செய்தி அறிக்கைபத்திரிக்கையாளர் சந்திப்பு

இலங்கை நிவாரண நிதிக்கு சிபிஐ (எம்) பங்களிப்பாக ரூ. 10 லட்சம் வழங்கல்! ஸ்ரீமதியின் வழக்கை துரிதப்படுத்திடவும் முதலமைச்சரிடம் கோரிக்கை!

Aug 05 Bஇலங்கை மக்களுக்கான நிவாரண நிதியினை தமிழ் நாடு முதல்வரிடம் வழங்கியபோது ...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆகியோர் இன்று (05.08.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சரின் இலங்கை நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பாக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை நேரில் வழங்கி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் முயற்சிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கின் மீது உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மனு அளித்து (மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) வலியுறுத்தப்பட்டது. குற்றம் செய்தவர்களை கட்டாயம் தண்டனை இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையினை மாண்புமிகு முதல்வர் விளக்கினார்.

மேலும் குறுவை சாகுபடிக்கு இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சரிடம் வற்புறுத்திய போது, சம்பா சாகுபடிக்கு இன்சூரன்ஸ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால் அதனை அரசே ஈடுசெய்யும் வகையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய மாற்று பேச்சுவார்த்தை சுமூகத் தீர்வு காண்பதுடன், பல ஆண்டுகளாக ஓய்வுபெற்றோருக்கு அளிக்க வேண்டிய பஞ்சப்படி பாக்கித் தொகை உள்ளிட்ட பயன்களை வழங்கிட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சரிடம் வற்புறுத்தப்பட்டது. இது குறித்து விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

அதோடு, நீர்நிலை புறம்போக்குகளில் வாழும் மக்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வேறுவழியின்றி குடியிருப்புகளை அப்புறப்படுத்த வேண்டிய நடவடிக்கையினை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அதே சமயம் மக்களுக்கு மாற்று குடியமர்த்துதல் உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகிறோம் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சாதாரண ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தினால் கூட வழக்கு போடும் நடைமுறை உள்ளது என மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் சுட்டிக்காட்டிய போது, அரசுக்கும் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளன. அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

ஏற்கனவே, சென்னை டி.பி. ஜெயின் கல்லூரி நிர்வாகம் சுயநிதிக் கல்லூரியாக மாற்றுவதற்கு முயற்சிப்பதை அனுமதிக்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை அளிக்கப்பட்டிருந்து. அது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் டி.பி. ஜெயின் கல்லூரிக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அரசு உதவி பெறும் கல்லூரியாகவே செயல்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது மூத்த அமைச்சர்கள் மாண்புமிகு துரைமுருகன், மாண்புமிகு எ.வ.வேலு, மாண்புமிகு க.பொன்முடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீமதி வழக்கினை விரைந்து விசாரிக்க முதலமைச்சரிடம் அளித்துள்ள மனு:

05.08.2022

பெறுநர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள் – பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் தொடர் மரணம் – கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்தும் முறையான விசாரணையை துரிதப்படுத்தவும் – உண்மையான குற்றவாளிகள் உரிய தண்டனை பெற்றிட நடவடிக்கை எடுக்கவும் – இப்பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தையொட்டி கைது செய்துள்ள அப்பாவிகளை விடுதலை செய்யவும் – மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் – கோருதல் தொடர்பாக:

பள்ளி மற்றும் கல்லூரிகளில் – குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் தொடர்ச்சியாக மாணவிகள் மர்மமான முறையில் மரணமடைவது நீடித்து வருகிறது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட சில தனியார் பள்ளிகளில் மோசமான பாலியல் புகார்கள் எழுப்பப்பட்டு சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக கருத முடியவில்லை.

