இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
சாதிய ஒடுக்குமுறைகளை ஒழித்திடுவோம்!
சாதியற்ற சமத்துவ சமூகம் படைத்திடுவோம்!
பட்டியல் – பழங்குடியின மக்கள் மாநாடுமே 16, 2023 – விழுப்புரம்
தீர்மானம்
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத சாதிய அமைப்பு இந்திய உபகண்டத்தில் மட்டுமே நீடித்து வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக தொடரும் இச்சாதியமைப்பால் மிகக் கொடூரமாக ஒடுக்கப்படுபவர்களாக பட்டியலின, பழங்குடி மக்கள் உள்ளனர். நாடு விடுதலையடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னரும் இம்மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறை மற்றும் பொருளாதார, வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப்படாதது ஆழ்ந்த கவலைக்குரியது.
பட்டியலின – பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள்அதிகரித்து வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் சாதிய பாகுபாடுகள் தமிழ்நாட்டில் நிலவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுச்சாலையில் செருப்பு அணிந்து நடப்பது, டீ கடையில் இரட்டை குவளை முறை, இடுகாட்டில் இறந்தவர் சடலத்தை அடக்கம் செய்ய உரிமைகள் மறுப்பு, கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுப்பு, பெண்கள் மீதான பாலியல் வன்முறை போன்ற எண்ணற்ற வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நீடித்து வருகின்றன. இதன் உச்சக்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடுமை சமீபத்திய நிகழ்வாகும். சாதிய ஆணவப் படுகொலைகளும் தொடர்கின்றன. பட்டியலின மற்றும் பழங்குடி மக்களிடையே எழுச்சி ஏற்பட்டு தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முனையும்போது சாதிய சக்திகள் அம்மக்கள் மீது கொடூரமான வன்முறை தாக்குதல்களை ஏவி வருகின்றன.
2021ம் ஆண்டு பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 50,900 மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 8,802. இது தான் இன்றைய நிலையாக இருக்கிறது. இந்தியாவில் 1955 பி.சி.ஆர். சட்டம், 1989 வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் அமலில் உள்ள போதிலும் அவை முறையாக அமல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வாழ்கிற தலித்துகளில் 91 சதவிகிதம் பேருக்கு சொந்த நிலம் இல்லை. இம்மக்களில் 80 சதவிகிதம் பேர் விவசாய கூலித் தொழிலாளர்களாகவும், முறைசாரா தொழிலாளர்களாகவும் உள்ளனர். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களில் பெரும்பகுதி இம்மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. நாகரீக உலகில் மனித மலத்தை மனிதனே அள்ளிச் சுமக்கும் இழிநிலை இன்றும் தொடர்ந்து வருகிறது.
பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான துணைத்திட்டம் அமலாக்கம் உரிய அக்கறையுடன் செயல்படுத்தப்படுவதில்லை. இத்துணைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு பல்லாயிரம் கோடிகள் ரூபாயை குறைத்து இம்மக்களை வஞ்சித்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்புகள், சுகாதாரம் போன்ற அனைத்திலும் இம்மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இடஒதுக்கீடு உரிமையைக் கூட இவர்களால் முழுமையாகப் பெற முடியவில்லை. பட்டியலின, பழங்குடியைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள் போதிய சத்தான உணவின்றி ரத்தச்சோகை நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
பழங்குடி மக்களைப் பொறுத்தவரை 2006 வன உரிமைச் சட்டம் அவர்களின் நிலம் மற்றும் வாழ்விட உரிமையை அங்கீகரிக்கிறது. சிபிஐ (எம்) உட்பட பல்வேறு ஜனநாயக சக்திகள் நீண்ட காலமாக வற்புறுத்தி போராடிய நிர்ப்பந்தத்தால் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்று போராடுகிற நேரத்தில் வனப்பாதுகாப்பு சட்டம் 1980ல் திருத்தங்கள் செய்து வன உரிமை சட்டத்தை நீர்த்துப்போக செய்துள்ளதுடன் வன வளங்களை பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்க வழிவகை செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
நாடு முழுவதும் பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதில் அரசு நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகின்றன. இதனால் இம்மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெற முடியவில்லை.
