கே.பாலகிருஷ்ணன் ,
மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
விழுப்புரத்தில் சிபிஐ (எம்) 24வது தமிழ்நாடு மாநில மாநாடு 2025 ஜனவரி 3-5 தேதிகளில் நடைபெறவுள்ளது. கட்சியின் அமைப்பு விதிப்படி 11332 கிளை மாநாடுகள், 546 இடைக்கமிட்டி மற்றும் அரங்க மாநாடுகள், 41 மாவட்ட மாநாடுகள் நடந்து முடிந்து தற்போது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 571 பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டின் எட்டு திசைகளிலும் மக்கள் பணியில் ஈடுபட்டு பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி விழுப்புண்களைப் பெற்றுள்ள தோழர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கிறார்கள். அகில இந்திய தலைவர்கள் தோழர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கட்சியின் 23வது மாநில மாநாடு மதுரையில் 2022 மார்ச் கடைசி வாரத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கடந்த கால பணிகள் பரிசீலிக்கப்பட்டு அரசியல் தளத்திலும், அமைப்பு களத்திலும் எதிர்காலத்தில் நாம் ஆற்ற வேண்டிய பல கடமைகள் தீர்மானிக்கப்பட்டன. இக்கடமைகளை கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் நிறைவேற்றிய விதம் குறித்தும், மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட நடத்தப்பட்ட எண்ணற்றப் போராட்டங்கள், அதன் படிப்பினைகள், அனுபவங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.
- இந்திய நாட்டை அச்சுறுத்திக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாஜகவை தமிழகத்தில் வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் 2019, 2021 நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பாஜக, அதிமுக கூட்டணி முறியடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2024 தேர்தலில் உருவான இந்தியா கூட்டணியின் சார்பில் தமிழ்நாட்டில் 100 சதமானம் பாஜக முறியடிக்கப்பட்டு போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெற்றது. பாஜக மற்றும் அதிமுக படுதோல்வியடைந்தது மட்டுமின்றி அதிமுக 8 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. இடதுசாரி கட்சிகளான சிபிஐ (எம்), சிபிஐ 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- ஒன்றிய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், நவீன தாராளமய, தனியார்மய நடவடிக்கைகளைக் கண்டித்தும் மாநிலந்தழுவிய பலகட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ரயில் – சாலை மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் விவசாயிகள் – தொழிலாளர்கள் இணைந்த போராட்டங்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்போடு நடத்தப்பட்டன.
- மத்திய ஆட்சி மற்றும் ஆளுநரின் செயல்பாடுகளை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் கால்பரப்ப தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில சாதிய தலைவர்களையும், சாதிய அமைப்புகளையும் மொத்தமாக காவி அமைப்பிற்குள் ஈர்த்துள்ளது. பிரபலமான ரவுடிகள், சமூக விரோதிகள், குற்றப்பின்னணி கொண்டோரை கட்சிக்குள் சேர்த்து பொறுப்புகளுக்கு உயர்த்தியுள்ளது. பல ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தங்கள் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. கோவில் விழாக்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பன்முக நடவடிக்கைகளால் பாஜக தன்னை பலப்படுத்திக் கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகள் வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து பதட்ட நிலையை உருவாக்கும் சூழ்நிலைகளில் நமது கட்சி உறுதியாக தலையிட்டு குரல் கொடுத்ததுடன், தேவையான பிரச்சனைகளில் இதர மதச்சார்பற்ற கட்சிகளையும் இணைத்துக் கொண்டு கூட்டு இயக்கங்களை நடத்தியுள்ளோம். இந்துத்துவா சக்திகளின் நடவடிக்கைகளை பின்னுக்குத் தள்ளியதுடன் மக்கள் ஒற்றுமையை பாதுகாத்திட பணியாற்றியுள்ளோம்.
- 2022 செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதையொட்டி பாஜக தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் என்று அறிவித்து தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றிட முனைந்தது. இதே நாட்களில் சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகள் இணைந்து மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டது. பல கட்ட நீதிமன்ற விசாரணைக்கு பிறகு உயர்நீதிமன்ற அனுமதியோடு 2022 அக்டோபர் 11 ஆம் தேதி 20 அரசியல் கட்சிகள், 22 அமைப்புகள் கலந்து கொண்ட மகத்தான மனிதச் சங்கிலி இயக்கம் 2 லட்சம் பேர் பங்கேற்புடன் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதன் மூலம் பாஜக – ஆர்எஸ்எஸ் திட்டமிட்டிருந்த மதவெறி நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன.
- இதுபோன்றே கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பைப் பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கிட பாஜக முயற்சிகளை மேற்கொண்டது. நமது தலையீடுகளால் “அமைதியான கோவை அதுவே இன்றைய தேவை” என வற்புறுத்தினோம். தமிழக அரசும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவ்வழக்கை உடனடியாக என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைத்து கோவையில் மீண்டும் மதக்கலவரத்தை தூண்டும் பாஜக முயற்சி முறியடிக்கப்பட்டு அமைதி பாதுகாக்கப்பட்டது.
- தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் மாணவி தற்கொலையை மதமாற்ற அரசியல் என மடைமாற்ற பாஜக மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
- ஆர்எஸ்எஸ்-ன் பிரச்சாரகராக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கைகளை கண்டித்து தொடர் இயக்கம் நடத்தி வருகிறோம். மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை கண்டித்து நமது கட்சியின் சார்பிலும், கூட்டாகவும் கண்டன இயக்கங்களை நடத்தியுள்ளோம். கடந்த 8 மாதங்களுக்கு மேலாக அவர் செல்லும் இடங்கள் தோறும் நமது கட்சியின் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 2023 ஜனவரியில் நமது கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டத்தை நடத்தினோம். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் பாஜக முறியடிக்கப்பட்டாலும் அதனுடைய வாக்கு பலம் உயர்ந்துள்ளது கவலையோடு கவனிக்கத்தக்கதாகும். மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலை மையப்படுத்தி ஒரு பகுதி மக்கள் இந்துத்துவா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. மதச்சார்பற்ற கட்சிகளோடு இணைந்து தேர்தல் போராட்டத்தை நடத்தும் அதே நேரத்தில் பாஜகவின் இந்துத்துவா, மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலை எதிர்த்து கருத்தியல் ரீதியான போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. இப்பணியினை மேற்கொள்வதற்கான வழிவகைகளை விழுப்புரம் மாநாடு தீர்மானிக்கவுள்ளது.
- மறுபுறத்தில், மாநில உரிமைகள், மத நல்லிணக்கம், தாய்மொழி பாதுகாப்பு, பன்முகப் பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்கான இயக்கங்களோடு வர்க்க கோரிக்கைகள், வாழ்வுரிமை பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமைக் கொடுமைகள், பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை, சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் போன்றவற்றை எதிர்த்து களத்திலும், கருத்தியல் தளத்திலும் போராட்டங்கள் நடத்த வேண்டுமென மதுரை மாநில மாநாடு தீர்மானித்தது. இக்கடமைகளை நிறைவேற்றும் வகையில் இக்காலத்தில் அடுக்கடுக்கான போராட்டங்கள் கட்சி மற்றும் வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்டுள்ளன.
- சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஏழை மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்க தலையீடு செய்துள்ளோம். நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவுகள் மூலம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளை இழந்த மக்கள் அகதிகளைப் போல அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர். நமது கட்சி நடத்திய இயக்கங்களால் சென்னை மாநகரம் உட்பட பல மாவட்டங்களில் வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களின் குடியிருப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
- மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்ட மக்களுக்கு புதிய குடியிருப்புகளும் பல இடங்களில் மாற்று இடங்களும் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து போராடி குறைந்த கட்டணத்தில் வீடுகள் பெற்று ஏழை மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் வீட்டுமனைப் பட்டா கோரி நீண்ட காலமாக இயக்கம் நடத்தியிருந்த நிலையில் சமீபத்தில் பல மாவட்டங்களில் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள், பட்டியல் சாதி மக்கள் மீதான தாக்குதலை எதிர்த்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம், பெரம்பலூர் சிறுமி தற்கொலை, ஈஷா யோகா மையத்தில் சுபஸ்ரீ சந்தேக மரணம், சென்னையில் கலாச்சேத்ரா மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள், விழுப்புரம் ஆசிரம பாலியல் கொடுமைகள், மனித உரிமை மீறல்கள், பரமக்குடி பள்ளிச் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகளை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தி முத்திரைப் பதித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே.
