப்பிட்ட கொடுங்கையூர் மரண சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடந்திருக்கிறது. முழுமையான உடற்கூராய்விற்கு உத்தரவிடுவதுடன், கொலை வழக்கு பதிய வேண்டும்.
சிறைக் கைதி சிவசுப்பிரமணியன் மரணம் தொடர்பாக நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சன்மிஹா விசாரணை நடத்தியுள்ளார். இந்த வழக்கிலும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றம் இழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட இரு குடும்பங்களுக்கும் தலா ரூ. 25 லட்சம் இழப்பீடாக வழங்கிட வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
முதலமைச்சர் மற்றும் காவல்துறை டிஜிபி பலமுறை வலியுறுத்திய பிறகும், காவல் நிலைய வன்முறைகள் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
காவல் நிலையத்தில், விசாரணை நடைமுறைகளை முறைப்படுத்த உயர் அதிகாரிகள் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். மனித உரிமையை பாதிக்காத நடைமுறைகள் குறித்த பயிற்சியை அனைத்து காவலர்களுக்கும் வழங்கிட வேண்டும். சிறைச்சாலை நடைமுறைகளை ஆய்வு செய்து மாற்றியமைக்க வேண்டும்.
மேலும், குற்றம் இழைக்கும் காவலர்களுக்கு கடுமையான தண்டனையை விரைவாக வழங்குவதுடன், காவல் நிலையத்திலோ, சிறைச்சாலையிலோ இனியும் இதுபோன்ற மரணங்கள் நடக்காமல் தடுக்கும் விதத்தில் அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2:-
தஞ்சையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியர் படுகொலை! சிபிஐ(எம்) கண்டனம்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்யா, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வந்தவாசி பகுதியைச் சேர்ந்த மோகன் ஆகியோரின் காதல் திருமணம் ஒரு வாரத்துக்கு முன்புதான் நடந்தது. நேற்றைய தினம் சரண்யாவின் சகோதரனும், அவர் மைத்துனனும் புது மண தம்பதியரை நயமாக பேசி வீட்டுக்கு வரவழைத்து கொடூரமாக இருவரையும் படுகொலை செய்துள்ளனர். இக்கோர படுகொலையை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த படுகொலையில் கூட்டு சதிக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்து உரிய முறையில் வழக்கு நடத்திட வேண்டுமெனவும், மோகனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், மேலும், சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்து அரசு பரப்புரை செய்ய வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.