அதிமுக கட்சியின் ஒரு பிரிவிற்கு தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் கட்சிகளை பார்த்து, அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டதாகவும், இந்தக் கட்சிகள் காணாமல் போய்விடும் என்றும் ஊடகங்களிடம் புலம்பியுள்ளார்.
மக்கள் விரோத, மதவெறி பாஜகவிடம் நிரந்தர அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, கட்சியின் சின்னத்தைக் காப்பாற்றவும், கட்சியை நடத்தவும் பாஜகவின் தயவு தேடி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றவரை குறைகூறுவது கேலிக்கூத்தானது. ஈரோடு இடைத் தேர்தலில் தனது சொந்தக் கட்சி வேட்பாளரை அறிவிப்பதற்கு கூட பாஜக தலைவரின் அனுமதிக்காக காத்திருந்த எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமையை ‘கொத்தடிமை’ என்று சொந்தக் கட்சியினரே அங்கலாய்த்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளந்தது. ஒன்றிய ஆட்சியின் தயவோடு அதிகாரத்தில் ஒட்டிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி செல்வி ஜெயலலிதா பேசிவந்த மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளைக் கூட காற்றில் பறக்கவிட்டார். ஆட்சி அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்று எவ்வித கொலைபாதகத்திற்கும் தயங்காமல் செயல்பட்டார்.
இதன் விளைவாக ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் விரோத சட்டங்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்து யூனியன் பிரதேசமாக்கும் முடிவு உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் வெட்கமில்லாமல் ஆதரித்தது அதிமுக.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்குக்கு பெறுவதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது உட்பட ஒன்றிய அரசின் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகள் எதையும் எதிர்க்க திராணியில்லாமல் அடங்கி கிடந்தது பழனிச்சாமியின் ஆட்சி. தேர்தலில் படுதோல்வியடைந்து எதிர்க் கட்சியான பிறகும் கூட இந்தப் போக்கில் மாற்றமில்லை. தமிழ் நாட்டின் அனைத்து தரப்பினரின் கண்டனத்தையும் தாண்டி, ஆளுநரின் அடாவடி அரசியலுக்கு ஆதரவளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
தற்போதும் கூட, நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ள மோடியின் உற்ற நண்பரான அதானியின் ஊழல் – முறைகேடு பற்றியும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோடி ஆட்சியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கொடூர தாக்குதல் குறித்த பிபிசி ஆவணப்படம் பற்றியும் எடப்பாடி வாய் திறக்கவில்லை. நாட்டு மக்களது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட்டுகளை காப்பாற்றும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பற்றி பேசக்கூட விருப்பமில்லாத எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சிகளை விமர்சிப்பது நகைப்புக்குரியது. அவலத்திற்குரிய இந்தப் போக்கிற்கு வரும் இடைத்தேர்தலில் தக்கபாடம் புகட்டுவதற்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தயாராகவுள்ளார்கள் என்பதை நினைவில் கொள்வது நல்லது.
பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரமும் நாட்டின் சுதந்திரத்தையும், மதச்சார்பின்மையும், கூட்டாட்சி தத்துவத்தையும், இந்தியாவின் பன்முகத் தன்மையையும் மிதித்து சீரழித்து வருகின்றனர். மாநில உரிமைகளை நசுக்கி, ஒற்றை ஆட்சியை, ஆதிக்க சுரண்டலை நிலைநாட்டுவதுதான் அவர்களின் நோக்கம். இந்தக் கொடுமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசியல் சட்ட பாதுகாப்பு, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, மாநில உரிமைகள் உள்ளிட்ட கொள்கை அடிப்படையிலேயே திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து பாஜக/ஆர்.எஸ்.எஸ் சதிக் கூட்டத்தை தோற்கடிக்க முயற்சிக்கின்றன.
ஆனால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவினை அதிமுகதான் தாங்கிப் பிடித்து வருகிறது என்று வெட்கமேயில்லாமல் பேசியிருக்கிறார். மதவெறிக் கூட்டத்திற்கு விசுவாச அடிமைகளாக தொடர்வதன் மூலம் சொந்த கட்சிக்கே எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதுகிறார் என்பது திண்ணம்.