காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இம்முறை டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு போதிய தண்ணீர் திறந்து விடாததால் குறுவை சாகுபடி செய்துள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லாமல் சாகுபடி செய்த பயிர்கள் கருகியுள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பெரும் வேதனையில் மூழ்கியுள்ளனர். கறுகிய பயிரைக் கண்டு நாகப்பட்டினத்தில் ஒரு விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட தொடர்ந்து மறுத்து வருவதுடன் அரசியல் சாசன சட்டத்தையும் மீறி செயல்படுகிறது. இப்பிரச்சனையில் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படியும், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டுமென வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் டெல்டா மாவட்டங்களில் 11.10.2023 அன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகத்தின் நலன் காக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.
உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி கர்நாடக மாநில அரசு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டுமெனவும், ஒன்றிய பாஜக அரசு தமிழக விரோதப் போக்கை கைவிட்டு விட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்துவதற்கு போதிய நிர்ப்பந்தம் அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர்