இந்தியாவின், தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் ‘அக்னிபத்’ திட்டத்தினை, சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடுமையாக நிராகரிக்கிறது.
நான்கு ஆண்டுகளுக்கு, ராணுவ வீரர்களை ‘ஒப்பந்த அடிப்படையில்’ பணியமர்த்துவதன் வழியாக தொழில்முறை ஆயுதப் படைகளை மேம்படுத்த முடியாது.
இந்த திட்டம், ஓய்வூதியப் பணத்தை சேமிப்பதற்காக, நம்முடைய ராணுவ படைகளின் தரத்திலும், செயல் திறனிலும் சமரசம் செய்கிறது.
இந்திய ராணுவத்தில், கடந்த 2 ஆண்டுகளாக ஆள் சேர்ப்பே நடக்கவில்லை. வழக்கமான வழிமுறையில் ஆயுதப் படைகளில் வீரர்களை சேர்ப்பதற்கு பதிலாக இந்த திட்டத்தின் வழியாக சேர்க்கப்படும் ஒப்பந்த படை வீரர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின் எந்த வேலைவாய்ப்பும் இல்லாமல் ஆக்கப்படுகின்றனர்.
இது, அவர்களை தனியார் ஆயுதப் படைகளுக்கு சேவையாற்றச் செய்திடும் அபாயமான சூழ்நிலைமையை உருவாக்கும். ஏற்கனவே கடுமையான அழுத்தத்தில் உள்ள சமூக கட்டமைப்பில் ஆபத்தான தாக்கங்களை இது ஏற்படுத்திடும்.
உச்சபட்ச தியாகத்தை செய்யக் கோரும் ஒரு பணியை, எந்தவித வேலை பாதுகாப்பும் இல்லாமல் மேற்கொள்ள நமது இளைஞர்களை அழைப்பதே பெருங்குற்றம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் தன்னெழுச்சியான போராட்டங்கள், இந்த திட்டத்திற்கு எதிராக எழுந்திருக்கும் கோபத்தை எடுத்துக்காட்டுகிறது.
‘அக்னிபத்’ திட்டத்தினை உடனடியாக கைவிடுவதுடன், ஆயுதப் படைகளில் வழக்கமான முறைகளில் ஆள் சேர்ப்பை உடனடியாக தொடங்கிட வேண்டுமென சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கோருகிறது.