பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் அவற்றின் ஆதாரக் கட்டமைப்புகளை அழிக்கும் நோக்கில், இந்திய ஆயுதப் படையினர் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இந்திய இராணுவ தகவலின்படி, இந்த தாக்குதல்கள் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டவை; வரையறைக்கு உட்பட்டவை; மோதலை அதிகரிக்காதவையாகவும் இருந்தன. மொத்தம் ஒன்பது இடங்களில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
ஒன்றிய அரசு ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், தீவிரவாதிகளையும், அவர்களை கையாளுபவர்களையும் எதிர்த்து மத்திய அரசு எடுக்கிற நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இந்த நடவடிக்கைகளுடன் கூட, பாகிஸ்தானுக்கு மேலதிக அழுத்தம் கொடுத்து, பஹல்காமில் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை இந்தியாவுக்கு ஒப்படைக்க வலியுறுத்த வேண்டும். மேலும் பாகிஸ்தான் நிலத்தில் இருந்து எந்தவொரு பயங்கரவாத முகாமும் இயங்கக் கூடாதென்று உறுதி செய்ய வேண்டும். இந்திய அரசு, மக்களின் ஒற்றுமை, நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுவதை உறுதி வேண்டும்.