- சென்னையில் குடும்ப வன்முறை எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத்தியதோடு, இந்த கருத்தரங்க தீர்மானத்தை விளக்கி மாநிலம் முழுவதும் துண்டு பிரசுரம் விநியோகம், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் பெண்கள் உரிமை பாதுகாப்பு மாநாடு, அத்தீர்மானங்களை விளக்கி பிரச்சாரம் போன்றவை நடத்தப்பட்டன.
- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவினை கலந்த இழிவினை எதிர்த்து முதலில் களம் கண்டு பலகட்ட போராட்டங்களை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே. நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலை கண்டித்தும், விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் கோவிலுக்கு வழிபடச் சென்ற பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், சங்கராபுரத்தில் தலித் மக்கள் வீடுகள் சூறையாடப்பட்டதைக் கண்டித்தும் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் மாரியம்மன் கோவிலிலும், சேலம் மாவட்டம் பெரிய மாரியம்மன் கோவிலிலும் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆலயப் பிரவேசப் போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றது.
- அருந்ததிய மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு அருந்ததிய மக்களுக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு செல்லும் என வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேபோன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீண்ட நெடிய சட்டப்போராட்டம் நடத்தியதன் விளைவாக குற்றவாளிகள் அனைவருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததுடன் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மற்றும் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்படுவதற்கு வகைசெய்தது செங்கொடி இயக்கமே.
- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் பழங்குடி மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் படி மனைப்பட்டா வழங்க வேண்டுமென 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தின் விளைவாக சுமார் 3500 பழங்குடி மக்களுக்கு சாகுபடி நிலம், பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- திருநெல்வேலியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதியர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதால் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமும், ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடத்தியதுடன் தம்பதியர்களை பாதுகாத்தது நமது இயக்கமே. தொடர்ந்து நடைபெறும் சாதி ஆணவப்படுகொலைகளை கண்டித்து இயக்கம் நடத்தியதுடன், ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென சட்டமன்றத்திற்குள்ளும், மக்கள் மன்றத்திலும் போராடி வருவது செங்கொடி இயக்கமே.
- அனுதினமும் ஒன்றிய அரசால் பறிக்கப்படும் மாநில உரிமைகளை பாதுகாத்திட சிறப்பு மாநாடு மதுரையில் எழுச்சியோடு நடைபெற்றது. இதேபோன்று சிறு, குறு தொழில்கள் பாதிப்புகள் குறித்து கோவையில் மாநாடு நடத்தி அதன் கோரிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்து நடவடிக்கைகள் எடுக்க வற்புறுத்தி வருகிறோம்.
- இக்காலங்களில் சட்டமன்றத்தில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை எழுப்பி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் நேரில் ஏராளமான பிரச்சனைகள் நமது சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தொழிலாளர்கள், ஊழியர்கள் பிரச்சனையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளையும் திமுக அரசின் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிட வேண்டுமென நேரிலும் பலமுறை நமது கட்சியின் சார்பில் வற்புறுத்தியுள்ளோம்.
- நாடாளுமன்றத்தில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் தவறான நடவடிக்கைகளை எதிர்த்தும், தமிழகத்தின் உரிமைகள், தமிழ் ஆட்சி மொழி உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணி பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
- விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், மாற்றுத் திறனாளிகள், 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவது, வீட்டுமனைப்பட்டா, குடிநீர், சுகாதாரம், அடிப்படை பிரச்சனைகளுக்கான அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்தி வருகிறோம். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கிடவும், பணி நிரந்தரமில்லாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் – மருத்துவர்கள் – செவிலியர்கள், சத்துணவு – அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்துத் துறை ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்திட இயக்கங்களை மேற்கொண்டு வருகிறோம்.
- அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், ஓய்வுபெற்ற பல்லாயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைபடி நிலுவைத் தொகையினை வழங்கிடவும் வற்புறுத்தி வருகிறோம்.
- புதிய கல்விக் கொள்கை, வரலாற்றை திரித்து எழுதும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள், இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு ஆகியவைகளை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள், மக்களைத் திரட்டி இயக்கம் நடத்தியுள்ளோம்.
- கள்ளக்குறிச்சி விஷசாராய சாவுகள், காவல் நிலைய கொடுமைகள், மனித உரிமை மீறல், ஜனநாயக உரிமைகள் பறிப்பு போன்ற பிரச்சனைகளிலும் வலுவாக குரலெழுப்பி வந்துள்ளோம்.
