செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி கிராமத்தைச் சார்ந்த +2 மாணவி கயல்விழி (வயது 17) என்பவர் இன்று நடைபெற்ற நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி கிராமத்தைச் சார்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் கயல்விழி (வயது 17) நடப்பாண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த மாணவி வழக்கம் போல் சனிக்கிழமையன்று இரவு படுக்கை அறைக்குச் சென்றுள்ளார். தேர்வு எழுத தாம்பரம் செல்ல வேண்டுமென்பதால் அவரது தாயார் இன்று அதிகாலை மகளை எழுப்புவதற்காக அறைக்குச் சென்று பார்த்த போது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக மேல்மருவத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டுமென்கிற நியாயமான கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு ஏற்காததன் விளைவாகவே இதுபோன்ற தற்கொலைகள் தொடர்கிறது. எனவே, ஒன்றிய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக விலக்களிக்க வேண்டுமெனவும், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருப்பதால் அக்குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.