கடிதங்கள்செய்தி அறிக்கை

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கொலை செய்யப்பட்ட கோகுல்ஸ்ரீ சிறுவன் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்திட கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு – கே. பாலகிருஷ்ணன் கடிதம்

Photo 2023 01 23 10 11 10

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கொலை செய்யப்பட்ட கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்திடவும், அவரது தாயார் பிரியாவை இரண்டு நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ள மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்திடவும், கோகுல்ஸ்ரீ மரணத்திற்கு ரூ.50 லட்சம் நட்டஈடும், அவரது தாயாருக்கு அரசு வேலையும் குடியிருக்க அரசு வீடும் வழங்குவது, சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு;

22.01.2023

பெறுதல்

            மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
            தமிழ்நாடு அரசு,
            தலைமைச் செயலகம்,
            சென்னை - 600 009.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள் : செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கொலை செய்யப்பட்ட கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வது – அவரது தாயார் பிரியாவை இரண்டு நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ள மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது – கோகுல்ஸ்ரீ மரணத்திற்கு ரூ.50 லட்சம் நட்டஈடும், அவரது தாயாருக்கு அரசு வேலையும் குடியிருக்க அரசு வீடும் வழங்குவது, சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோருவது தொடர்பாக…

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ கடந்த 31.12.2022 அன்று சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளான். அந்த கொலையை மறைக்க கூர்நோக்கு மேலாளர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார், தலைமைக் காவலர் ஜெயராஜ், சரஸ்வதி, சாந்தி ஆகியோர் சிறுவனின் தாயார் பிரியாவை இரண்டு நாட்களாக அடைத்து வைத்து மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து கேட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரியா சிலருடைய உதவியோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் கொடுத்த அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, நீதிமன்ற நடுவர் முன்னிலையில் சிறுவனின் பிரேதப் பரிசோதனை நடைபெற்றுள்ளது. நீதிமன்ற நடுவரின் விசாரணை அறிக்கை அடிப்படையில் 12.01.2023 அன்று கொலை வழக்கு பதிவு செய்து  குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவேளை மாவட்ட ஆட்சியரின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் இந்த கொலை வழக்கு மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இக்கொலை வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்வதுடன், சிறுவனின் தாயாரை இரண்டு நாட்கள் அடைத்து வைத்து மிரட்டியதுடன் பிரேத பரிசோதனையும் இரண்டு நாட்களுக்கு மேல் தாமதப்படுத்தி இவ்வழக்கை மூடி மறைக்க, திட்டமிட்டு செயல்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். குற்றவாளிகள் தப்பி விடாமல் இந்த வழக்கை முறையாக நடத்தி தண்டனைப் பெற்று தந்து உதவி செய்து தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சிறுவன் கோகுல்ஸ்ரீயின் தாயார் கணவனை இழந்தவர். நிரந்தர வருமானம் இல்லாமல், 5 குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பெரும் சிரமத்தில் வாழ்ந்து வருபவர். இறந்து போன கோகுல்ஸ்ரீயின் வருமானத்தை நம்பியிருந்த குடும்பமாகும். இவர்களுக்கு நிரந்தரமான வீடும் இல்லாமல் தாம்பரம் கன்னடபாளையம் குப்பைமேட்டிற்கு அருகில் வசித்து வருகின்றனர். தனது மூத்த மகனை இழந்து எதிர்காலத்தில் வாழ வழியின்றி தவித்து வருகிறார்கள். எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் இவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், வசிப்பதற்கு அரசு வீடும், அரசு வேலையும், இவரது குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பதற்கான வசதிகளையும் செய்து தரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் தொடர்ந்து பல சிறுவர்கள் அடித்து சித்ரவதைக்குள்ளாக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே சில சிறுவர்கள் இம்முகாமிலிருந்து காணாமல் போய்விட்டதாகவும் அறிய முடிகிறது. எனவே, செங்கல்பட்டு கூர்நோக்கு சிறுவர் இல்லம் உள்ளிட்ட அனைத்து கூர்நோக்கு இல்லத்தையும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லங்கள் சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவைகளாகும். ஆனால் இச்சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்களுக்கு உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் பணியமர்த்தப்பட வேண்டும். இதனால் இச்சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பப்படும் சிறுவர்கள் தொடர்ந்து குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள கூர்நோக்கு இல்லங்களின் பராமரிப்பு குறித்தும், உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், உளவியல் நிபுணர்கள், மருத்துவர்களை பணியமர்த்தி இங்கு அனுப்பப்படும் சிறுவர்கள் எதிர்காலத்தில் நல்ல சிந்தனையுள்ள இளைஞர்களாக வளர்த்தெடுக்க ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

தங்களன்புள்ள,

/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்