- பாஜகவை எதிர்த்த போராட்டத்தில் பரந்த ஒற்றுமையை உருவாக்கிட திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளோடு இணைந்து பணியாற்றியுள்ளோம். அதேசமயம் திமுக அரசு மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சன அணுகுமுறையையும் மேற்கொண்டுள்ளோம்.
- திமுக அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை, நடவடிக்கைகளை வரவேற்க வேண்டும். மக்கள் நலனுக்கு விரோதமான நடவடிக்கைளை திமுக அரசு மேற்கொள்ளும்போது அவற்றை எதிர்த்து வலுவாக குரலெழுப்புவதுடன், திமுக அரசின் அணுகுமுறையிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்ட வேண்டிய பிரச்சனையில் தயக்கமின்றி வேறுபடுத்திக் காட்ட வேண்டும்” என மதுரை மாநாடு தீர்மானித்தது. இந்த அணுகுமுறையின்படி திமுக அரசு மேற்கொண்டு வருபவற்றில் வரவேற்க வேண்டிய திட்டங்களை வரவேற்றுள்ளோம். அதே சமயம் இந்த அரசு மேற்கொண்டு வரும் தாராளமய கொள்கைகளையும் அதன் விளைவான நடவடிக்கைகளையும் எதிர்த்து தயக்கமின்றி போராடி வருகிறோம். எந்த சூழ்நிலையிலும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்ற அடிப்படையில் இந்த அரசு மேற்கொண்ட எட்டு மணி நேர வேலை சட்டத்திருத்தம் மற்றும் சாம்சங் தொழிலாளர் சங்கப்பதிவு பிரச்சனையில் சமரசமின்றி போராடி வருகிறோம். இப்பிரச்சனைகளில் நமது தனித்த குரலை எழுப்பியதோடு மட்டுமின்றி தோழமைக் கட்சிகளையும் இணைத்து அரசுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளோம். இதன் விளைவாக 8 மணி நேர வேலை திருத்தச் சட்டம் திரும்ப பெறப்பட்டது. சாம்சங் சங்க பதிவு பிரச்சனையில் அரசு மேற்கொள்ளும் தொழிலாளர் விரோத, சாம்சங் நிர்வாக ஆதரவு நடவடிக்கையினை எதிர்த்து தனியாகவும், தோழமைக் கட்சிகளோடு இணைந்தும் போராடி வருகிறோம்.
- இதேபோல, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு போன்ற மக்கள் தலையில் சுமையேற்றும் நடவடிக்கைகளிலும் நமது எதிர்ப்புக் குரலை வலுவாக எழுப்பியுள்ளோம்.
இன்றைய அரசியல் சூழலில் முதலாளித்துவ கட்சிகளுக்கு மாற்றாக இடதுசாரி கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும், இடதுசாரி அணியினை பலப்படுத்த வேண்டுமெனவும் கண்ணூர் மாநாடு அறைகூவல் விடுத்தது. இக்காலத்தில் இப்பணி முழுமையாக நிறைவேற்றப்படாத சூழலே உள்ளது.
மேற்கண்ட சூழ்நிலையில் எதிர்காலத்தில் பாஜகவை எதிர்த்த போராட்டத்தையும், இந்துத்துவா, மதவெறி கருத்தியலையும், தமிழ்த் தேசியம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் திசைதிருப்பல் வேலைகளையும், சாதிய அணி சேர்க்கை, சமூக ஒடுக்குமுறை போன்றவைகளில் கருத்தியல் ரீதியான வலுமிக்க போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்வதோடு, இடதுசாரி அணியினை வலுமிக்க அணியாகவும், இதற்கு அடிநாதமாக திகழும் சிபிஐ (எம்) கட்சியினுடைய சொந்த பலத்தை அதிகரிப்பதுமான கடமைகளை விழுப்புரம் மாநாடு நிறைவேற்ற உள்ளது.
தமிழக அரசியல் சூழலில் வெளிச்ச விதைகளை விதைக்கும் மாநாடாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமையை பெருக்கிட வியூகம் வகுக்கும் மாநாடாகவும் விழுப்புரம் மாநாடு அமையும் என்பது திண்ணம்.
சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்.
சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்.