செய்தி அறிக்கை

முஸ்லிம்கள் மீதான கொடூரமான வகுப்புவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

Strongly Condemn Vicious Communal Assault On Muslims

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சத்தீஸ்கர்‌ மாநில தலைநகர் ராய்பூரில், மாடுகளை ஏற்றிச் சென்ற மூன்று முஸ்லீம் ஆண்கள், பசு கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, பசு காவலர்கள் என்ற பெயர்சூட்டிக் கொண்ட வன்முறை கும்பலால் கொல்லப்பட்டனர்.

அலிகாரில் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் முஸ்லிம் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்லாவில், குளிர்சாதனப் பெட்டியில் இருந்து “மாட்டிறைச்சி” காணப்பட்டதாக புகார் கூறி, 24 மணி நேரத்தில் முஸ்லிம்களின் பதினொரு வீடுகள் இடிக்கப்பட்டன.

லக்னோவின் அக்பர்நகரில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் ஆற்றங்கரை அமைக்கிறோம் என்ற பெயரில் புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன.

குஜராத் மாநிலம் வதோதராவில் முதலமைச்சரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்டோர் குடியிருப்பு வளாகத்தில் முஸ்லீம் பெண்ணுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கம்பக்கத்தில் உள்ள இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் நஹான் பகுதியில் ஈத்-அல்-அதா நிகழ்வின் போது ஒரு முஸ்லீம் ஒரு பசுவைப் பலியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு முஸ்லீமுக்கு சொந்தமான கடை சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. மேலும் அவர் மீது பசுவதை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நகரத்தில் உள்ள மற்ற 16 முஸ்லிம் கடை உரிமையாளர்களும் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தில்லியின் சங்கம் விஹாரில், வழிபாட்டுத் தலத்தின் அருகே பசுவின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடைய வெறுப்புப் பேச்சுக்களால் அப்பகுதியில் குடியிருப்புவாசிகள் வெளியேறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து வகுப்புவாத தாக்குதல்கள் தூண்டப்படுவது, பாஜகவும் இந்துத்துவா வகுப்புவாத சக்திகளும் பழிவாங்கல் நோக்கத்துடன் புதிய முயற்சிகளை தீவிரப்படுத்துகின்றனர் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

பாஜக மற்றும் பிற வகுப்புவாத அமைப்புகளின் இத்தகைய குதர்க்கமான சூழ்ச்சிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு   சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

சமூக அமைதியை சீர்குலைத்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் தீய முயற்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கட்சி கிளைகள் உடனடியாக கண்டன குரல்களை எழுப்பிட வேண்டும் அறைகூவல் விடுக்கிறது.