பாலின நிகர்நிலை நோக்கிய நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாக, மாநில அளவிலான பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாட்டினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துள்ளது.
ஐ.நாவின் “நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள்” (Sustainable Development Goals – SDG) குறித்த 2022 அறிக்கை உலகம் முழுக்க இலக்குகளை நோக்கிய முன்னேற்றங்கள் எதிர்பார்த்த அளவிலான வேகத்தில் நடைபெறவில்லை என்கிறது. 2030 இல் பாலின சமத்துவம் என்ற இலக்கு நோக்கிய பயணம் குறித்த 17 அளவுகோல்கள் பற்றிய மதிப்பீடே இது என்பதை இச் சிறப்பு மாநாடு கருத்தில் கொள்கிறது.
இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இந்த அனுபவம் வேறுபட்டதாக இல்லை என்பது மட்டுமின்றி பாலின சமத்துவத்திற்கு புதிய சவால்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்தியச் சமுகத்தில் நிலப் பிரபுத்துவம் தகர்க்கப்படாமையும், நவீன தாராளமயத்தின் உள்ளார்ந்த பாலின பாரபட்சம் மற்றும் நுகர்வியமும், மதப் பழமைவாதம் வளர்ந்து வருகிற வலது திருப்ப சூழலும், பாலின பாகுபாடுகளுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. பெண்கள் சமூகம், இல்லம், பணித்தலம் என எல்லா தளங்களிலும் பாகுபாடுகளை, வன்முறைகளை எதிர் கொள்கிறார்கள்.
பாலின சமத்துவம் என்பது பெண்களின் அடையாளம், பங்கேற்பு, பாதுகாப்பு ஆகிய மூன்று மிக முக்கியமான கூறுகள் கொண்டதாகும். இந்தியச் சூழலில் மூன்று கூறுகளுமே தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாடு முழுமையும் அதிகரித்து வருகிறது. 2016 முதல் 2021 வரை 5 ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான 22.8 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2011-க்கும் 2021-க்கும் இடையில் 10 ஆண்டுகளில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ள விகிதம் 87 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில், 170 நாடு களில் 148 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. 2021 இல் தில்லியில் பெண்கள் மீதான வன்முறை விகிதம் 147.6 சதவீதம் என்ற அளவிற்கு கடுமையாக அதிகரித்துள்ளது. இரவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யச் சென்ற மகளிர் ஆணையத் தலைவரையே ஓடுகிற காரில் உள்ளே இழுக்க முயன்ற அவலம் அரங்கேறியது. தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் ஒவ்வோராண்டும் அதிகரித்து வருகின்றன. 2021 இல் 2421 ஆக இருந்த பாலின வன்முறைகள் 2022 இல் 2918 ஆக அதிகரித்தது. இவற்றில் பாலியல் பலாத்காரம் 432, வரதட்சணை மரணங்கள் 29, கணவர், உறவினர்களின் துன்புறுத்தல் 1093, பாலியல் துன்புறுத்தல் 1414 ஆகும். போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் 2016 – 1583, 2017 – 1587, 2018 – 2039, 2019 – 2396, 2020 – 3090 என்ற விவரங்கள் நிலைமையின் கடுமையை எடுத்துரைக்கின்றன. “தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு நிதியம்” இருந்தாலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு கூட இந்த நிதியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படவில்லை.
(பள்ளிக் கூடங்களில் புகார் குழு, புகார் பெட்டி, தொடர்பு கொள்ள வேண்டிய எண், பெண் காவல் அதிகாரிகளின் தொலை பேசி எண்கள் பாரவைக்கு வைக்கப்பட வேண்டுமென்ற வழி காட்டல்கள் உணர்வு பூர்வமாக நிறைவேற்றப்படவில்லை).
கலாஷேத்ரா பிரச்சினையில் தேசிய பெண்கள் ஆணையத்தின் அணுகுமுறையே அதிர்ச்சியை தந்தது. காவல் துறையின் அணுகுமுறையும் பாரபட்சம் நிறைந்ததாக இருப்பதற்கு கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சாட்சியம் ஆகும்.
