இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2022 ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாள் கூட்டமான இன்று (22.7.2022) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், திட்டமிடப்பட்ட இயக்கங்களும் பின்வருமாறு:
தீர்மானம் – 1
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க!
அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதம் விதிக்கப்பட்டு அமலுக்கு வந்து விட்டது. ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கடுமையாக சீர்குலைக்கும். இது பேக் செய்யப்படாத, உதிரியாக வாங்குகிற பொருட்களுக்கு அமலாகாது என்ற நிதி அமைச்சர் விளக்கம் எடுபடவில்லை. கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்குவதும், உழைப்பாளி மக்களின் வாழ்வை ஒழித்து கட்டுவதுமான நவீன தாராளமய பாதையில் மோடி அரசு மேலும் மேலும் தீவிரமாக முன்னேறி செல்வதன் விளைவே இது. இச்சூழலில் ஏழை குடும்பங்களின் வாழ்வை பாதுகாக்க, 2022 ஜூலை 29ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட சிபிஐ (எம்) மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இவ்வியக்கத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டக்குரல் எழுப்பிட மாநிலக்குழு வேண்டுகிறது.
தீர்மானம் – 2
குடும்பத்தில் வன்முறை தடுப்போம், சமத்துவம் படைப்போம் – விழிப்புணர்வு பிரச்சாரம் :
சென்னையில் நடத்தப்பட்ட குடும்ப வன்முறை எதிர்ப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 2022 ஆகஸ்ட் 1-5 தேதிகளில், ஏதேனும் இரண்டு நாட்கள், வீடு வீடாகவும், கல்வி நிலையங்கள், பொது இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவது என சிபிஐ (எம்) மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. சமத்துவம், ஜனநாயகம் மிக்க ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்க வலியுறுத்தப்படும்.
தீர்மானம் – 3
75வது சுதந்திர தின நிகழ்வு:
கட்சியின் மத்தியக்குழு முடிவின் அடிப்படையில், 2022 ஆகஸ்ட் 9-15 ஆகிய தேதிகளில் மாவட்டங்களில் தேச விடுதலை போராட்ட விழுமியங்களை நினைவு படுத்தி, அரசியல் சாசனத்தின் சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக அம்சங்களை உயர்த்தி பிடிக்கும் நிகழ்ச்சிகள் நடத்திட சிபிஐ (எம்) மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. அதனையொட்டி 2022 ஆகஸ்ட் 15ம் தேதி அன்று கட்சியின் அனைத்து கிளைகளும் தேசிய கொடியேற்றி, அரசியல் சாசனத்தின் முகவுரையின் பேரில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்துவது எனவும் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
தீர்மானம் – 4
மோடி அரசின் 8 ஆண்டு கொடுமைகளைக் கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம்:
மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில், கடந்த 8 ஆண்டுகளில் பெரும்பகுதி மக்களின் மீது கடும் பொருளாதார சுமைகளை ஏற்றி வைத்திருப்பது, உச்சகட்ட வேலையின்மை, பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு உள்ளிட்டு அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் மீது செங்குத்தான விலை உயர்வு, பொதுத்துறை தனியார்மயம், தொழிலாளர், தொழிற்சங்க உரிமை பறிப்பு, விவசாயிகள் மீதான கடன் சுமை, சிறுபான்மையினர் மீது தாக்குதல், கருப்பு சட்டங்கள், ஊடகங்களுக்கு அச்சுறுத்தல், பாசிச தன்மை கொண்ட எதேச்சாதிகார நடவடிக்கைகள், பெண்கள், குழந்தைகள் மீது அதிகரித்து வரும் வன்முறை, பட்டியலின-பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள், வாழ்வாதாரம் பறிப்பு உள்ளிட்ட கார்ப்பரேட் ஆதரவு மதவெறி கொள்கைகளை அம்பலப்படுத்தி, மாற்று கொள்கைகளை முன்வைத்து 2022 ஆகஸ்ட் 25-31 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்திட மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
தீர்மானம் – 5
தமிழக அரசின் உத்தேச மின்கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தி:
தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும் என்று மாநில மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த மானியத்தை விட்டுத்தர விரும்புபவர்கள் தாமாக முன்வந்து விட்டுத்தரலாம் என்று கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் மின்சார கட்டணத்திற்கான மானியம் தொடருமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின்கட்டண உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும், வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பு மேலும் கூடுதல் சுமையாக அமையும். எனவே, தமிழக அரசு உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
மேலும், தமிழக அரசு உத்தேசித்துள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மக்களை அணி திரட்டி மின்வாரிய தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் பெருந்திரள் மனு கொடுக்கும் இயக்கம் நடத்திட சிபிஐ (எம்) மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
தீர்மானம் – 6
குறுவை சாகுபடி நெல்பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுத்திடுக!
நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்துள்ள நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய இதுவரை அரசின் சார்பில் அறிவிப்பு வராமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு இதேபோன்ற நிலை நீடித்ததால் குறுவை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இம்மாதம் 31ந் தேதிக்குள் குறுவை பயிருக்கான காப்பீடு செய்ய வேண்டுமென்று ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், காப்பீடு செய்வதற்கான நிறுவனம் எது என்று தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கடந்த 11.7.2022 அன்று தமிழக முதல்வரிடமே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இரண்டு நாட்களில் பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பு வரும் என தமிழக அரசின் சார்பில் உறுதியளித்திருந்த நிலையில் இதுவரை அறிவிப்பு இல்லாமல் உள்ளது ஏற்புடையதில்லை.
எனவே, தமிழக அரசு குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். எந்த நிறுவனமும் காப்பீடு பெற வரவில்லையென்றால் தமிழக அரசே தனியாக பயிர் காப்பீடு செய்வதற்கான நிறுவனத்தை துவக்கிட வேண்டும். மேலும் குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காலத்தை 2022 ஆகஸ்ட் 15ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட வேண்டுமென தமிழக அரசை சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் – 7
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்ட நிதியை கட்டுமானப் பணிக்கு ஒதுக்குவதை கைவிடுக!
வறுமை ஒழிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு கடந்த 15-ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வேலைத்திட்டத்திற்கு, ஆண்டிற்கு குடும்பத்திற்கு 100 நபர்கள் வேலை வழங்கிட வேண்டுமென்ற சட்டவிதியை கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசும் – தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் படிப்படியாகச் சிதைத்தது. கடந்த ஆண்டு ஒன்றிய அரசு ரூ. 98,000 கோடி ஒதுக்கியது. ஆனால் நடப்பு ஆண்டிற்கு ரூ.73,000 கோடியாக குறைத்ததோடு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு வைத்துள்ள சம்பள பாக்கி ரூ.12,000 கோடியையும் இதிலிருந்து எடுத்து வழங்கிட வேண்டுமென அறிவித்துள்ளது. இதுபோன்று ஒன்றிய பாஜக அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீட்டை குறைப்பதால் ஆண்டுக்கு 30 நாள், 40 நாள் மட்டுமே இத்திட்டத்தில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்ட விதிகளுக்குப் புறம்பாக, சட்டமன்றத்தில் அவை விதி 110ன் கீழ் அறிவிப்பு என்ற பெயரிலும், பயனாளிகளுக்கு கூலியாக கிடைக்க வேண்டிய நிதியை கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கி ஆளுங்கட்சி ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்டது. ரூ.4000 கோடி முறைகேடு நடைபெற்றதை அரசின் சமூகத்தணிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த முறைகேடுகள் சீர்செய்யப்பட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் தேர்தல் காலத்தில் அறிவித்தார். கிராமப்புற ஏழை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வேலையும் – கூலியும், கூடுதலாக 50 நாள் வேலையும் கிடைக்கும் என இருந்தனர். ஆனால் கடந்த காலத்தில் திட்ட அமலாக்கத்தில் இருந்த குறைபாடுகள் தொடர்வதுடன் வேலையும், தினக்கூலியும் முழுமையாக கிடைக்கவில்லை.
