அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி.
தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றியாகும். இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் 2009 செல்லும் என்றும், பட்டியல் சாதியினர் மத்தியில் நிலவும் வேறுபட்ட அளவிலான ஒடுக்கு முறைகளை கணக்கில் எடுத்து உள்ஒதுக்கீடுகள் செய்வது அரசியலமைப்புச் சட்டம் 341 குடியரசுத் தலைவருக்கு தந்துள்ள அதிகாரங்களை மீறுவது ஆகாது என்றும், உள் ஒதுக்கீடுகளுக்கான போதிய தரவுகளோடு அது மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது செல்லத்தக்கது என்றும் உச்சநீதி மன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இதன் மூலம் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடுகளை செய்வது குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வதாகும் என்கிற 2005 ஈ.வி. சின்னையா (எ) ஆந்திரப் பிரதேசம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு உள்ஒதுக்கீடு வழங்குவது பட்டியலின மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குவது, பாராபட்சத்தை ஏற்படுத்துவது போன்ற எதிர் தரப்பு வாதங்களை நீதிபதிகள் நிராகரித்துள்ளார்கள். ஒரு சமூகத்தில் வித்தியாசமான நிலைமைகள் உள்ள போது, வித்தியாசமான அணுகுமுறைகளை மேற்கொள்வதே சமநிலையை பாதுகாக்க முடியும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இத்தீர்ப்பின் மூலம் அருந்ததிய மக்களின் நீண்ட கால கோரிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போராட்டத்தை அரசியல் தளத்திலே முன்னெடுத்த பின் அது ஈடேறுகிற சூழல் ஏற்பட்டது என்பதும் வரலாறு.
அருந்ததியர்களுக்கான உள்இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2007 ஜூன் 12ல் சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. மேலும், உள்ஒதுக்கீடு கோரி பல்வேறு இயக்கங்களை சுயேச்சையாகவும், இதர அருந்ததிய அமைப்புகளுடனும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியுடனும் இணைந்து போராடியது குறிப்பிடத்தக்கது. அப்போதைய முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களை தோழர் என். வரதராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்தும் வலியுறுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மண்டல அளவிலான மாநாடுகள், மாநில அளவிலான பேரணிகள் ஆகியனவற்றை தொடர்ந்து நடத்தி மக்களின் கருத்தை திரட்டிய பின்புலத்தில் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர், ஓய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அதன் அறிக்கையை பெற்று அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற வழி வகுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், 2005 இல் உச்சநீதிமன்றத்தால் தரப்பட்ட தீர்ப்பு ஒன்றை முன்வைத்து அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லாது என்று வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்த சூழலில் அத்தோடு உயர்நீதிமன்ற வழக்கும் இணைக்கப்பட்டது.
இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேனாள் மாநில செயலாளர்கள் என்.வரதராஜன், ஜி ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாநில தலைவர் பி.சம்பத் ஆகியோர் தங்களையும் இணைத்துக்கொண்டு வழக்கை நடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
உள்இடஒதுக்கீடு குறித்து பெரும்பான்மை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பில் ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது ஏற்புடையதல்ல. பெரும்பான்மை தீர்ப்பு சமூகத்தின் கடைத்தட்டில் அழுந்திக் கொண்டிருக்கிற அருந்ததிய மக்களுக்கு தீர்வைத் தந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகும்.
அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், தமிழ்நாட்டில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை முன் நின்று நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அருந்ததியர் இயக்கங்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளுக்கும் இத்தகைய உரிமைகளுக்காக பல்வேறு களங்களைக் கண்ட அருந்ததிய மக்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக கைகோர்த்த ஜனநாயக உள்ளம் கொண்டோருக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றியாகும் இது.
நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் துவங்கி உச்சநீதிமன்றம் வரை நடத்தியுள்ள தமிழக அரசுக்கும், அனைத்து வழக்கறிஞர்களுக்கும், அமைப்புகளுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறது.
கே. பாலகிருஷ்ணன் மாநில செயலாளர்