கருத்துரை

சோசலிசத்தை உயர்த்திப் பிடித்து இளைய தலைமுறையை அணி திரட்டுவோம்!

Site

தோழர் எம்.ஏ.பேபி
பொதுச் செயலாளர், சிபிஐ(எம்)

பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணியை தனிமைப்படுத்தி, தோற்கடிக்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தை மதுரையில் நடைபெற்ற, சி.பி.ஐ(எம்) 24 வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம் முன்வைத்துள்ளது.

சுமார் 11 ஆண்டு கால மோடி அரசாங்கத்தின் விளைவாக, நாட்டில்  வலதுசாரி, வகுப்புவாத, எதேச்சதிகார சக்திகள், நவபாசிச தன்மைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை அத்தீர்மானம் சரியாகவே பகுப்பாய்வு செய்கிறது.  

“இந்துத்துவா சக்திகளும் பெருமுதலாளிகளும் அமைத்துள்ள கூட்டணியை பிரதிநிதித்துவம் செய்வதாக மோடி அரசாங்கம் உள்ளது. எனவே பாஜக-ஆர்.எஸ்.எஸ் மற்றும் அவற்றிற்கு அடித்தளமிட்டுள்ள இந்துத்துவ-கார்ப்பரேட் பிணைப்பினை எதிர்த்து தோற்கடிப்பதே முதன்மைப் பணியாகும்” என்று அந்த தீர்மானம் கவனப்படுத்துகிறது.

வகுப்புவாத சக்திகளின் கருத்தியலுக்கும், செயல்பாடுகளுக்கும் எதிரான தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகளை தனிமைப்படுத்தி தோற்கடிக்க முடியும். இந்துத்துவ வகுப்புவாதத்திற்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்டிட பரந்துபட்ட முயற்சி முன்னெடுக்கும் அதேசமயத்தில் “இந்துத்துவ நவதாராளமய ஆட்சியை எதிர்த்த போராட்டங்களின் வெற்றிக்கு, சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி சக்திகளின் சொந்த வலிமை அதிகரிக்க வேண்டியுள்ளது”.

சிபிஐ(எம்) உள்ளிட்ட பிற இடதுசாரிகளின் சொந்த வலிமையிலும், செல்வாக்கிலும் ஏற்பட்டுள்ள தேக்கமும் – சரிவும் – சில காலமாகவே கவலையளித்து வருகிறது. கட்சியின் வெகுஜன ஆதரவுத் தளத்தில் ஏற்பட்டிருக்கும் அரிப்பின் காரணமாக, முன்பு அதன் வலுவான தளமாக இருந்த மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் கடும் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டு முடிவின்படி, பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளின் பரந்துபட்ட ஒற்றுமையை ஏற்படுத்துவதில் கட்சி வெற்றி பெற்றிருப்பதை குறிப்பிடும் அரசியல் பரிசீலனை அறிக்கை, அதேசமயம் அந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட மற்றொரு பணியை, “அத்துடன் சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரிகளின் வலிமையையும், செல்வாக்கையும் அதிகரிப்பது” என்பதை நிறைவேற்றுவதில் கட்சி தோல்வியடைந்துள்ளதை சுய விமர்சனத்துடன் ஒப்புக் கொள்கிறது.

23வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் உத்தி சரியானது என கட்சியின் 24வது மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்துத்துவ சக்திகள், ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளின் நடவடிக்கைகளையும், செல்வாக்கினையும் எதிர்கொள்வதற்கு அரசியல், கருத்தியல், பண்பாடு, பொருளாதாரம், சமூகம் ஆகிய தளங்களில் நீடித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கட்சியை தயார்ப்படுத்த வேண்டுமென மாநாடு அழைப்பு விடுத்துள்ளது.

பாஜக-ஆர்.எஸ்.எஸ் இரண்டையும் தனித்தனியாக பார்க்க முடியாது என்பதுடன் அவற்றை தேர்தல் போராட்டத்தின் வழியாக மட்டுமே தோற்கடிக்க முடியாது என்பதையும் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த  பத்து ஆண்டுகளில், இந்துத்துவ சக்திகளின் கருத்தியல் செல்வாக்குடன் கூடிய ஆதரவுத் தளம் கணிசமாக உருவாக்கப்பட்டிருப்பதால், அவற்றை எதிர்கொள்ள விரிவானதொரு திட்டமும் தேவைப்படுகிறது. இந்த இலக்கில் மார்க்சிஸ்ட் கட்சி தனது பணியை முன்னெடுக்கும். தொழிலாளர் வர்க்கத்திடையே, அவர்களின் குடியிருப்பு பகுதிகளிலும், தொழிற்சங்கங்கள் வழியாகவும் பணியாற்றுவதிலும், பிற வெகுஜன அமைப்புகள், மேடைகள், சமூக-பண்பாட்டு நடவடிக்கைகள் மூலமாகவும் வகுப்புவாத எதிர்ப்புப் பணிகளை ஒருங்கமைத்திட சிறப்பு கவனம் செலுத்திடும்.

அரசியல் ஆதாய நோக்கில் மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துவதற்கும், மத நம்பிக்கைக்கும் இடையிலான வேறுபாடுகளை தம்முடைய ஆதரவாளர்களுக்கு விளக்கும் நடவடிக்கையை கட்சி தன்னுடைய மற்ற பணிகளுடன் சேர்த்து மேற்கொள்ளும். திருவிழாக்களிலும், சமூகக் கூடுகைகளிலும் தலையீடு செய்வதன் மூலம் அந்த நிகழ்வுகளை வகுப்புவாத அரசியலுக்காக தவறாக  பயன்படுத்துவதை தடுக்க முயற்சி செய்திடும்.

