செய்தி அறிக்கை

சட்டப்பேரவை இடைத்தேர்தல்: மதுராந்தகம் (தனி) தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளராக தோழர் பி.சுகந்தி M.A., B.Ed ., போட்டி!

சட்டப்பேரவை இடைத்தேர்தல்

சட்டப்பேரவை இடைத்தேர்தல்: மதுராந்தகம் (தனி) தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளராக தோழர் பி.சுகந்தி M.A., B.Ed ., போட்டி!

மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளருமான தோழர் பி. சுகந்தி M.A., B.Ed .,., அவர்கள் போட்டியிடுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் பி.சுகந்தி அவர்களின் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்

மதுராந்தகம் (தனி) சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பி. சுகந்தி M.A., B.Ed ., பற்றிய விபரங்கள்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு – அயன் ரெட்டியப்பட்டியில் பிறந்தவர். இவருக்கு வயது 58. இவரது தந்தை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், தாய் அரசுப் பள்ளி ஆசிரியை.

இவர் விருதுநகர் வி.வி.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் M.A சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் B.Ed., பயின்றவர்.

சமூக செயற்பாட்டாளர்

அரசு உதவி பெறும் பள்ளி விடுதி ஒன்றில் முதலில் பணியாற்றியவர். பின்னர் அப்பணியிலிருந்து விடுவித்துக் கொண்டு 1990 ஆம் ஆண்டு அரசு துவங்கிய அறிவொளி இயக்கத்தில் தொண்டராக, கருத்தாளராக மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர்.

இளம் வயதில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்த ஏழை எளிய மக்களுக்கு எழுத்தறிவை கற்றுக் கொடுத்த பணியின் மூலம் பொது வாழ்விற்கு வந்தவர்.

1991 இல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் இணைந்தார்.  1991 ல் கட்சி உறுப்பினராக இணைந்து ஜனநாயக மாதர் சங்கத்தில் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

2025 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக செயலாற்றி வருபவர்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக….

தமிழகம் முழுவதிலும் எண்ணற்ற பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி பாதுகாப்பை உறுதி செய்யவும், நீதி கிடைக்கவும் பாடுபட்டு வந்திருப்பவர்.

அருப்புக்கோட்டையில் 1995 ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்ற மாணவி கொடூரமாக கூட்டு பாலியல் வன்முறை பிரச்சனை.

காரைக்காலில் 2012ஆம் ஆண்டு அமில வீச்சுக்கு ஆளான பொறியியல் பட்டதாரியான வினோதினி சிகிச்சைக்கு நிதி உதவி – சட்டப் போராட்டம்.

2013 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்.

2013 ஆம் ஆண்டு செங்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு மாணவிகள் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, உள்ளிட்ட பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தை ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக முன்னெடுத்து நீதியும் பெற்றுத் தந்தவர்.

சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்களுக்கான கோரிக்கைகளுக்காக பல போராட்டக் களங்களைக் கண்டவர்.

இவரது இணையர் தோழர் கே.சாமுவேல்ராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இருவரும் முழுநேரமாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்தியா, சுபாஷினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

Leave a Reply