செய்தி அறிக்கைதீர்மானங்கள்

சிபிஐ (எம்) மாநிலக்குழு கூட்ட தீர்மானங்கள்

2022 11 15 245523 2e21e94f B

17.11.2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 2022 நவம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய மூன்றாம் நாள் (17.11.2022) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தீர்மானம் 1 :

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை திரும்ப பெறக் கோரும்
தமிழக எம்.பி.க்களின் மனுவின் மீது
உடன் நடவடிக்கை எடுத்திடுக!…

பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.

தமிழக ஆளுநர் ரவி அவர்கள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டும், அவருடைய பொறுப்புக்கு ஒவ்வாத வகையிலும், அத்துமீறியும் தொடர்ந்து பேசி வருகிறார். பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் தமிழகத்தின் நிலைப்பாட்டை மறுதலித்து ஒன்றிய அரசின் குரலாக ஒலித்து வருகிறார். தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்ட வரைவுகளை முடக்கி வைக்கிறார். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அதனைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததோடு, இனி பொறுப்பதற்கில்லை என்ற சூழலில் குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக தமிழக ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் – 2

தமிழகத்தில் இயங்கும் இந்தி செல்களை உடனடியாகக் கலைத்திடவும், இந்தி – சமஸ்கிருத திணிப்பை
எதிர்த்தும் – சிபிஐ (எம்) போராட்டம் – மாநிலக்குழு அறைகூவல்!

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்தி திணிப்பின் வழியாக சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவதையே தன்னுடைய முழு முதல் மொழி கொள்கையாக பின்பற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு குடியரசு தலைவரிடம் அளித்துள்ள பரிந்துரைகள் அமைந்துள்ளன.

இந்திய மாநிலங்களை ஏ,பி,சி என பகுத்து இந்திப் பயன்பாட்டை வகைப்படுத்தி உள்ளனர். அதன்படி ஏ பிரிவு மாநிலங்களில் இந்திப் பயன்பாடு கட்டாயம். பி பிரிவு மாநிலங்களில் இந்தியுடன் ஆங்கிலப் பயன்பாடு, சி பிரிவு மாநிலங்களில் ஆங்கிலப் பயன்பாடு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று பிரிவுகளிலும் தமிழ்நாடு வரவில்லை. இந்தி மொழி பயன்பாடு என்பதே அலுவல் நடைமுறைகளில் தமிழகத்திற்குப் பொருந்தாது.

அலுவல் மொழி விதிகள் 1976, பிரிவு-1 துணை பிரிவு ii-ன்படி மூன்று பிரிவுகளுக்குள்ளும் தமிழ்நாடு வராது. ஆகவே அலுவல் மொழி விதிகளில் தமிழகம் பெற்றுள்ள தனித்தன்மையை உயிர்ப்போடு உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. நாடாளுமன்ற மொழி ஆய்வுக் குழுக்கள் வருகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவன அலுவலகங்களில் இந்தி பயன்பாடு குறித்து பதிலளிக்குமாறு கேள்வித்தாள் அனுப்பி நிர்பந்தம் செய்யப்படுகிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் இந்தி பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள “இந்தி செல்” அனைத்தும் முழுமையாக கலைக்கப்பட வேண்டும். இந்த அலுவலகங்களில் தமிழ் பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டும். தமிழ் நாட்டில் இயங்கும் அஞ்சல் துறை, ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகள், காப்பீட்டு துறை உள்ளிட்ட ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் படிவங்கள் அனைத்தும் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும் என்ற சிபிஐ (எம்) நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று அஞ்சல் துறை அதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது கவனம் கொள்ளத்தக்கது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் சி பிரிவில் வருவதால் அந்த மாநிலத்திலும் இந்தியை கட்டாயப்படுத்த முடியாது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 19 புதிய திட்டங்களுக்கு இந்தியிலேயே பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த 15 திட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்திலிருந்து `ஹிந்திக்கு மாற்றப்பட்டுள்ளன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களில் தேவநகரி எண்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மொழிகளின் சமத்துவத்திற்கும் எதிரானது. அந்தந்த மாநில மொழிகளில் ஒன்றிய அரசு திட்டங்களின் பெயர்கள் மொழி பெயர்த்து அழைக்கப்பட வேண்டும்.

ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருத திணிப்பைக் கைவிட்டு அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஒன்றிய அலுவல் மொழியாக்க முன்வர வேண்டும்.
இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடி வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மொழியுரிமையைப் பாதுகாக்கவும், இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும் மாபெரும் இயக்கத்தை நடத்துவது என மாநிலக்குழு முடிவு செய்கிறது.

தீர்மானம் 3:

காசி தமிழ்ச்சங்கம் என்ற பெயரில்
ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புவதா?
சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம்!

இந்திய மொழிகள் குழு மற்றும் ஒன்றிய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரையில், காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. அறிவுசார் மற்றும் கலாசாரத்தின் இரண்டு வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு-காசி ஆகிய இரு மையங்களின் வாயிலாக இந்திய நாகரிகத்திலுள்ள ஒற்றுமையை அறிந்துகொள்ள இந்த சங்கமம் ஒரு ஏதுவான தளமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “தமிழர்களின் பாரம்பரியத்தை உலகறிய செய்வதற்கு காசி தமிழ் சங்கமம்” என்று நிகழ்ச்சி அமைப்பாளர் சாமுகிருஷ்ண சாஸ்திரி கூறியுள்ளார். மாணவர்கள், கைவினை, இலக்கியம், ஆன்மிகம், வர்த்தகம், ஆசிரியர்கள், பாரம்பரியம், தொழில்முனைவோர், தொழில்கள், கோவில்கள், கிராமப்புறம், கலாசாரம் என்று 12 பிரிவுகளிலிருந்து, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் ஒவ்வொரு நாள் என்று, ரெயில்களில் மொத்தம் 2,500 பேர் ராமேசுவரம், கோவை, சென்னை ஆகிய இடங்களிலிருந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். முதல் ரயில் ராமேசுவரத்திலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு நவம்பர் 16 அன்று புறப்பட்டுள்ளது. இவர்கள் தளங்களை சுற்றிப்பார்த்துவிட்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்குகளில் கலந்துவிட்டு, அங்குள்ள கண்காட்சியையும் பார்வையிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் மிக முக்கிய கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் மத்தியில், ஊடுருவும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி யில், கடந்த சில நாள்களுக்கு முன், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநில உயர்கல்விதுறை அல்லது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை விவாதிக்கப் படவில்லை. மாநில அரசின் எந்த ஒரு பங்களிப்பும் இருப்பதாக தெரியவில்லை. மாநில அரசும் இத்தகைய நிகழ்ச்சி மீது எந்த ஒரு கருத்தும் வெளியிடாதது ஆச்சர்யமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆள்பிடிக்கும் நோக்குடன் நடைபெறும் இந்த காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி உண்மையில் கலாச்சாரம், இதர நல்லெண்ண நிகழ்வுகளுக்காக அல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்த வகுப்புவாத நோக்கிலான நிகழ்வுகளை தடுத்து நிறுத்த கல்விதுறையும், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறையும், தமிழ்நாடு அரசும் உரிய தலையீடு செய்து தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் இதர ஜனநாயக சக்திகளும் இந்த நிகழ்ச்சி மூலமான பாதிப்பை உணர்ந்து, தடுத்து நிறுத்தும் வகையில் செயலாற்ற சிபிஐ (எம்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4:

கடற்கரை மண்டல மேலாண்மை
வரைவுத் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்திடுக!

