இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இக்காலகட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கங்களையும், தனது குறுகிய அரசியல் லாபங்களையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருவதும், அவர்களது வாழ்வுரிமை மற்றும் வழிபாட்டு உரிமை மீது கடும் தாக்குதல்களை நடத்துவதும் தொடர்கிறது. குடியுரிமை திருத்தச்சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து அம்மாநில அந்தஸ்தையே பறித்து துண்டாடியது. பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான ஆயத்தங்களைச் செய்வது போன்ற சிறுபான்மை மக்களைக் குறிப்பாக இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி, தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காஷ்மீர் மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோத செயல்கள் காரணமாக அம்மாநிலத்தில் குறைந்திருந்த தீவிரவாத செயல்கள் மீண்டும் தலையெடுத்து, காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்ட கண்டனத்துக்குரிய செயல்கள் நடந்தேறியுள்ளன.
அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் உட்பட வெறுப்பு அரசியலைத் தூண்டும் வகையில் பொதுவெளியில் பேசுவதும், சங்பரிவாரத்தைச் சார்ந்த வன்முறையாளர்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்தும் ஒன்றிய பாஜக அரசும், மாநில பாஜக அரசுகளும் இத்தகைய வெறுப்பு அரசியலை ஊக்கப்படுத்தும் வகையிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமியர்கள் பெருமதிப்பில் வைத்திருக்கும் முகம்மது நபி குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறியது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய அவதூறு பேச்சுக்கு பாஜகவின் மேலிடத் தலைமை ஊக்கப்படுத்தும் வகையிலேயே நடந்து கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அரேபிய நாடுகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரே அவதூறு பேசியவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக அறிவித்தது. ஆனால் பாஜக அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அதன்பின்னர் டில்லி காவல்துறை கண்துடைப்பாக அவதூறு பேசியவர்கள் மீதும், ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லீம்கள் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்தது. அவதூறு பேசிய பாஜகவினரைக் கைது செய்ய வேண்டுமென கோரி ஆர்ப்பாட்டங்கள் தொடரவே கல்லெறி சம்பவங்கள், தடியடி பிரயோகம் உட்பட பல சம்பவங்கள் பாஜக ஆளும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றன. இதையொட்டி உத்தரபிரதேச பாஜக அரசு பிரக்கியராஜில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரைக் கைது செய்து காவலில் வைத்ததோடு கைது செய்யப்பட்ட சில இளைஞர்களைக் காவல்நிலையத்தில் வைத்து மிருகத்தனமாகத் தாக்கியதும், அதை வீடியோ எடுத்து பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சமூக ஊடகங்களில் பரவ விட்டதும் அவர்களது வன்மத்தைக் காட்டுகிறது. பாஜக அரசு அத்துடன் நில்லாமல் சிலரின் வீடுகளை காவல்துறையினரின் உதவியோடு புல்டோசர் வைத்து தரை மட்டமாக்கியதும் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பாஜக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான, சட்டத்திற்கு புறம்பான இத்தகைய மனித தன்மையற்ற தாக்குதல்களைக் கண்டித்தும், வெறுப்பு அரசியலைக் கைவிட்டு மத நல்லிணக்கம், மதசார்பின்மையை பேணவும் வலியுறுத்தி தமிழகத்தில் சென்னை, வேலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும்,வேலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனும், நெல்லையில் பி.சம்பத், எஸ்.நூர்முகம்மது ஆகியோரும், திண்டுக்கல்லில் அ.சவுந்தரராசன், பாலபாரதி ஆகியோரும், நாகப்பட்டினத்தில் பெ.சண்முகம், பி.செல்வசிங் ஆகியோரும், திருப்பூரில் ஜி.சுகுமாரன், பி.ஆர். நடராஜன் எம்.பி. ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பிட முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மார்க்சிஸ்ட்) அறைகூவி அழைக்கிறது.