கட்சியின் மாநிலங்களவை தலைவரான ஜான் பிரிட்டாஸ், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்வைத் தொடர்ந்து, மே 8, 2025 அன்று இந்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிபிஎம் சார்பில் கலந்து கொண்டார்.
இவ்வளவு முக்கியமான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக இல்லாதது குறித்து ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். பிரதமரின் பங்கேற்புடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தையும் கூட்டுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
‘ஆபரேஷனின் நோக்கங்கள் அடையப்பட்டுள்ளன’ என்று அரசாங்கம் அறிக்கை அளித்துள்ள பின்னணியில், கடந்த கால அனுபவத்தைக் கருத்தில் கொண்டால், இத்தகைய இராணுவ நடவடிக்கை பயங்கரவாதக் குழுக்களை குறிவைத்து ஒழிக்க முடியுமா என்பது சந்தேகமே என்று பிரிட்டாஸ் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் தொடர்ந்து ராஜீய நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்றும் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த சர்வதேச அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிலைமை மோசமடையாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
எல்லைப் பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், இச்சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். மக்கள் முன் அனைத்து உண்மைகளையும் வைத்து, அனைத்து வகையான தவறான தகவல்களின் பரவலைத் தடுக்குமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
வெறுப்பு பரவுவதைத் தடுப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் பிரிட்டாஸ் கூறினார், மேலும் பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். வெறுப்பு பரவுவதை எதிர்த்துப் போராடாமல் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்த முடியாது. பயங்கரவாதத்தின் மோசமான விளைவுகளால் பாதிக்கப்பட்ட பிறகும், பரிவுடன் ஒற்றுமையாகக் கண்டனம் செய்ததன் மூலம் முழு நாட்டிற்கும் சரியான பாதையைக் காட்டியதற்காக பஹல்காம் மற்றும் காஷ்மீர் மக்களை அவர் பாராட்டினார். துன்பத்தில் இருக்கும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நிற்க, அரசாங்கம் பொருத்தமான நேரத்தில் காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச்செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.