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையால் வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன் (coastal regulation zone, 2019) படி தமிழ்நாட்டிற்கான கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (coastal zone Management) தயாரிக்க மாநில அரசின் சுற்றச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தமிழ்நாட்டிற்கான கடற்கரை மண்டல மேலாண்மை வரைவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கான வரைவுத் திட்டத்தை மாநில அமைச்சகத்திற்காக நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம், சென்னை (National center for sustainable coastal management) தயார்செய்துள்ளது.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி (இணைப்பு IV, பத்தி 6) படி வரைவு திட்டம் தயாரிக்கப்பெற்று சுற்றுச்சூழல் துறையின் இணையத்தில் 07-10-2022 அன்று பதிவேற்றப்பட்டுள்ளது. அரசுதுறைகள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்து/மாற்றுக்கருத்துக்களைத் தெரிவிக்க நவம்பர்-21ந் தேதி காலக்கெடுவிதித்துள்ளது.

CRZ-2019 வரைவுத் திட்டம்:- தற்போது, புதியதாக அறிவிக்கப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன் படி வெளியிடப்பட்டுள்ள வரைவு திட்டத்தில் தமிழ்நாட்டின் 14 கடற்கரை மாவட்டங்களுக்கான 117 உத்தேச வரைபடங்களைத் தயாரித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராம அளவில் வரைபடங்களைத் தனித்தனியே தரவிறக்கம் செய்து பார்க்க முடியும்.

குளறுபடிகள்:- திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள வரைப்படங்களில் நிறையக் குளறுபடி உள்ளது. உயரலைக்கோடு, தாழ்வலைக்கோடுகள் தவறாகக் குறிக்கப்பட்டுள்ள தாகவும்; மீனவ கிராமங்கள் மற்றும் அதன் பொதுச் சொத்துக்கள் விபரங்கள் சரியாக பதியப்படவில்லை. மீன் இறங்கு தளம், மீன் காய வைக்கும் இடம், படகுகள் நிறுத்தும் இடம், வலைகள் பழுது பார்க்கும் இடம், விளையாட்டு மைதானம், கோவில்கள் என்று அனைத்தும் முறையாகப் பதியப்படவில்லை. மாவட்ட அளவிலான திட்ட அறிவிப்புகளே உள்ளன, பகுதி வாரியாக அறிவிப்புகள் கொடுக்க வேண்டும்

மாவட்ட அளவிலான திட்டம் மேலாண்மை குழுவில் மூன்று மீனவ பிரதிநிதிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து மீனவர்களின் பிரதிநிதித்துவத்தைப் புறக்கணித்து வருகின்றனர். மீனவர்கள், கடற்கரைவாழ் மக்களின் கருத்துகளை உள்ளடக்கியே வரைபடம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியான முயற்சிகள் எதையும் திட்டவரைவு குழுவினர் மேற்கொள்ளவில்லை. மீனவர் நல அமைப்புகள் பலவும் இவ்வரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காலக்கெடு நீட்டிப்பு தேவை:- இத்திட்ட வரைபடங்கள் மீதான மாற்றுக்கருத்துக்களைத் தெரிவிக்க நவம்பர்-21 தேதி வரை சுற்றுச்சுழுல் துறை காலக்கெடு விதித்துள்ளது. இவ்வரைப்படங்களின் அடிப்படையிலேயே இனிவரும் தொழில் வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பதோடு, கடற்கரை சூழலும், மீனவர் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் எனும் வகையில் இவ்வரைபடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வரைபடங்களை ஆராய்ந்து கள சூழலோடு சரிபார்ப்பது இத்தொழில்நுட்பம் அறிந்த வல்லுநர்களுக்கு மட்டுமே சாத்தியம். இத்திட்ட வரைவோடு நேரடியாகத் தொடர்புடைய மீனவர்கள், கடற்கரை வாழ் மக்களின் கருத்தை பெறாமல் வரைபடங்களை இறுதிசெய்வது நியாயமாகாது. எனவே, வரைவு திட்டத்தின் மீதான மாற்றுக்கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான காலக்கெடுவை இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கச் சுற்றச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை பரிசீலிக்க வேண்டும் என சிபிஐ (எம்) மாநில குழு கோருகிறது.

கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu