14.10.2022
இந்தியா யமஹா மோட்டார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 4 தினங்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். பெரும்பான்மைத் தொழிலாளர்கள் தேர்வு செய்யும் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது. மேலும், நிர்வாகம் திடீரென ஒரு போட்டி தொழிற்சங்கத்தை உருவாக்குவதும், அந்த சங்கத்தை 3 தினங்களில், தொழிற்சங்க சட்டப்படி தொழிலாளர்துறை பதிவு செய்வதும் ஜனநாயக விரோத செயல்களாகும். இதனால் தொழிலாளர்கள் மீது வேலை நிறுத்தம் திணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக அமைதியாக எந்தவித இடையூறும் செய்யாத வகையில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளையும், வேலை நிறுத்தத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆதரிக்கிறது.
கடந்த 2018ல் நடைபெற்ற 55 நாட்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தே, இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கத்தை நிர்வாகம் அங்கீகரித்தது. ஊதிய உயர்வு ஒப்பந்தமும் செய்தது. ஆனால் தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளை ஜனநாயக அடிப்படையில் தேர்வு செய்ததை குற்றமாக நிர்வாகம் கருதும் காரணத்தாலேயே, இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கத்தை நிராகரித்து, போட்டி சங்கத்தை உருவாக்குகிறது. இச்செயலை தமிழகத்தின் அனைத்து ஜனநாயக சக்திகளும் வன்மையாக கண்டிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.
இப்பிரச்சனை குறித்து தமிழ்நாடு அரசு தலையீடு செய்வதும், சுமூகத் தீர்வு காண ஏற்பாடு செய்வதும் அவசியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சுட்டிக்காட்ட விரும்புகிறது.
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்