செய்தி அறிக்கைபத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்தியாவின் இருள் அகற்றுவோம்! மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

1660714336376கள்ளக்குறிச்சி: உண்மை அறியும் குழுவின் அறிக்கை வெளியிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு.

ஆக 20 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் பிரச்சரம் நடத்த
சிபிஐ (எம்) அறைகூவல்!
5000 குழுக்கள் 50 லட்சம் வீடுகளை சந்திக்கவுள்ளனர்!!

சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை!

இந்தியா தனது சுதந்திரத்தின் பவள விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சுதந்திர நாளைக் கொண்டாடுங்கள் என வேண்டுகோள் விடுத்து கொண்டே, மோடி தலைமையிலான பாஜக அரசு, சுதந்திர போராட்டத்தின் மரபுகளை, விழுமியங்களை முற்றாக சிதைத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களான ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்மைத்துவம், கூட்டாட்சி, பொருளாதார சுயசார்பு ஆகிய அனைத்தும் மோடி ஆட்சியில் தகர்க்கப்படுவதோடு, ஒரு முழுவீச்சிலான எதேச்சாதிகார பாதையில் பயணப்படுகிறது . மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிற போது பெரும் ஏமாற்றங்கள் நிறைந்ததாகவும், எட்டு ஆண்டு கால ஆட்சியில் எட்டாத இலக்குகளைக் கொண்டதாகவும் கடந்து போயிருக்கிறது என்பதே உண்மை. ஒட்டுமொத்தத்தில் மோடி அரசு தொழில், விவசாயம், சேவைத்துறை எனஅனைத்து துறைகளிலும் படுதோல்வியடைந்துள்ளது.

2014ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை உறுதி என்றார். ஆனால் 20-24 வயதினர் மத்தியில் வேலையின்மை விகிதம் 42 சதவிகிதம் எனும் அளவை தொட்டு விட்டதாகவும், 90 கோடி இந்திய உழைக்கும் மக்களில் சரிபாதி பேருக்கு முறையான வேலை கிடைக்காததால் வேலை தேடுவதையே நிறுத்தி விடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் லட்சக்கணக்கான சிறு-குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் பணிபுரிந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை, மானியம் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்க துடித்து வருகின்றனர். இதை நம்பி வாழும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து தங்களது கிராமத்தை விட்டு நகர்ப்புறத்தை நோக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டு தனியார் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருகின்றன. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

கருப்பு பணத்தை ஒழிப்பேன் என வாய்ஜம்பம் அடித்தார் மோடி. ஆனால் அவர் ஆட்சியில் தான் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் அதிகரித்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் எனும் பெயரால் பாஜகவிற்கு பல்லாயிரம் கோடி கார்ப்பரேட் நன்கொடை குவிகிறது. ஊழலை சட்டரீதியாக்கும் முயற்சியே இது.

கடந்த எட்டு ஆண்டுகளில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனில் ரூபாய் பத்து லட்சத்து எழுபதாயிரம் கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது பாஜக அரசு.

இந்தியாவின் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்காக விண்ணப்பித்த எட்டு கோடி பேரில் ஒன்றரை கோடி பேருக்கு வேலை மறுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கான ஊதிய நிலுவை ரூ.1498 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இத்தகைய ஊதிய நிலுவையை வைத்துக் கொண்டு தான் மறுபுறம் பல்லாயிரம் கோடிகளில் புதிய பாராளுமன்றத்தையும், தனக்கான வீட்டையும் கட்டிக் கொண்டிருக்கிறார் மோடி.

பட்டினி நிறைந்த மக்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளின் பட்டியலில் 101 வது இடத்தை பிடித்திருக்கிறது இந்தியா. இந்நிலையில் மக்களின் பசியை போக்குவதற்கு பதிலாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதும் ஜி.எஸ்.டி. வரியை விதித்து அவர்களை மேலும் மேலும் வதைக்கிறது. உப்புக்கு வரி போட்டது பிரிட்டீஷ் அரசு. ஆனால் சோற்றுக்கும் கூட வரி போடுகிறது மோடி அரசு.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து ஏழை, எளிய மக்கள் உயர் கல்வி பெற முடியாத வகையில் சீரழித்துள்ளது.

அக்னிபத் எனும் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தை கான்ட்ராக்ட் ராணுவமாக பலவீனப்படுத்துகிறார்கள். பணமயமாக்கல் எனும் பெயரால் வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, மின்சரத்துறை உள்ளிட்டு நாட்டின் நவரத்தினங்களாக திகழும் பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு தாரை வார்த்து வருகின்றனர்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ஐ பலவீனப்படுத்தும் மோடி அரசின் முயற்சியினால் சுமார் எட்டு கோடி குழந்தைகளுக்கான உணவு கேள்விக்குறியாகியுள்ளது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இக்காலத்தில் அதிகரித்துள்ளன.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5 சதவிகித ஊட்டச்சத்து குறைவால் வளர்ச்சி குன்றி இருக்கின்றனர் பெண்களும் குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது உலகிலேயே அதிகம் இந்தியாவில் தான்.

பழங்குடி மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள், சிறுபான்மை மக்கள் தாக்குதல்களுக்கும், படுகொலைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டு சிறுபான்மை மக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர்.

சுயநல அரசியல் லாபத்திற்காக மதவெறி நடவடிக்கைகளை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்து வருகின்றன.

அரசு, நிர்வாகம், நீதிமன்றம் ஆகிய அனைத்திலும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலையீடுகள் அதிகரிக்கின்றன. மதசார்பற்ற ஜனநாயக குடியரசு எனும் நிலையிலிருந்து இந்துராஷ்டிரா எனும் வகுப்புவாத நிலைக்கு இந்திய குடியரசின் தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள்.

மாநில உரிமைகள் பறிப்பு, நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பு, ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை தர மறுப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர் மூலம் மிரட்டுவது, தேசிய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறைகளை பயன்படுத்தி எதிர்கட்சியினரை கைது செய்வது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.

** தேசத்தின் வளங்களையும் மக்கள் வாழ்வாதாரத்தையும் காத்திடவும்,

** இந்தியாவின் மதசார்பற்ற அடித்தளத்தை பேணி பாதுகாத்திடவும்

** அனைவருக்குமான பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்திடவும்,

** மதவெறி, வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்திடவும்,

இந்தியாவின் இருள் அகற்றுவோம்!
மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

மேற்கண்ட முழக்கங்களை முன்னிறுத்தியும், மோடி அரசின் 8 ஆண்டு கால நாசகர ஆட்சியை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் 2022 ஆகஸ்ட் 20 முதல் 30 வரை, 5000 குழுக்கள் 50 லட்சம் குடும்பங்களைச் சந்தித்து பிரச்சாரம் நடத்தவுள்ளது.

செப்டம்பர் 5, 2022 அன்று சென்னையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் மற்றும் மாநில தலைவர்கள் கலந்து கொள்கிறார். தமிழகம் முழுவதிலிமிருந்து பெருந்திரளாக தோழர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வியக்கத்தில் கட்சியின் மாநில / மாவட்ட தலைவர்கள், நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி அமைப்புகள் முழுவதும் களமிறங்க உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இப்பிரச்சார இயக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதாரவு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu