தீர்மானங்கள்மாநில செயற்குழுமாநிலக் குழு

தமிழகத்தில் இயங்கும் இந்தி செல்களை உடனடியாகக் கலைத்திடவும், இந்தி – சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும் – சிபிஐ (எம்) போராட்டம் – மாநிலக்குழு அறைகூவல்!

தமிழகத்தில் இயங்கும் இந்தி Copy

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்தி திணிப்பின் வழியாக சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவதையே தன்னுடைய முழு முதல் மொழி கொள்கையாக பின்பற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு குடியரசு தலைவரிடம் அளித்துள்ள பரிந்துரைகள் அமைந்துள்ளன.

இந்திய மாநிலங்களை ஏ,பி,சி என பகுத்து இந்திப் பயன்பாட்டை வகைப்படுத்தி உள்ளனர். அதன்படி ஏ பிரிவு மாநிலங்களில் இந்திப் பயன்பாடு கட்டாயம். பி பிரிவு மாநிலங்களில் இந்தியுடன் ஆங்கிலப் பயன்பாடு, சி பிரிவு மாநிலங்களில் ஆங்கிலப் பயன்பாடு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று பிரிவுகளிலும் தமிழ்நாடு வரவில்லை. இந்தி மொழி பயன்பாடு என்பதே அலுவல் நடைமுறைகளில் தமிழகத்திற்குப் பொருந்தாது.

அலுவல் மொழி விதிகள் 1976, பிரிவு-1 துணை பிரிவு ii-ன்படி மூன்று பிரிவுகளுக்குள்ளும் தமிழ்நாடு வராது. ஆகவே அலுவல் மொழி விதிகளில் தமிழகம் பெற்றுள்ள தனித்தன்மையை உயிர்ப்போடு உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. நாடாளுமன்ற மொழி ஆய்வுக் குழுக்கள் வருகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவன அலுவலகங்களில் இந்தி பயன்பாடு குறித்து பதிலளிக்குமாறு கேள்வித்தாள் அனுப்பி நிர்பந்தம் செய்யப்படுகிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் இந்தி பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள “இந்தி செல்” அனைத்தும் முழுமையாக கலைக்கப்பட வேண்டும். இந்த அலுவலகங்களில் தமிழ் பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டும். தமிழ் நாட்டில் இயங்கும் அஞ்சல் துறை, ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகள், காப்பீட்டு துறை உள்ளிட்ட ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் படிவங்கள் அனைத்தும் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும் என்ற சிபிஐ (எம்) நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று அஞ்சல் துறை அதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது கவனம் கொள்ளத்தக்கது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் சி பிரிவில் வருவதால் அந்த மாநிலத்திலும் இந்தியை கட்டாயப்படுத்த முடியாது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 19 புதிய திட்டங்களுக்கு இந்தியிலேயே பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த 15 திட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்திலிருந்து `ஹிந்திக்கு மாற்றப்பட்டுள்ளன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களில் தேவநகரி எண்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மொழிகளின் சமத்துவத்திற்கும் எதிரானது. அந்தந்த மாநில மொழிகளில் ஒன்றிய அரசு திட்டங்களின் பெயர்கள் மொழி பெயர்த்து அழைக்கப்பட வேண்டும்.

ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருத திணிப்பைக் கைவிட்டு அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஒன்றிய அலுவல் மொழியாக்க முன்வர வேண்டும்.

இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடி வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மொழியுரிமையைப் பாதுகாக்கவும், இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும் மாபெரும் இயக்கத்தை நடத்துவது என மாநிலக்குழு முடிவு செய்கிறது.