செய்தி அறிக்கை

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணமும் படுகாயம் அடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளித்திடவும் சிபிஐ(எம்)கோரிக்கை!

Cu2 (1)

கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை கிடங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாக பட்டாசு ஆலை ஊழியர்களான சித்ரா, அம்பிகா, சத்தியராஜ், வசந்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் நான்கு பேர் பலியானது மிகவும் கவலைக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமீப காலமாக பட்டாசு ஆலை மற்றும் சேமிப்பு கிடங்குகளில் விபத்து ஏற்படுவதும், உயிர் பலியாவதும் தொடர்கதையாக உள்ளது. பட்டாசு தொழிற்சாலை மற்றும் சேமிப்பு கிடங்குகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோருகிறது.

தற்போது கடலூர் மாவட்டம் எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக உதவி தொகையாக ரூ. 3 லட்சம் என அறிவித்தது போதுமானதல்ல. உதவித் தொகையாக ரூ. 25 லட்சம் அளிப்பதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டுமெனவும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயரிய சிகிச்சையும், உரிய இழப்பீடும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.