மாநில செயற்குழு

மதவெறி கலவரங்களைத் தூண்டுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்திடுக!

# party

திருவொற்றியூர், தாங்கல் பீர்பயில்வான் பகுதியில் வசிக்கும் அலி என்பவர் மாநகராட்சியில் உரிமம் பெற்று இறைச்சி கடை நடத்தி வருகிறார்.  பாரத் முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த சிவாஜியும், மற்றும் சிலரும் 16.7.2026 அன்று இரவு 11.30 மணிக்கு அலியின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். மாடுகளை வெட்டக் கூடாது என அச்சுறுத்தலும் செய்திருக்கிறார்கள். இவர்களுடன் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சில காவலர்களும் உடன் சென்றுள்ளனர். அவர்களது முன்னிலையில் தான் அச்சுறுத்தலும்,  கொலை மிரட்டலும், மதவெறி நடவடிக்கைகளும் நடந்துள்ளன. இது மதவெறி கலவரங்களைத்  தூண்டுவதற்கான திட்டமிட்ட  முயற்சியே என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இது மிகுந்த கண்டனத்துக்குரியது.

சிவாஜி உள்ளிட்ட இதே நபர்கள் சில மாதங்களுக்கு முன் கார்கில் நகர் பகுதியில் மதவெறி கலவரத்தை தூண்டக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு பணம் வாங்கியதாகவும் தகவல் உள்ளது. இதன்மூலம் மதக்கலவரத்தைத் தூண்டி பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையில் இவர்கள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட அலி அவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் தெற்கு பகுதி குழுவும் புகார் அளித்துள்ளனர். சங் பரிவார அமைப்புகள் நாடு முழுவதும் செய்யும் கலவர நடவடிக்கைகளைத் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் துவங்கியுள்ளனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட குழுவும், அப்பகுதியின் பல்வேறு அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள நீதிக்கான போராட்டக் குழுவும் மத மோதலைத் தூண்டிவிடும் குற்றவாளிகள் மீதும், அதற்குத் துணை போன காவலர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியுடன் குரல் கொடுத்து வருகின்றனர்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் நிலைநாட்டும் பொறுப்பும் கடமையும் உள்ள காவல்துறை, ஒருசார்பாக குற்றவாளிகள் பக்கம் நிற்பது சமூகத்தில் ஆபத்தான பல விளைவுகளை ஏற்படுத்தும்.

முதல் தகவல் அறிக்கையில், குற்றவாளிகள் மீது  பிரச்சனையின் தீவிரத்துக்கு ஏற்ப, BNS 308(4) போன்ற  சட்டப் பிரிவுகள் போடப்படவில்லை. ஸ்தல காவல்துறை மூலம் நீதி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, காவல்துறையின் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, குற்றவாளிகள் மீதும், அவர்களுக்கு துணையாக செயல்பட்ட காவலர்கள் மீதும்  சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்

Leave a Reply