பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது. 2023ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான தோழர் பெ. சண்முகம் அவர்களுக்கும், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது சமூக நீதி கண்காணிப்புக்குழு தலைவர் சுப. வீரபாண்டியன் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விருது பெறும் இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயராது போராடி வருகிறது. வாச்சாத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் எண்ணற்ற மக்கள் இயக்கங்களையும், சட்டப் போராட்டங்களையும் நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியினை பெற்றுத் தந்தது. இந்த நீண்ட போராட்ட பயணத்தில் தோழர் பெ. சண்முகம் தொடக்க காலம் முதல் அயராது பணியாற்றியவர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவராக பணியாற்றிய காலத்தில் மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக பல போராட்டங்களை நடத்தியதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இவருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பது சாலப்பொருத்தமாகும்.
மேற்கண்ட இருவருக்கும் விருதுகளை வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்