பிறப்பால் சாதியின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கடைப்பிடிப்பதும், சாதிய ரீதியாக ஒடுக்குமுறைகளை நிகழ்த்துவதும் நாகரீக உலகில் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அரசியல் சாசனத்தால் தடைசெய்யப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளை கடைபிடிப்பது இம்மக்களின் அடிப்படை உரிமையை நிராகரிப்பதாகும். வரலாற்று காலந்தொட்டு வர்ணாசிரம அடிப்படையில் உழைக்கும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளும் வர்க்கம் கடைபிடித்து வருகிறது. இத்தகைய வர்ணாசிரமக் கோட்பாடுகளை நிலைநிறுத்த இன்று மதவெறி பாஜக – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் மொத்த உழைப்பாளர்களின் பெரும்பகுதி மக்கள் பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களே. இம்மக்களை ஒன்றுசேர விடாமல் சாதிய மோதல்களை உருவாக்குவதும் இம்மக்களுக்குள் ஏற்படும் சிறு-சிறு பிரச்சனைகளை பெரும் கலவரங்களாக மாற்றும் பணியில் சாதிய சக்திகள் முனைந்து வருகின்றன. இச்சக்திகளை தமிழகத்தில் பாஜக – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் ஊக்கப்படுத்தி வருகின்றன.
கடந்த பல்லாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளால் உழைப்பாளி மக்கள் வாழ்விழந்து தவித்து வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் சிறு-குறு தொழில் முனைவோர், விவசாயிகள், அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களையும் ஓட்டாண்டியாக்கியுள்ளது. விண்முட்டும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவைகளால் நாட்டு மக்கள் மூச்சுத் திணறி உள்ளனர். தங்களது வாழ்வாதாரத்திற்காக ஒன்றிணைந்து போராட வேண்டிய மக்களை சாதி மற்றும் மதத்தை பயன்படுத்தி பிரித்தாளுவதின் மூலம் கார்ப்பரேட் பெருமுதலாளிகளை காப்பாற்றும் நோக்கோடு ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களின் விளைவாக அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக்கையை கலைஞர் தலைமையிலான அப்போதைய தமிழக அரசு ஏற்றுக் கொண்டு நிறைவேற்றியது, தமிழக அரசு தலித் கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும், அதுபோல கேரள அரசை தொடர்ந்து தமிழக அரசும் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கி பணி நியமன ஆணை வழங்கியதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
இந்நிலையில் “யாதும் ஊரே யாவரும் கேளீர்”, “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்” என்ற உன்னத லட்சியங்களை முன்னெடுக்கும் வகையில் தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறை ஒழித்திடுவோம்! சாதியற்ற சமத்துவ சமூகம் படைத்திடுவோம், தமிழகத்தை சமத்துவப்புரமாக மாற்றிட அனைவரும் கரம் கோர்த்து களமிறங்க வேண்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.
இத்தகைய அம்சங்களை கணக்கில் கொண்டு தலித் – பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேலும் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். இதற்கு கீழ்க்கண்ட அம்சங்கள் நிறைவேற்றப்படுவது அவசியமானதாகும்.
நிறைவேற்றப்படுவது அவசியமானதாகும்.
- தமிழகத்தில் நிலவும் பல்வேறு விதமான தீண்டாமைக் கொடுமைகளை தடுத்திட வேண்டும். கோவில்களில் பட்டியலின மக்களை வழிபட அனுமதிப்பது, இடுகாடுகளில் பிரேதங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது, இரட்டை குவளை முறை உள்ளிட்ட அனைத்து வகையான தீண்டாமைக் கொடுமைகளுக்கும் முடிவு கட்டிட வேண்டும்.
- தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடைமுறையில் உள்ள 1989 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். இதற்கு உதவும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும்.
- சாதி, ஆணவப் படுகொலைகள் மற்றும் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.
- பஞ்சமி நிலங்கள் மற்றும் நிபந்தனை நிலங்கள் மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். பல்வேறு வகையான புறம்போக்குகளில் வசித்து வரும் மக்களுக்கு மனை பட்டா வழங்குவதுடன், நில உச்சவரம்புச் சட்டத்தை முறையாக செயல்படுத்தி நிலமற்ற அனைத்துப்பிரிவு ஏழைகளுக்கும் நிலம் வழங்கிட வேண்டும். அனுபவத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.
- மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும். இட ஒதுக்கீட்டின்படி தலித் – பழங்குடி பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டிய பின்னடைவு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கிட சட்டம் இயற்ற வேண்டும். மக்கள் தொகை உயர்விற்கு ஏற்ப புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதேபோல உயர்கல்வி நிறுவனங்களில் சட்டப்படியான இடஒதுக்கீடு முறையாகவும், முழுமையாகவும் அமல்படுத்த வேண்டும். ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்.களில் ஒவ்வொரு ஆண்டும் பட்டியலின, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டு இடங்களில் சுமார் 1000 இடங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி இம்மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
- அகில இந்திய அளவிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில தலித் – பழங்குடி மக்கள் தொகைக்கேற்ப துணைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிட வேண்டும். இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதி தலித் – பழங்குடியினர் மேம்பாட்டிற்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும். இதற்கென்று தனிச்சட்டம் இயற்றப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.
- கையால் மலம் அள்ளும் இழிவை அடியோடு ஒழித்திட வேண்டுமெனில் துப்புரவு துறை நவீனமயமாக்கப்பட வேண்டும். அதற்கு உலக நாடுகளில் உள்ளதைப்போல் உயர் கல்வியில் துப்புரவு பொறியியல் துறை உருவாக்கப்பட வேண்டும்.
- தலித் கிறித்தவர்களை எஸ்.சி. பட்டியலில் இணைத்திட வேண்டும்.
- விவசாய கூலித் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலிச் சட்டத்தில் கூலி அளவை 600 ரூபாயாக உயர்த்தி அவற்றை உறுதிபட அமல்படுத்த வேண்டும்.
- கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் உறுதிபட அமல்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கிட வேண்டும். சட்டப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். வேலை உறுதி திட்டத்தை நகர்புறத்திற்கு விரிவுப்படுத்த வேண்டும்.
- வன உரிமைச் சட்டம் 2006ஐ அமல்படுத்த முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக பழங்குடி மக்கள் அனுபவித்து வரும் நிலங்களுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும். அந்நிலங்களிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் என்று அம்மக்களை வனத்துறையினர் வெளியேற்றுவதை ஒன்றிய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.
- பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்றிதழ் தடையின்றியும், தாமதமில்லாமலும் வழங்கிட வேண்டும்.
- ஈரோடு மாவட்ட மலையாளி, மலைப்புலையன், வேட்டைக்காரன், குறவன் இனத்தின் உட்பிரிவினர், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும்.
- அறிவியலுக்கு விரோதமானது சாதி என்பதை பற்றி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இணைத்திட வேண்டும்.
- அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதற்கு நீதிமன்றங்களில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்ய மாநில அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதப்படுத்த வேண்டுமென இம்மாநாடு கோருகிறது. மேலும் இந்தியாவில் சாதி, மத வேறுபாடின்றி மக்களிடையே ஒற்றுமையையும், இணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் சாதிய ஒடுக்குமுறைகளை மட்டுமல்ல, சாதி அமைப்பையும் ஒழித்துக்கட்டி சமூக சமத்துவத்தை நிலைநாட்டிட முனைந்தும், இணைந்தும் செயல்பட முன்வருமாறு அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.
சமூக ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டுவோம்! சாதிய பாகுபாடுகளை கைவிடுவோம்! தமிழகத்தை சமத்துவபுரமாக மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் 2023 ஜூன் மாதம் 4வது வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஒன்றியங்கள் மற்றும் நகரங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும். இப்பிரச்சாரத்திற்கு அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களும் பேராதரவு வழங்கிட வேண்டும் என இம்மாநாடு வேண்டுகிறது.