செய்தி அறிக்கை

சாகித்ய அகாதமி விருதுபெற்ற தமிழ் படைப்புகள் எழுத்தாளர்களுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து!

Untitled 1 copy

2022 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ‘காலா‌பாணி’ – வரலாற்று புனைவு சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக குறிப்பிடத்தக்க விதத்தில் பணியாற்றிய முனைவர் மு.ராஜேந்திரனின் எழுத்துப்பணியும் விருதுக்குரியதாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

மதுரை மாவட்டம் வடகரை கிராமத்தில் பிறந்த‌ அவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பு முடித்ததுடன், திருக்குறளில் சட்டக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஏற்கனவே வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு, 1801 ஆகிய நாவல்களை எழுதி தமிழிற்கு வழங்கியுள்ளார்.

காலாபாணி – நாவல் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தை மையமாக கொண்டு எழுதியதாகும். முதல் சுதந்திர போராட்டம் என வரலாற்றில் அறியப்படும் சிப்பாய் புரட்சிக்கு முன்னதாகவே தமிழக மண்ணில் நிகழ்ந்த விடுதலைப் போராட்ட பதிவுகளை காலா பாணி உள்ளடக்கியுள்ளது. கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக போராடி தோற்கடிக்கப்பட்ட சிவகங்கை அரசர் வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கி புனையப்பட்டுள்ளது. இந்த நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பதன் தமிழ் மண்ணில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் இன்னும் பரவலான வாசகர்களை அடையும் என்பது மட்டற்ற மகிழ்ச்சித் தருகிறது. எழுத்தாளர் முனைவர் மு.ராஜேந்திரனுக்கு சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.

அதேபோல மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருதினை கே.நல்லதம்பி பெற்றுள்ளார். கன்னட மொழியில் நேமிச்சந்திரா எழுதிய யாத்வேஷம் என்ற நாவலை கடும் சிரத்தையெடுத்து தமிழில் கொண்டு வந்திருக்கிறார் நல்லதம்பி. மொழியாக்க நாவல் என்ற உணர்வே ஏற்படாத விதத்தில் தமிழில் வந்திருக்கும் இந்த நாவல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஐரோப்பாவில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்த யூதக் குடும்பத்தை பற்றியதாகும். நாஜி ஹிட்லரின் காலம் முதல், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வரை பேசக்கூடிய மிக முக்கியமான புனைவு, சாகித்ய அகாதமி மூலமாக கவனம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. மொழிபெயற்பாளர் நல்லதம்பி இன்னும் பல நூல்களை தமிழிற்கு வழங்க வேண்டும்.
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான பெருமாள் முருகனின் ‘பூனாட்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ என்ற நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதற்காக என்.கல்யாண ராமனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருப்பதும் பாராட்டுக்குரியது. விருதாளர்களை சிபிஐ(எம்) பாராட்டி மகிழ்கிறது.