அத்தோடு கடந்தகால அரசைப் போலவே அவை விதி 110-ன்படி, 3-அரசாணைகள் மூலமாக, திட்டத்தின் பயனாளிகளுக்கு கூலியாக கிடைக்க வேண்டிய நிதி ரூ. 4000 கோடியை ஊரக வேலைத்திட்டத்தில் பொருள்கள் செலவினம் (Material Cost) என்ற பெயரில், வேறு துறைகளின் கட்டுமானப் பணிகளுக்கு மடைமாற்றம் செய்யும் நிலை தொடர்கிறது. தற்போது கூட தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை அரசாணை எண்.62 மூலமாக, ஊரக வேலைத்திட்ட நிதி ரூ.3006 கோடியை கப்பி சாலை அமைப்பது உள்ளிட்டப் பணிகளுக்கு எடுத்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆகவே, தமிழக முதலமைச்சர், ஊரக வேலைத்திட்ட அமலாக்கத்தில் உடன் தலையிட்டு, முழுமையாக வேலை, கூலி கிடைக்கவும், தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட கூடுதல் வேலை நாள் 50-ஐயும் சேர்த்து 150 நாள் வேலை வழங்கிடவும், கட்டுமானப் பணிகளுக்கு ஊரக வேலைத் திட்ட நிதியைப் பயன்படுத்துவதை கைவிடவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 8
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீரை நீர்நிலைகளுக்கு வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிடுக!
கர்நாடகாவில் பெய்த மழையினால் இவ்வாண்டும் தினசரி 1.25 லட்சம் கன அடிக்கும் மேல் உபரி நீர் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. காவிரியில் மழைக்காலங்களில் ஓடும் உபரி நீரை நீரேற்றம் மூலம் கொண்டு வந்து தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (21.07.2022) தர்மபுரி மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய வந்த மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்கள், இத்திட்டம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தருமபுரி மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் அறிவிப்பை சிபிஐ (எம்) மாநிலக்குழு வரவேற்பதுடன், உடனடியாக ஆய்வு செய்து இத்திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.
மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணையின் நீரை நீரேற்றம் மூலம் மொரப்பூர், கடத்தூர் பகுதி ஏரிகளில் நிரப்ப தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டுமெனவும், அதுபோல் மாவட்டத்தில் ஓடும் சின்னாறு, வேப்படி ஆறு உள்ளிட்ட சிற்றாறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டுமெனவும், தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செனாக்கல் அணைக்கட்டு திட்டத்தையும் நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் – 9
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் எடுக்கும் உத்தரவை திரும்ப பெறுக!
கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டு வருவாய் கிராமங்களில் 1144 ஹெக்டேர் நில பரப்பில் கனிமவள தாதுக்களை IREL மூலம் எடுத்திட ஒன்றிய பாஜக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
குறிப்பாக, கீழ்மிடாலம் ஏ கிராமத்தில் 75 சர்வேயில் 204.6 ஹெக்டேர் நிலத்திலும், மிடாலம் பி கிராமத்தில் 108 சர்வேயில் 202.96 ஹெக்டேர் நிலத்திலும், இணையம் புத்தன்துறை கிராமத்தில் 91 சர்வேயில் 137.5 ஹெக்டேர் நிலத்திலும், ஏழுதேசம் ஏ கிராமத்தில் 23 சர்வேயில் 41.10 ஹெக்டேர் நிலத்திலும், ஏழுதேசம் பி கிராமத்தில் 34 சர்வேயில் 82.90 ஹெக்டேர் நிலத்திலும், கொல்லங்கோடு ஏ கிராமத்தில் 11 சர்வேயில் 171.77 ஹெக்டேர் நிலத்திலும், கொல்லங்கோடு பி கிராமத்தில் 68 சர்வேயில் 171.77 ஹெக்டேர் நிலத்திலும், தாது மணல் எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் 80 ஹெக்டேர் புறம்போக்கு நிலமாகவும், 1064 ஹெக்டேர் நிலம் பட்டா நிலமாகவும் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான வீடுகளும், நீர் நிலைகளும், விளை நிலங்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
எனவே, மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.