ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுற்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தனது பணிக்காலத்தில் சீரிய முறையில் நீதித்துறையில் பணியாற்றியவர் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் ஆவார். பணி ஓய்வுக்காலத்தில் பல்வேறு குழுக்களுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்றில் இடம் பெறத்தக்க மிக முக்கியமான பரிந்துரைகளை வழங்கியவர். குறிப்பாக, தலித் அருந்ததியர் சமூகப் பிரிவினர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் 2006ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. மாநிலம் முழுவதும் சிறப்பு மாநாடுகளை நடத்தியதோடு தலைநகர் சென்னையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற கோரிக்கைப் பேரணியையும் நடத்தியது. அப்போதைய முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டவுடன் அதற்கு செயல்வடிவம் தருவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவை பொறுப்பேற்று திறம்பட நடத்தியவர். அக்குழுவின் அறிக்கையின்படியே அருந்ததிய மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு சட்டப்படியாக நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக பொறுப்பேற்று அறிக்கை தயாரித்து அளித்தவர் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள். இத்தகைய பங்களிப்புகள் செய்திட்ட ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்தனம் அவர்களின் மறைவு நீதித்துறைக்கும், சமூக நீதிக்காக போராடும் ஜனநாயக இயக்கங்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்தி அறிக்கை > ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
6 June 2025656 views
posted on







