செய்தி அறிக்கை

நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத் சேலம் மாவட்டத்தில் மக்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார். இந்த நிலையில் தனது குழந்தைகளை மீட்டுத் தர வேண்டுமென பெற்றோர்கள் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் அணுகியுள்ளனர்.

அப்போது அந்த அதிகாரி காவல்துறையிடம் புகார் அளிக்குமாறும், இங்கு வர வேண்டாமெனவும் தெரிவித்துள்ளார். இச்செய்தி அறிந்த வினோத் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியைச் சந்தித்து குழந்தையை மீட்டுத் தர வலியுறுத்தியுள்ளார்.

அப்போது அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் கால்வதுறையினரிடம் புகார் அளித்து பிணையில் வர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசு அதிகாரி தனது கடமையைச் செய்ய வேண்டுமென வலியுறுத்தி முறையிட்டவர் மீது உள்நோக்கத்துடனும், அதிகார துஷ்பிரயோகத்துடனும் செயல்பட்டது வன்மையான கண்டனத்திற்குரியது.

எனவே, நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும், செய்தியாளர்கள் சுதந்திரமாகவும், ஜனநாயகப்பூர்வமாகம் செயல்படுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்துவதோடு, குழந்தையை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது.