கடிதங்கள்செய்தி அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பட்டியலின மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்விட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்க!

Cropped Hammer And Sickle.png

தமிழக முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்

15.06.2022

பெறுநர்

                மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

                தமிழ்நாடு அரசு,

                தலைமைச் செயலகம்,

                சென்னை – 600 009.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

பொருள்:-      திருவள்ளூர் மாவட்டத்தில் ராஜாநகரம், தோக்கமூர் மற்றும் விஷ்ணுவாக்கம் ஆகிய பகுதிகளில் நிலவும் சாதிய பாகுபாடு, தீண்டாமை பிரச்சனைகள் மீது உரிய தலையீடுகள் மேற்கொள்வதோடு கோரிக்கைகளை நிறைவேற்றுதல் தொடர்பாக..

                ஆர்.கே பேட்டை வட்டம்,  ராஜா நகரம் ஊராட்சியில் வசித்து வரும் தலித் மக்களுக்கு  1994ல் 67 குடும்பத்திற்கும், 2002ல் 40 குடும்பத்திற்கும் என அதிமுக ஆட்சிக் காலத்தில் 107 தலித் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 27 ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை அம்மக்களால் இவ்விடத்தில் குடியேற முடியாத நிலையில் இப்பிரச்சனை மாநில மனித உரிமை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதில் தலையிட்ட மாநில மனித உரிமை ஆணையம், இப்பிரச்சனையில் காலம் தாழ்த்திய மாவட்ட வருவாய்த்துறை பயனாளிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டுமெனவும், மேலும் மூன்று மாதத்திற்குள் வீட்டுமனை ஒதுக்கி தர வேண்டுமென்றும் மாவட்ட வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது.  ஆனாலும் அவ்வுத்தரவும் கூட  இதுவரை அமலாகவில்லை.  இதுகுறித்து 13.9.2021 அன்று சிபிஐ(எம்) சட்டமன்றக்குழு தலைவர்  நாகை மாலி எம்.எல்.ஏ., அவர்களும் தங்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

                அதேபோல், கும்மிடிப்பூண்டி வட்டம், ஆரம்பாக்கம் அருகிலுள்ள தோக்கமூர் ஊராட்சியில் 250 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது குடியிருப்பை சுற்றி சுவர் எழுப்பி அதன்மீது கண்ணாடி ஓடு பதிக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அரசுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலமும் அதில் ஒரு கோயிலும் உள்ளது. அந்தப் பகுதியில் நிலவும் சாதிய ஆதிக்கம் காரணமாக,  தலித் மக்கள் கோவில் மற்றும் பொது இடத்திற்கு வரக்கூடாது என்பதற்காக கோவிலை சுற்றி சிமெண்ட் போஸ்ட்  நடப்பட்டு கம்பிவேலி அமைக்க முயற்சியும் நடப்பதாக தெரிகிறது.

                அதே பகுதியில் வீட்டுமனையில்லாத தலித் மக்களுக்கு ஆதி திராவிட நலத்துறையின் கீழ், 92 குடும்பங்களுக்கு பட்டா அளிப்பதற்கென தனியார் நில உரிமையாளர்களிடமிருந்து நிலம் பெறுவதற்காக  மாவட்ட ஆட்சியர் மூலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று தலித் பயனாளிகளிடமிருந்து ரூபாய் 18 லட்சம் நிதி பெற்று நில உரிமையாளருக்கு வழங்கப்பட்டும் இதுவரை நிலமும், பட்டாவும் அம்மக்களுக்கு அளிக்கப்படவில்லை. இது குறித்தும் 24.3.2022 அன்று சிபிஐ(எம்) சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி எம்.எல்.ஏ.,  துணைத் தலைவர் எம்.சின்னதுரை எம்.எல்.ஏ., ஆகியோர் நேரடியாக அந்த பகுதியை பார்வையிட்டதோடு அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்.

                அதே போல, திருவள்ளூர் வட்டம், விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நீண்டகாலமாக பேருந்து நிறுத்த நிழற்குடை இல்லாமல் அந்த பகுதியில் உள்ள பேரத்தூர், விஷ்ணுவாக்கம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் குறிப்பாக பேரத்தூர் தலித்பகுதி மக்கள் மரத்தடியைத்தான் நிழற்குடையாக பயன்படுத்தி வந்தனர். பேருந்து நிழற்குடை வேண்டுமென்று சிபிஐ(எம்) உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில் ஆறு மாதத்திற்கு முன்னால் நிழற்குடை கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அரசு நிர்வாகம் தீர்மானித்த இடத்தில் நிழற்குடை கட்டுவதற்கு அப்பகுதியில் உள்ள ஒரு சில சாதிய ஆதிக்க சக்தியினர் நிழற்குடை கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர். இப்பிரச்னையை அவர்கள் நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்று நிழற்குடை கட்ட தடை விதிக்க கோரிய போது, அம்மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதித்து நிழற்குடை கட்ட எந்தத் தடையும் இல்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

                எனவே, இப்பிரச்சனைகளில் தமிழக அரசு உடனடியாக தலையிடுவதோடு கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் உடன் நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

1)            ராஜா நகரம் தலித் மக்களுக்கு அவர்களுக்கு ஒதுக்கிய இடத்தில் உடனடியாக குடியமர்வு செய்திட வேண்டுமெனவும்,

2)            தோக்கமூர் தலித் மக்கள் வீட்டை சுற்றி எழுப்பி உள்ள சுவரை அகற்றிடவும்,  அரசு பொது நிலத்தில் கம்பி வேலி அமைக்க எழுப்பியுள்ள சிமெண்ட் போஸ்ட்டுகளை அகற்றிடவும், 92 தலித் குடும்பங்களுக்கு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டுமெனவும்,

3)            விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத் தரவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

தங்களன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)

மாநில செயலாளர்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu