காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் வேதனையளிக்கின்றன. இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சண்டை நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.
இஸ்ரேல் முன்னெடுத்த தரை வழித் தாக்குதல்கள், வான் வழித் தாக்குதல்களால் 2025 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2,037 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களில் 200க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 2023 அக்டோபர் 7 முதல், மொத்தம் 53,384 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 94% பேர் பொதுமக்கள். அதிலும் 51% குழந்தைகள், 16% பெண்கள்**, 8% முதியோர்கள்.
நிவாரண உதவிகளை கொண்டு செல்லும் லாரிகள் காசாவில் நுழைந்திட, இரண்டு மாதங்களுக்கும் மேலாக செல்ல தடை செய்த பிறகு, தற்போது இஸ்ரேல் காசாவுக்குள் மிகக் குறைந்த அளவு உதவிகளை மட்டும் அனுமதித்துள்ளது. இதன் விளைவாக, காசாவில் கொடூரமான பட்டினி நிலை காணப்படுகிறது. அமெரிக்க ஆதரவால் ஊக்கமடைந்துள்ள இஸ்ரேல் இப்போது காசா முழுவதையும் ஆக்கிரமிப்போம் என கொக்கரிக்கிறது.
பாஜக தலைமையிலான இந்திய அரசு, இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதல்களை நிறுத்தும்படி அழுத்தம் கொடுக்க வேண்டும். போர்க்குற்றங்களுக்காகவும், இனப்படுகொலைக்காகவும் இஸ்ரேல் நாட்டின் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதில் இந்தியா சேர்ந்து கொள்ள வேண்டும்.
சிபிஐ(எம்), பாலஸ்தீனிய மக்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறது. 1967க்கு முன்னிருந்த எல்லைகளுடன், கிழக்கு ஜெருசலேம் தலைநகராக கொண்ட பாலஸ்தீனிய நாடு அமைய வேண்டும் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறது.







