அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வைத்திருக்கின்ற கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென கடந்த 27.01.2025 அன்று மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி இளந்திரையன் அவர்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 21.04.2025 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி, உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளை பிரதிபலிக்கின்ற அடையாள சின்னமாகும். அதை அகற்ற சொல்வது ஜனநாயக மீறலாகும் என குறிப்பிட்டு மேற்கண்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் 25.04.2025 அன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம், கோடை விடுமுறைக்கு பிறகு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது. அதன்படி இன்று (05.06.2025) நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் கொண்ட அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை விசாரணைக்கு ஏற்று சிறப்பு அனுமதி (டுநயஎந ஞநவவைiடிn) மனுவை அனுமதித்து உத்தரவிட்டது.
மேலும், அனைத்துக் கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டுமென ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தலைமை செயலாளர் கொடிக் கம்பங்களை அகற்றி தீர்ப்பை நிறைவேற்றிவிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்ததால், தலைமை செயலாளரை ஒரு தரப்பினராக வழக்கில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிமன்றம், இடைக்கால தடை உத்தரவு குறித்து நாளைக்கே (06.06.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்.ஜிஆர் பிரசாத் ஆஜராகி வாதாடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி மற்றும் ஜூனியர் வழக்கறிஞர்கள் டி.அகத்தியா, எஸ்.அருண்குமார், எஸ்.சிவசேகர், எம்.கிஷோர், ஜே.கணேஷ், ஏ.ஆர்.அகிலன், ஆர்.ஜோஸ்வா, கே.மும்தா, கே.சுந்தரராஜ், எல்.பிரதாப், ஆர்.இளவரசன், ஆர்.சிவபாரதி, ஜி.எம்.ஸ்டாலின் ஆகியோர் ஆஜராகினர்.
(பெ.சண்முகம்)
மாநில செயலாளர்