ஒன்றிய அரசு பெண்கள் பாதுகாப்பில் காட்டுகிற அலட்சியம் சித்தாந்த ரீதியான பிற்போக்குத் தனத்தின் வெளிப்பாடு. டெல்லியில் ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் ஒரு உதாரணம். குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்பி பிரிஜ் ராஜ் சிங் இதுநாள் வரை கைது செய்யப்படவில்லை.
கலாசேத்ரா, பத்மா சேஷாத்ரி போன்ற பிரபல கல்வி நிறுவனங்களில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்கள் தேசத்தை அதிர வைத்தன. ஆளும் கட்சி தலைவர்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாவது தொடர் கதையாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், அசாம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவற்றில்தான் அதிகமான பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. உன்னாவ், ஹாத்ராஸ், கத்துவா, ஆசாராம் பாபு ஆசிரமம் ஆகிய நிகழ்வுகள் நாட்டையே உலுக்கின. அதிகார வர்க்கத்தின், சட்ட ஒழுங்கு இயந்திரத்தின் பாரபட்சங்களும் வெளிப்பட்ட நிகழ்வுகள் ஆகும்.
நீதிமன்றங்கள் மதப் பழமை வாதத்திற்கு இரையாவதும், நீதிபதிகள் பிற்போக்கான கருத்துக்களை வெளியிடுவதும் அதிகரித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஒரு பெண்ணை பாலியல் பலவந்தத்திற்கு ஆளாக்கியவன் நீதி மன்றத்தில் செவ்வாய் தோஷம் அந்த பெண்ணுக்கு இருப்பதே திருமணம் செய்யாததற்கு காரணம் என்றவுடன் அலகாபாத் உயர் நீதிமன்றம் லக்னோ பல்கலைக் கழக ஜோதிட துறைக்கு உத்தரவிட்டது. கர்நாடகா உயர்நீதிமன்றம் பெண் சடலத்தோடு உடலுறவு கொள்ள முயற்சித்தது குற்றமல்ல என்று குற்றவாளியை விடுவித்ததும் சாட்சியங்கள். அரசியல் சாசனத்தால் வழி நடத்தப்பட வேண்டிய நீதி மன்றங்கள் சனாதன தர்மத்தால் வழி நடத்தப்படுகின்றனவோ என்ற கேள்வி எழுகிறது.
(குடும்ப வன்முறை, பணித் தல பாலியல் துன்புறுத்தல் ஆகியனவும் அன்றாட பிரச்சினைகளாக உள்ளன. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் அதிகம் ஈடுபடுபவர்கள் நெருங்கிய உறவினர்களே என்ற தகவல்கள் கவலைக் குரியதாகும்.
சாதி ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில் அதிகமாக நிகழ்கின்றன. தலித் எதிர்ப்பு அரசியல் என்ற வகையில் இடை நிலைச் சாதியினரை திரட்டுவது என்ற போக்கும் சாதி மறுப்பு திருமணங்கள் மீது வன்மத்தை விதைத்து படுகொலைகள், தாக்குதல்களுக்கு காரணங்களாகின்றன.
கல்வி இடை நிற்றல்கள், நுகர்வு கலாச்சாரம் உருவாக்கியுள்ள அழுத்தங்கள், வரதட்சணை கொடுமைகள், தனிப் பெண்களின் பிரச்சினைகள், போதை கலாச்சாரம், ஆன்லைன் சூதாட்டம் ஆகியனவும் பெண்களை அலைக்கழித்து வருகின்றன.
சட்டம்மன்றம் நாடாளுமன்றங்களில் 33% இடஒதுக்கீடு மசோதா ஒன்றிய அரசால் நிறைவேற்றப்படவில்லை. நாகாலாந்து சட்டமன்றத்தில் 60 ஆண்டுகளில் முதன் முறையாக இரண்டு பெண் எம்.எல்.ஏ க்கள் இந்த ஆண்டுதான் அடியெடுத்து வைத்துள்ளனர். இந்திய பெண்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உலக வரிசையில் 2014ல் 117 ஆக இருந்தது. 2020ல் 143க்கு வீழ்ந்துள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகியன இந்தியாவை விட அதிக பெண் பிரதிநிதித்துவம் கொண்ட நாடுகளாக உள்ளன. இந்தியா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து பெண்கள் 10.5% உள்ளனர். மாநில சட்ட மன்றங்களில் 9% மட்டுமே. அரசின் உயர் மட்ட பதவிகள், கார்ப்பரேட் உலகின் இயக்குநர்கள் ஆகியவற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு.
பெண்களின் உடை உரிமை கேள்விக்கு ஆளாக்கப்படுகிறது. ஹிஜாப் அணிகிற பிரச்சினையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மாணவிகள் கல்வியை இழந்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உதாரணங்கள் ஆகும். தமிழ்நாடு கவர்னரே குழந்தை விவாகத்தை நியாயப்படுத்தி தனது சொந்த வாழ்க்கையையே உதாரணமாகக் காட்டிப் பேசினார். பண்பாட்டு ரீதியாக சாதித் தூய்மையை, மதப் பழமைவாதத்தை பாதுகாக்க வேண்டிய கடமை பெண்கள் மீது சுமத்தப்படுகிறது. குடும்ப ஜனநாயகம் எல்லாம் தொலைதூரக் கனவாக உள்ளது.
ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்ணுரிமை சிறப்பு மாநாடு பாலின சமத்துவத்திற்கான பயணத்தில் பாலின வேறுபாடு இன்றி கைகோர்க்குமாறு அனைத்து இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு, சமூக நீதி, எண்ணம் கொண்ட அமைப்புகள், மற்றும் தனி நபர்களுக்கும் அறை கூவல் விடுக்கிறது.
பாலின வன்முறையற்ற சமூகம் படைப்போம் என்ற முழக்கத்தோடு அநீதிகளுக்கு எதிராக களம் காண்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க துணை நிற்போம், சட்டங்களை மேலும் பலப்படுத்தவும், நீதி வழங்கல் முறையிலுள்ள தடைகளை அகற்றவும் குரல் கொடுப்போம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது.
போக்சோ நீதிமன்றங்களின் வழக்குகள் விரைவில் முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட ஏற்கெனவே ஆணையிடப்பட்டு துவங்கப்படாத மையங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். நிலுவை வழக்குகள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், சாட்சியங்களை பாதுகாக்கவும், அவர்கள் வழக்கில் தங்கள் கடமையை அச்சமின்றி நிறைவேற்றவும் சிறப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சிறப்பு மாநாடு கோரிக்கை விடுக்கிறது.
சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டுமென்று ஒன்றிய, மாநில அரசுகளை இச்சிறப்பு மாநாடு வலியுறுத்துகிறது.
பெண்களின் மாண்புகளை பாதுகாக்கும் வகையில் படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை இச்சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என இம்ம மாநாடு படைப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுகிறது.
குடும்ப வன்முறைகளுக்கு எதிராகவும், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் ,விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்காக போராடும் நம்பிக்கையையும், துணிவையும் தருவோம் என்று இச்சிறப்பு மாநாடு உறுதி ஏற்கிறது.
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்படவும், உள்ளாட்சி பிரதிநிதிகளாக செயல்படும் பெண்கள் சுதந்திரமாக பணியாற்றுகிற நல்ல சூழலை உருவாக்கவும் தொடர்ந்து மக்கள் கருத்தை திரட்டவும் மாநாடு முடிவு செய்கிறது.
வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் சமத்துவம் நிலவ தமிழ்ச் சமூகத்தில் பரந்த உரையாடலை உருவாக்குவோம் என்றும் மாநாடு தீர்மானிக்கிறது.
“வானத்தில் பாதி நாங்கள்” என்று பெண்கள் பிரகடனம் செய்கிற நிகர் நிலைச் சமூகமாக மாற்றுகிற பயணத்தில் எல்லோரும் இணைய வேண்டுமென்று இந்த மாநாடு அறை கூவி அழைக்கிறது.