மேலும் திருவிழாக்களிலும், கொண்டாட்ட நிகழ்வுகளிலும் இயல்பாக நிலவுகிற சாதி,  மத நல்லிணக்க அம்சங்களை ஊக்குவித்து வலுப்படுத்தும். சமூக சேவை நடவடிக்கைகளிலும், மக்கள் அறிவியல் இயக்கங்களிலும் ஈடுபட்டு மதசார்பின்மையையும், அறிவியல் சிந்தனையையும் ஊக்குவித்திடும். மனுவாத, பழமைவாத தன்மையிலான மதிப்பீடுகளை எதிர்க்கும் விதத்தில் பரந்துபட்ட பண்பாட்டு நடவடிக்கைகளை தொடங்கும்.

மேற்குவங்கத்திலும், திரிபுராவிலும் சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி சக்திகளை மறு கட்டமைப்பதும், விரிவுபடுத்துவதும் – கட்சியை கணிசமாக வலுப்படுத்துவதற்கு மிக அவசியமானது என்பதை இந்த அகில இந்திய மாநாடு கவனப்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஊரக, நகர்ப்புற ஏழைகளிடையிலான செயல்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களை ஒருங்கிணைக்க முயற் மேற்கொள்வோம். திரிபுராவில் கட்சியின் அடித்தள கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன் பழங்குடி மக்களின் சிறப்புத் தேவைகளையும், பிரச்சனைகளையும் தீர்க்கும் அதேசமயத்தில், உழைக்கும் மக்களை ஒற்றுமைப்படுத்தும் செயல்பாடுகளை முன்னெடுக்க அகில இந்திய மாநாடு அறிவுறுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் அதேசமயத்தில், மற்ற மாநிலங்களிலும் கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சி எடுக்க வேண்டும். எனவே, அடிப்படை வர்க்கங்களிடையே பணியாற்றுவதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று 24வது அகில இந்திய மாநாடு தீர்மானித்துள்ளது.

கிராமப்புற செல்வந்தர்களின் கூட்டுச் சுரண்டலுக்கு எதிரான கிராமப்புற ஏழைகளின் போராட்டங்களில் இருக்கும் பலவீனங்களைக் களைந்திட வேண்டுமென மாநாடு அறைகூவி அழைக்கிறது.

கட்சியின் சொந்த அரசியல் பிரச்சாரத்திலும், வெகுமக்களை திரட்டுவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும், “தொகுதி உடன்பாடுகள் அல்லது கூட்டணிகள் என்ற பெயரில் கட்சியின் சொந்த அடையாளத்தை மங்கச் செய்யவோ, சொந்த நடவடிக்கைகளைக் குறைக்கவோ கூடாது” என்பதும் மாநாட்டின் தெளிந்த தீர்மானமாகும்.

சாதிய, பாலின, சமூகப் பிரச்சனைகளை வெகுஜன அமைப்புகள் கையிலெடுப்பது என்ற வழக்கமான அணுகுமுறைக்கு மாறாக, கட்சியே இப்பிரச்சனைகளில் நேரடியான பிரச்சாரத்தையும், போராட்டங்களையும் நடத்த வேண்டும். அவற்றை வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களோடு இணைத்து முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கட்சியால் இப்போது முன்வைக்கப்படுகிறது.

இதுவரை ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பல்வேறு பிரிவினர்கள் அவரவர்  அடையாளங்களில் திரண்டு தம் உரிமைக்காக போராடி வருகின்றனர். அந்த போராட்டங்களோடு தம் ஒறுமைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன், செயலூக்கமான ஒரு அங்கமாக அந்த போராட்டங்களோடு இணைந்து கொள்வது கட்சியின் கடமையாகும்.

பல பத்தாண்டுகளுக்கு முன்பே ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சித் திட்ட ஆவணமும் கூட, பட்டியல் சாதி மக்களின் கோரிக்கைகளையும், அவற்றின் ஜனநாயக உள்ளடக்கத்தையும், சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களின் விருப்பங்களின் வெளிப்பாடாகவே காண்கிறது.

மேலும், கட்சித் திட்டம் மாற்றுத்திறனாளிகளின் கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமைகளை உறுதி செய்திட உறுதியேற்கிறது. பழங்குடி மக்களின் பிரச்சனைகளையும் பேசுகிறது. கட்சியின் அகில இந்திய மாநாட்டின் தீர்மானம், எல்ஜிபிடிகியூ எனப்படும் திருநர் / பாலியல் சிறுபான்மை சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் மீதும் கவனம் ஈர்க்க முயற்சிக்கிறது.

கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு, அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை ஈர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கட்சி உணர்ந்திருக்கிறது. இளைஞர்களின் மத்தியில் மற்ற முதலாளித்துவ கட்சிகளில் இருந்து வேறுபட்ட தனது முழக்கத்தை கட்சி முன்னெடுக்க வேண்டும். ஒரு மாற்று தேவை என்ற  இளைஞர்களின் தேடலையும், விருப்பத்தையும் கட்சி உள்வாங்கிட வேண்டும்.

இது பற்றி அரசியல் பரிசீலனை அறிக்கை கூறும்போது, “நமது அரசியல், கருத்தியல் பிரச்சாரத்தில் இடம் பெறாத ஒரு முக்கியமான அம்சம் சோசலிச இலட்சியத்தை பிரச்சாரம் செய்வதாகும். நாம் பேசும் இடது, ஜனநாயக மாற்று சோசலிசத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

சோவியத் ஒன்றியத்திற்கும், சோசலிசத்திற்கும் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகான புதிய தலைமுறையினரிடையே நமது இலட்சிய முழக்கங்களை கொண்டு சேர்க்க, இது மிக மிக அவசியமாகும்” என்கிறது. அந்தப் பாதையில் மேலும் முன்னேறுவோம்!

Leave a Reply