மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் இன்று (10.07.2025) மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அவர்கள் 08.07.2025 அன்று மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாதகம் விளைவிக்கும் வகையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினார்,
குறிப்பாக, ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக பெற்றோருடன் வர வேண்டும், இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரை படிக்கும் மாணவர்கள் உட்பட புதிதாக சேர்க்கை அவசியம், மாணவர்கள் அனைவருக்கும் உள்ளூர் பாதுகாவலரின் முகவரி அவசியம், மொத்த கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்த வேண்டும் உள்ளிட்டு மாணவர்களுக்கு பாதகமான பல்வேறு உத்தரவுகள் அந்த சுற்றறிக்கையில் இருப்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசு கல்வி உதவித் தொகை பெறக் கூடிய பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் உட்பட அனைவரும் முழுக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல மட்டுமின்றி ஏழை, எளிய மாணவர்கள் இனி சட்டப்படிப்பு படிப்பது என்பது எட்டா கனியாக மாறிவிடும் என்பதை சுட்டிக்காட்டியதோடு, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென அமைச்சரிடம் எடுத்துரைத்தார். கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்த மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்கள் இது சம்பந்தமாக பதிவாளரை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







