தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்தவர் தந்தை பெரியார். நாடு மதவெறி சக்திகளின் கையில் சிக்கியிருக்கும் சூழலில், தந்தை பெரியாரின் கோட்பாடுகளை நாடு முழுவதும் அமலாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி உறுதியேற்பு நாளாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
சாதியில்லாத ஒரு சமூகத்தை அமைக்கவும், தீண்டாமையை வேரறுக்கவும், மதவெறி சக்திகளுக்கு எதிராகவும், மூட பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் வாழ்நாள் முழுவதும் பெரியார் போராடினார். ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக, அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த மகத்தான தலைவர் தந்தை பெரியார்.
தமிழ் மொழி உரிமைக்காக குரல் கொடுத்தது மட்டுமல்லாமல், தமிழ் எழுத்தில் சீர்திருத்தத்தை கொண்டு வந்து தமிழ் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார்.
சமீபத்தில் கூட குடும்ப வன்முறைக்கு எதிராக கட்சியின் சார்பில் மாநாடு நடத்தி, தமிழகம் முழுவதும் பெரியார் வலியுறுத்திய பெண் உரிமை கோட்பாடுகளை அமலாக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டோம். அவருடைய 144ஆவது பிறந்த நாளில் சாதி, மதவெறி சக்திகளுக்கு எதிரான, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான, மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்போம்.
“தமிழகத்தில் மதவெறி சக்திகள் தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் சிலைகளை சேதப்படுத்துவது, உடைப்பது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தந்தை பெரியாரின் சிந்தனையையும், புகழையும் அழித்துவிடலாம் என்று நினைக்கின்றனர். இது ஒருபோதும் நடக்காது என்றும், இத்தகைய மதவெறி சக்திகளை தமிழக மக்கள் அடையாளம் கண்டு புறந்தள்ள வேண்டும் என்றும் சமூக நீதியை நிலைநாட்டவும், விஞ்ஞானபூர்வமான கருத்துகளை மக்களிடையே பரப்பவும்” அனைவரும் உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
உடன் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி செல்வா செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.