மாவட்ட கல்வி அதிகாரிகள் தனியார் பள்ளி நிர்வாகங்களோடு கொண்டுள்ள முறையற்ற உறவுகள் ஊழல் மற்றும் முறைகேடுகளால் சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் கேட்பாரற்ற நிலையில் மோசமான முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான அனுமதிகள் கூட பெறாமல் மாணவ – மாணவியர் விடுதிகளை நடத்தி வருகின்றனர். இம்முறைகேடுகளை களைந்திட மாநில அளவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து விசாரித்து ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13.7.2022 அன்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவத்தின் பின்னணியையும், தற்போதைய நிலைமைகளையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

¨ மாணவி ஸ்ரீமதி மரணமடைந்துவிட்ட செய்தியை 13.7.2022 அதிகாலை 6.00 மணிக்கு அவருடைய தாயாருக்கு தகவல் அளித்துள்ளனர். தாயும், உறவினர்களும் பள்ளிக்கு காலை 7.00 மணிக்கு வந்த போது மாணவியின் உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த உடலை எடுத்துச் செல்வதற்கு முன் காவல்துறைக்கு முறையான தகவல் அளிக்கப்படவில்லை. மாணவி மாடியிலிருந்து விழுந்த இடத்தையும் உறவினர்களுக்கு காட்ட மறுத்துவிட்டனர். மாணவியின் அறையை பார்வையிடவோ, சக மாணவிகளிடம் விசாரிப்பதற்கோ தாயுக்கும், உறவினர்களுக்கும் பள்ளி நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. நிர்வாகத்தின் இத்தகையப் போக்கு பல சந்தேகங்களை அளிக்கிறது.

¨ மாணவியின் தாயார் அளித்த புகாரின் பெயரிலேயே சின்ன சேலம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. (முதல் தகவல் அறிக்கை எண் 235/2022, நாள்: 13.7.2022, சின்னசேலம் காவல்நிலையம்) முறைப்படி பள்ளி நிர்வாகம் தான், சம்பவம் நடந்த உடனே காவல்துறைக்கு புகார் அளித்திருக்க வேண்டும். இதனை பள்ளி நிர்வாகம் செய்யவில்லை என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

¨ இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சந்தேகத்தாலும் மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறையாலும் அதிருப்தி அடைந்த பெற்றோர்களும், பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் கள்ளக்குறிச்சியில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்திய பிறகுதான் ஜூலை 14 அன்று உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் உடல் கூறாய்வில் அவரது மூக்கு, வலது தோள்பட்டை, வலது கரம் உள்ளிட்ட இடங்களில் சிராய்ப்பு காயங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவரது ஆடைகளிலும் ரத்தக் கரைகள் இருந்துள்ளன. மேலும் வலதுபுற நெஞ்சுப் பகுதி மார்பகத்தில் கீறல், காயங்களும், இத்துடன் வலதுபுறம் உள்ள மார்பக எலும்புகூட்டில் பெரும்பாலான எலும்புகள் முறிந்து உள்ளதாகவும் உடற்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி உடம்பில் எலும்பு முறிவோ வேறு பலத்த காயங்களோ குறிப்பிடப்படவில்லை. இத்தகைய விபரங்களை கொண்டதாக வெளியிடப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் அவரது பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் மேலும் சந்தேகம் வலுப்பட்டுள்ளது.

¨ 2022 ஜூலை 14 அன்று இத்தகைய பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரும் கூட, காவல்துறையினர் உரிய கோணத்தில் தங்களது விசாரணையை தொடராமலும், பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட இதர நிர்வாகத்தினரை கைது செய்யாமலும் இருந்ததானது மாணவியின் மரணத்திற்கான காரணத்தை மறைப்பதற்கும், குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.

¨ மேலும், சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு அருகிலேயே காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் இருந்த போதிலும் மகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கூறவோ, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தவோ, சம்பவம் நடந்த பள்ளிக்குச் சென்று இடத்தை பார்வையிடவோ காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் மேற்கொள்ளவில்லை.

¨ முதல் உடற்கூறாய்வில் குறிப்பிடப்பட்டுள்ள காயங்களுக்கும், மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக சொல்லப்படும் காரணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை எனும் சந்தேகத்தால் ஸ்ரீமதியின் பெற்றோர் இரண்டாவது உடற்கூறாய்வு செய்யப்பட வேண்டுமெனவும், அந்த உடற்கூறாய்வின் போது ஸ்ரீமதியின் பெற்றோரும், வழக்கறிஞரும், அவரது தரப்பில் ஒரு மருத்துவரும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், மேலும் உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாவது உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டுமெனவும் அதுவரையில் உடலை பாதுகாத்து வைக்க வேண்டுமெனவும் உடற்கூறாய்வு செய்யும் போது மாணவியின் தந்தையையும், வழக்கறிஞர்களையும் உடன் இருக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஆனால் மாணவியின் பெற்றோர் விரும்புகிற மருத்துவரை உடற்கூறாய்வின் போது அனுமதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. ஏற்கனவே பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் உடற்கூறாய்வின் போது மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் மருத்துவரை அனுமதிக்க மறுத்ததன் உள்நோக்கம் புரியவில்லை.

¨ மேலும், நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அதுவரை இரண்டாவது உடற்கூறாய்வை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற பெற்றோரின் கோரிக்கையும் நீதிமன்றம் மறுத்துவிட்டு உடற்கூறாய்வு செய்வது பற்றிய முறையான தகவல் பெற்றோர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது உடற்கூறாய்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெற்றோர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் தெரியாமலே செய்துவிட்ட காவல்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் மதியம் ஒரு மணிக்கு உடற்கூறாய்வு நடைபெறும் என 12.47 மணிக்கு வெறுமனே கடமைக்காக ஒரு குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பி வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன் இரண்டாவது உடற்கூறாய்வை அவசரமாக செய்து முடித்திருப்பது ஸ்ரீமதியின் மரணத்திற்கான காரணத்தில் வலுவான சந்தேகங்கள் இருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழலிலும், வலுவான போராட்டங்கள் நடைபெறும் பின்னணியிலும் கூட இத்தகைய பாரபட்சமான முறையில் நீதிமன்றமும், காவல்துறையினரும் நடந்து கொண்டுள்ளது கவலையளிப்பதாக உள்ளது. தற்போது பெற்றோர்கள் மற்றும் அவரது தரப்பு மருத்துவர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட இரண்டாவது உடற்கூறாய்வின் அறிக்கையும், முதல் உடற்கூறாய்வின் அறிக்கையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீமதியின் வழக்கு விசாரணையை மேலும் தாமதப்படுத்துவதற்கே வழிகோலியுள்ளது.

¨ துவக்கம் முதலே சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையிலும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரணமானவர்களை தப்புவிக்கும் முறையில் சம்பவங்கள் நடைபெற்ற பின்னணியில் ஜூலை 17 அன்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ற போராட்டம், வன்முறையில் முடிந்துள்ளது.

¨ இச்சூழலில் தமிழக அரசு, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இடமாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீமதியின் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்பின்னரே சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளரும், ஆசிரியர்களும் சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கைது நடவடிக்கைகளை சம்பவம் நடந்த உடனேயே மேற்கொண்டிருந்தால் அடுத்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை தவிர்த்திருக்க முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

¨ ஜூலை 17 ஆம் தேதி அப்பள்ளியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் முறையான விசாரணையினை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். மாணவியின் மரணம் தொடர்பான தடயங்களை எல்லாம் அழிக்கும் நோக்கத்தோடு இந்த வன்முறை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக வலுவான செய்திகள் உள்ளதையும் தங்களது மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

¨ எப்படியிருந்தபோதிலும் நடைபெற்ற வன்முறை ஏற்புடையதல்ல. அதில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அதேசமயம், இந்த வன்முறையை காரணம் காட்டி சம்பந்தமில்லாத பலரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சம்பவத்தன்று ஊரில் இல்லாத பல இளைஞர்கள், மாணவர்களையும் கைது செய்ததானது அவர்களது எதிர்கால வாழ்வை சீர்குலைத்துவிடும் என்பதையும் கவனத்தில் கொண்டு கைது செய்துள்ள அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

¨ இந்நிலையில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு உண்மையான காரணத்தையும், அதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து குற்றவாளிகளையும் தாமதமின்றி கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும், இவ்வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும், ஸ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து நான்கு நாட்களாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத அன்றைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதை உறுதி செய்திட வேண்டுமெனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். மேலும் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விசாரணையில் தீவிரம் காட்டுவதற்கு மாறாக, காவல்துறை பள்ளியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நடவடிக்கைகள் சரியல்ல என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

¨ உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 50 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, அப்பள்ளியில் பயின்றுவரும் 3500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கல்வியை தொடர்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், பள்ளியில் இருந்த மாணவ – மாணவியர்கள், ஆசிரியர்களின் அனைத்து சான்றிதழ்களும் எரிந்துவிட்ட நிலையில், மாணவர்களின் உரிய சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும், ஆசிரியர்களின் சான்றிதழ்களும் விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!
இப்படிக்கு,
/ஒப்பம்
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu