அமெரிக்க நீதித்துறை கௌதம் அதானி உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் அதானியும் அவரது சகோதரர் மகன் சாகர் அதானியும் மத்திய-மாநில அரசு அதிகாரிகளிடம் பெருமளவு கையூட்டு வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சூரிய மின் உற்பத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக மாநில மின்சார வாரியங்களின் அதிகாரிகளுக்கு சுமார் ரூ 2,029 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமம் அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியது தொடர்பாக அந்நாட்டில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாகர் அதானியிடமிருந்து கிடைத்த ஆவணங்களில் கையூட்டு தொடர்பான முக்கிய தகவல்கள் இருப்பதாக குற்றப்பத்திரிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த ‘கையூட்டு குறிப்புகளில்’ எந்தெந்த மாநிலங்களின் அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட்டது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட தொகை, அதற்கு பதிலாக அந்தந்த மாநிலங்கள் கொள்முதல் செய்ய ஒப்புக்கொண்ட சூரிய மின்சாரத்தின் அளவு ஆகியவை விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பெரும்பாலான இடங்களில் மெகாவாட் அடிப்படையில் கையூட்டு தொகை, லஞ்சம் பெறும் அதிகாரிகளின் பதவிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு அதிகாரிகளுக்கு இடையே பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம் போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் வழங்கிய பேரளவு கையூட்டு விவகாரம் நம் நாட்டில் அல்லாமல் அமெரிக்க நீதிமன்றத்தில் அம்பலமானது நாட்டுக்கே இழுக்கு. கௌதம் அதானியின் தொழில் குழுமம் சட்டவிரோதமாக செயல்பட மோடி அரசு துணைபோனது மட்டுமல்ல, ஏற்கெனவே ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளிப்படுத்திய முறைகேடுகள் குறித்தும் பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு விசாரணைகளை தடுத்து வந்துள்ளார்.
இனி மோடி அரசால் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முடியாது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் மத்திய புலனாய்வுத்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு கையூட்டு வழங்குவது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றம் என்பதால், இது சிபிஐயின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. அதானி குழுமத்தின் இதுபோன்ற பிற முறைகேடுகளையும் வெளிக்கொணர சுதந்திரமான விசாரணை அவசியம்.