சென்னை அருகே சிட்லப்பாக்கம் ஏரியையொட்டியுள்ள பெரியார் தெரு, ஆனந்தா நகரை சேர்ந்த 154 வீடுகளுக்கும், ராமகிருஷ்ணாபுரத்தில் 213 வீடுகளுக்கும் அரசு நோட்டீஸ் கொடுத்துள்ள பகுதிகளை #CPIM மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பார்வையிட்டு அங்கு நடைபெற்ற ஊர்க் கூட்டங்களில் பேசியது;
காலம் காலமாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்காத அதிகாரிகள், தற்போது நீதிமன்ற தீர்ப்பை காட்டி தப்பிக்க முயற்சிக்கின்றனர். அகதிகளுக்கு வாழ்விட வசதிகளை அரசு ஏற்படுத்தி தருகிறது. தங்களுக்கென்று ஒரு வாழ்விடத்தை ஏற்படுத்திக் கொண்ட இங்குள்ள மக்கள் மாண்புடன் வாழ வழிவகை செய்ய வேண்டாமா?
பயன்பாடற்ற நீர்நிலைகளை வகை மாற்றம் செய்து பயன்படுத்துவது அரசின் வழக்கமான நடவடிக்கை. சென்னை நகரமே ஏரியின் மேல்தான் உள்ளது. தமிழகத்தில் உள்ள நில ஆவணங்கள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
நில ஆவணங்களை கணினிமயமாக்கும் நடவடிக்கைகள் 25 விழுக்காடு கூட நிறைவடையாத நிலை உள்ளது. ஆகவே, காலத்திற்கேற்ப கள ஆய்வு செய்து அரசு ஆவணங்களை திருத்த வேண்டும். தற்போதுள்ள நிலையில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
மக்களை பாதிக்கும் வகையில் அரசு திட்டங்களை கொண்டு வரும்போது, அதை எதிர்த்து வழக்கு தொடுக்கிறோம். அப்போது அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று நீதிமன்றங்கள் கூறுகின்றன. நிலங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க முற்பட்டால் அதை நீதிமன்றங்கள் தடுக்கின்றன. மக்களிடத்தில் நீதிமன்றங்கள் வன்மத்தோடு நடந்து கொள்வது ஏன்?.
கடந்த அதிமுக அரசு வழக்குகளை முறையாக நடத்தாததால் மக்கள் மிகப் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். நீதிபதிகள் உத்தரவிடும் முன்பு குறைந்தபட்சம் ஒரு முறையாவது கள ஆய்வு செய்ய வேண்டும்.
அரசுத் தரப்பும் உண்மையான ஆவணங்களை தாக்கல் செய்வதோடு, எதார்த்தத்தை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும். அதேசமயம், நீர்நிலைகள், நீதிமன்ற உத்தரவு என்று ஏமாற்றாமல் பயன்பாடற்ற நிலத்தில் உள்ள குடியிருப்புகளை முறைப்படுத்தி அதிகாரிகள் பட்டா வழங்க வேண்டும்.
மக்களை வெளியேற்றும் முயற்சிகளை ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்காது. பல இடங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரால் குடியிருப்புகள் இடிக்கப்படாமல் இருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கட்சி தலையீடுதான் காரணம். அதேசமயம், உறுதியான, தொடர்ச்சியான, நீடித்த போராட்டத்தை நடத்தாமல் பட்டா விவகாரத்தில் வெற்றி பெற முடியாது.
இந்த நிகழ்வின்போது கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.