செய்தி அறிக்கை

ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை போன்று நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை! தமிழக அரசின் உத்தரவிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு!

Cpim State Secretary Statement

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது போன்று நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளிலும் ஏரியா சபை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தி வந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆட்சி பொறுப்பில் இருந்த மேற்கு வங்கம், திரிபுராவில் வார்டு சபைகள் இயங்கி வந்தன. தற்போதுள்ள கேரள இடது ஜனநாயக முன்னணி அரசிலும் இத்தகைய வார்டு சபைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கட்சியின் 23வது மாநில மாநாடு மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்ற போது, அது குறித்து தீர்மானத்தை நிறைவேற்றி மாநில அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றது. தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் ஏரியா சபை அமைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு வரவேற்கிறது, பாராட்டுகிறது.

மக்கள் கருத்துக்களை அறிந்து உள்ளாட்சி அமைப்புகளை செயல்படுத்த இந்த ஏரியா சபைகள் அதிகாரம் கொண்டதாக சிறப்பாக செயல்படும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

ஆண்டுக்கு 6 சதவிகிதம் சொத்து வரி உயர்வை கைவிடுக!

தற்போது தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் தலையில் பல மடங்கு சுமையை ஏற்றுவதுபோல் ஆண்டிற்கு ஆறு சதவிகிதம் வரி உயர்த்தப்படும் என்பது இன்னும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த வரி உயர்வினை மறு பரிசீலனை செய்வதோடு, ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வு என்பதை முற்றிலுமாக கைவிட வேண்டுமென்று தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.