செய்தி அறிக்கை

சுதந்திரத்தின் பவள விழா! விடுதலையின் விழுமியங்களை காக்க உறுதியேற்போம்! சிபிஐ(எம்) வாழ்த்து!

Defendfreedomat75

இந்திய விடுதலை போராட்டமென்பது கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்ற மகத்தானதொரு இயக்கமாகும். விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையும் அனுபவித்த தன்னலமற்ற போராளிகளால் தான் இந்திய அரசியல் விடுதலை சாத்தியமானது. இத்தகைய நீண்ட போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானதாகும். துவக்க காலத்திலேயே மவுலானா ஹஸ்ரத் மொஹானி, ஸ்வாமி குமரானந்தா, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டுகள் “பூரண சுயராஜ்யம்” (முழு விடுதலை) என்ற முழக்கத்தை முன்வைத்தனர் என்பது நினைவூட்ட வேண்டிய மிக முக்கியமானதொரு அம்சமாகும்.

அடிமைத்தளைகள் நொறுக்கப்பட்டு அரசியல் விடுதலை பிரகடனம் செய்யப்பட்டு, விடுதலையின் 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு இதயப்பூர்வமான, உணர்ச்சிமிகுந்த, வீரம்செறிந்த விடுதலை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

அரசியல் விடுதலை மட்டுமல்லாது, சமூக, பொருளாதார விடுதலையையும் உறுதி செய்யும்  நீண்டதொரு புரட்சிகரமான பாதையில் இந்திய நாட்டை அழைத்துச் செல்ல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது உறுதியான போராட்டங்களை சமரசமின்றி தொடர்கிறது.

வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியதன் மூலம் பெற்ற சுதந்திரத்தின் உண்மையான பலன்கள் நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு சென்றடையவில்லை. கார்ப்பரேட் பெரு முதலாளிகளும், பெரும் நிலச்சுவான்தார்களும், கந்துவட்டி கொடுமைக்காரர்களும் கொழுத்து போனது மட்டுமின்றி, ஏழை, எளிய, நடுத்தர, உழைப்பாளி மக்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.

போதுமான உணவின்றி ரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட அதிகமான பெண்களும், குழந்தைகளும் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது. வேலையின்மையும், விலைவாசி உயர்வும் மக்களின் முதுகெலும்பை முறித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலைமையை மாற்றி உழைப்பாளி மக்களின் நலன்கள் காத்திட கார்ப்பரேட் பெரு முதலாளித்துவ கொள்கைகளை நிர்மூலமாக்கிட தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், சிறுபான்மை மக்கள், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட கரத்தாலும், கருத்தாலும் உழைக்கிற  அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய உறுதிமிக்க போராட்டங்களின் முன்னத்தி ஏராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதியோடு முன்னேறிச் செல்கிறது என்பதை பிரகடனம் செய்வதில் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பெருமிதம் கொள்கிறது.

75 ஆண்டு கால இந்திய சுதந்திரத்தை வெறும் கொண்டாட்டமாக மட்டும் அனுசரிக்காமல், போராடி பெற்ற சுதந்திரத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதும், அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச்சார்பற்ற சோசலிச குடியரசு என்பதன் அடித்தளங்களை பாதுகாப்பதுமே மிக முக்கியமானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கருதுகிறது.

ஏனெனில், விடுதலை போராட்டத்தில் எவ்வித பங்களிப்பையும் செலுத்தாத ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது.  வரலாறு நெடுகிலும் மூவர்ணக் கொடியை அவமதித்தே வந்த பாஜக தலைமையிலான ஆட்சியாளர்கள் ஒருபுறத்தில் விடுதலை கொண்டாட்டங்களுக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டே மறுபுறத்தில் தேசத்தின் அனைத்து வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறார்கள்.

மதவெறி நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு, மதப்பகைமையை உருவாக்குகிற நடவடிக்கைககளிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களின் இத்தகைய நடவடிக்கைககள் நாட்டு மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் விடுதலையின் பவளவிழா கொண்டாடப்படுகிற இத்தருணத்தில் மத, இன, மொழி, சாதி, பிராந்திய வேறுபாடு ஏதுமின்றி மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

எனவே, மதநல்லிணக்கம் கொண்ட சமூகமாக இந்திய சமூகத்தை கட்டியெழுப்ப, போராட சபதமேற்பதோடு, விடுதலையின் பலன்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மக்கள் ஜனநாயகம் எனும் அடுத்த உயரிய கட்டத்திற்குள் கொண்டு செல்லும் மகத்தான பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல 75ஆம் ஆண்டு பவளவிழா சுதந்திர நாளில் உறுதியேற்பதோடு, சுதந்திர தின நல்வாழ்த்துக்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு உரித்தாக்குகிறது.