செய்தி அறிக்கைமத்தியக் குழு

படுமோசமான பட்ஜெட்டிற்கு எதிராக கிளர்ந்தெழுவீர்!

படுமோசமான பட்ஜெட்டிற்கு எதிராக கிளர்ந்தெழுவீர்! Copy

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத, நாட்டின் பொருளாதார நிலைமையைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத படுமோசமான பட்ஜெட்டை மோடி அரசு தாக்கல் செய்துள்ளதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இந்த பட்ஜெட்டிற்கு எதிராக கட்சி அணிகள் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல்  தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் வேலையின்மை மிகவும் உச்ச அளவில் இருக்கக்கூடிய பொருளாதார நிலைமை, பணவீக்க விகித உயர்வு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு, தனியார் முதலீடுகளின் மந்த நிலை ஆகியவற்றுக்கு இடையில், ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டானது அவற்றைச் சரிசெய்யக் கூடிய விதத்தில்  தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்திட கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய வில்லை. மாறாக, அது தாக்கல் செய்துள்ள முன்மொழிவுகள், பிரச்சனைகளை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில் மிகவும் மோசமானதாக இருக்கின்றன. இது மக்கள் மீது மேலும் துன்ப துயரங்களைத் திணிப்பதற்கே இட்டுச்செல்லும். முதலீடுகள்  மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை யும் குறைத்திடும்.

நிதி மூலதனத்தைத்  திருப்திப்படுத்த முயற்சி

பட்ஜெட்டில் உள்ள விவரங்கள், அரசின் வருவாய் வருமானம் 14.5 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும், செலவினங்கள் வெறும் 5.94 விழுக்காடு அளவிற்கே அதிகரித்திருக்கிறது என்றும் காட்டுகின்றன. அரசின் வருவாய் வருமானத்தை, தன்னுடைய பொருளாதார நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம்,  சர்வதேச நிதி மூலதனத்தைத் திருப்திப்படுத்து வதற்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யை 5.8 விழுக்காட்டிலிருந்து 4.9 விழுக்காட்டிற்குக் குறைப்பதன் மூலம், தன்னுடைய நிதிப் பற்றாக்குறை(fiscal deficit)யைக் குறைத்திட பயன்படுத்தி இருக்கிறது.

ஜிடிபி கணக்குகளில் மீண்டும் தரவு மோசடி

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள ஜிடிபி கணக்குகள் தரவு மோசடியில் மற்றுமொரு தகிடுதத்தமாகும். பெயரளவிலான ஜிடிபி வளர்ச்சி 10.5 விழுக்காடாக இருக்கும் என 
கணிக்கப்பட்டிருக்கிறது. உண்மையான ஜிடிபியானது 6.5 முதல் 7 விழுக்காடு வரை வளர்ச்சியடையும் எனவும் கணிக்கப்பட்டி ருக்கிறது. இது 9.4 விழுக்காடு என்ற உயர் உணவுப் பணவீக்க விகிதத்தைத் தவிர்த்து, பெயரளவிலான வளர்ச்சியை 3 விழுக்காடு ‘கோர்’ பணவீக்க விகிதத்தால் பணமதிப்பீடு செய்வதன் மூலம் கணக்கிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதம் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

கல்வி, சுகாதாரம், உணவு மானியங்கள் வெட்டிக் குறைப்பு

அரசின் செலவினத்தை மேலும் கசக்கிப் பிழிந்திருப்பதன் மூலம், மானியங்கள் கணிசமான அளவிற்கு வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன. ரசாயன உர மானியம் 24 ஆயிரத்து 894 கோடி ரூபாய் அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. உணவு மானியம் 7 ஆயிரத்து 082 கோடி ரூபாய் அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது.

கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி முதலானவற்றிற்கான ஒதுக்கீட்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விழுக்காட்டின் அளவில் கிட்டத்தட்ட எவ்வித மாற்றமும் இல்லை. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) புறக்கணிக்கப்படுவது மேலும் தொடருகிறது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 86 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதுசென்ற 2023 நிதியாண்டில் செலவுசெய்த தொகையைக் காட்டிலும் குறைவாகும். இந்த நிதியாண்டில் முதல் நான்கு மாதங்களில் ஏற்கனவே 41 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. மீதம் உள்ள எட்டு மாதங்களுக்கு செலவு செய்வதற்காக இருக்கும் தொகை என்பது 44 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமேயாகும். நிச்சயமாக இது போதாது. இது கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை நெருக்கடியை ஆழமாக்கிடும் என்பதிலும் ஐயமில்லை.

இளைஞர்களின் பெயரில் முதலாளிகளுக்கே சலுகை

இந்த பட்ஜெட்டானது வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குகிறோம் என்ற பெயரில் சில வித்தைகளைச் செய்துகாட்டி இருக்கிறது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Employment Linked Incentive) என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்கீழ், ஒரு லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும்  முறையான துறையில் (formal sector), புதிதாக சேரும் தொழிலாளருக்கு ஒரு மாத ஊதியம் அளிக்கப்படும். தகுதியுள்ள தொழிலாளர்கள் அதிகபட்சமாக 5,000 ரூபாய் மூன்று மாதாந்திர தவணைகளில் பெறுவார்கள். எனினும், வேலை அளிக்கும் முதலாளிக்கோ, ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் மாதாந்திர ஊதியம் அளிக்கப்படுவதற்காக வாடகைக்கு அமர்த்தப்படும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்காகவும் தலா 72 ஆயிரம் ரூபாய் 24 மாதங்களுக்குத் தவணைகளாகப் பெறுவார். இவ்வாறு அவர் உருவாக்கிடும் ஒவ்வொரு கூடுதல் வேலைக்கும் பொருந்தும். உண்மையில் இந்தத் திட்டம் என்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு மானியம் அளிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இத்தகைய வித்தைகள் எல்லாம் வேலைவாய்ப்பை உருவாக்காது. கடந்த காலங்களில் கார்ப்பரேட் துறையினர் பெற்றிடும் கொள்ளை லாபங்கள் மூலமாக அவர்கள் புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கிடவில்லை. பொருளாதாரத்தில் தேவை இல்லாத காரணத்தால் புதிதாக இயந்திரங்கள் மற்றும் உற்பத்திக்கான முதலீடுகளை அவர்கள் செய்திடவில்லை. மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி சுருங்கிவிட்டதே இதற்குக் காரணமாகும்.

வேலைவாய்ப்பு அதிகரிப்பு எனும் ஏமாற்று வேலை

பட்ஜெட்டில், இந்திய இளைஞர்கள் மத்தியில் திறமைகளை அதிகப்படுத்துவதற்காக சில திட்டங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இதுவும் நாட்டில் மிகவும் உயரளவில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிட உதவிடாது. 2016-க்கும் 2022-க்கும் இடைப்பட்ட 6 ஆண்டு காலத்தில் நாட்டிலுள்ள இளைஞர்களில் 18 விழுக்காட்டினர் மட்டுமே இவ்வாறான பயிற்சி நிறுவனங்களில் திறன் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். பொருளாதார நிலைமை விரிவடையாமல் வேலைவாய்ப்புகளை அதிகரித்திட முடியாது என்று மீண்டும் கூறிக்கொள்கிறோம்.

பேச்சளவிலேயே கூட்டுறவு கூட்டாட்சி

‘கூட்டுறவு கூட்டாட்சி முறை’ (‘cooperative federalism’) என்று வாய்கிழியப் பேசப்பட்டாலும், ஆந்திரம் மற்றும் பீகார் தவிர மற்ற மாநில அரசாங்கங்கள் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுகிறது. அங்கே அவர்களுக்கிருக்கின்ற அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக அவை தப்பித்துள்ளன. ஒன்றிய ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி உயிர்பிழைத்திருப்பதற்கு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தயவு தேவை. எனவே, நிதி ஆணையம் மானியங்கள் (வரிப் பகிர்வு தவிர), 2022-23இல் 1 லட்சத்து 72 ஆயிரத்து 760 கோடியிலிருந்து 2023-24க்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 429 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் அது மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்து 378 கோடி ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

பணக்காரர்கள் மேலும் கொழுக்க ஓட்டாண்டிகளாகும் ஏழைகள்..

ஒட்டுமொத்தத்தில், இந்த பட்ஜெட் பணக்காரர்களை மேலும் கொழுக்க வைத்திடும் விதத்திலும், ஏழைகளை மேலும் ஓட்டாண்டிகளாக்கிடும் விதத்திலும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது, செல்வ வரி (wealth tax) அல்லது பாரம்பரிய வரி (inheritance tax) போன்றவற்றை நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்கள் மீது விதித்திட எவ்வித முன்மொழிவையும் பரிசீலனை செய்திட மறுத்திருக்கிறது. சாமானிய மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மறைமுக வரிச்சுமையிலிருந்து அவர்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் அளித்திடவில்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்தோ, நாட்டின் பொருளாதாரம் குறித்தோ கிஞ்சிற்றும் கவலைப்படாத இந்தப் பட்ஜெட்டின் தோல்விக்கு எதிராகக் கிளர்ந்தெழுமாறு அனைத்துக் கட்சிக் கிளைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.