செய்தி அறிக்கை

நிலம் காக்க போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போடுவதா? மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்!

நிலம் காக்க போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போடுவதா Copy

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமையவுள்ள மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3 ஆவது அலகு விரிவாக்கம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சிப்காட் விரிவாக்கத்திற்கு மேல்மா, தேத்துறை, வீரம்பாக்கம் வட ஆணாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் குரும்பூர், காட்டுகுடிசை, நெடுங்கல், மற்றும் நர்மாபள்ளம், உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் வேளாண் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலங்கள் தரிசு என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இந்த நிலங்களில் நெல், கரும்பு, கேழ்வரகு, மணிலா, பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசால் கையகப்படுத்தப்பட்ட உள்ள இந்த நிலங்கள் வேளாண் சாகுபடி செய்யப்பட்டுவரும் நிலம் என, தெரிவிக்கும் அப்பகுதி கிராம விவசாயிகள் மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் 120 நாட்களை கடந்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற விவசாயிகள், போலீசார் கைது செய்து அன்று மாலையே விடுதலை செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க சென்றனர். ஆனால், அதற்கு அனுமதி மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள பாளையங்கோட்டை, , கோவை, கடலூர், மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கடுமையான தேச துரோக வழக்கு குற்றவாளிகள் என்று ஆங்கிலேய ஆட்சி காலங்களில் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தான் , இவ்வாறு ஒரே வழக்கில் கைது செய்பவர்களை வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். ஆங்கலேயர் ஆட்சிக்கு பிறகு, இத்தகைய நடைமுறை தற்போது நடந்துள்ளது. இவர்களில் 7 பேர் மீது நவ.15 அன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நிலம் காக்க போராடிய விவசாயிகளை அழைத்து பேசாமல், அடக்குமுறைகளை ஏவுவதை மார்க்சிஸ்ட கட்சி கண்டிக்கிறது. அடக்குமுறைகளை கைவிட்டு, விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து, அவர்களை விடுவிக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்

எம்.சிவக்குமார்,
மாவட்ட செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
திருவண்ணாமலை மாவட்டம்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu