மழை, வெள்ளம், புயல், தீ விபத்து மற்றும் இதர இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாணை எண்.380 (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை) நாள்.27.10.2015-ன் படி, நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கி வரும் நிவாரணத் தொகையை இரட்டிப்பாக வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (21.11.2022) எழுதியுள்ள கடிதம்;
21.11.2022
பெறுநர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
பொருள்:- இயற்கை இடர்பாடுகள் மற்றும் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணத் தொகைக்கான அரசாணையை (அரசாணை நிலை எண் 380, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள்: 27.10.2015) – திருத்தி நிவாரணத்தை இரட்டிப்பாக வழங்கிடுவதற்கு – உரிய நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக.
மழை, வெள்ளம், புயல், தீ விபத்து மற்றும் இதர இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாணை எண்.380 (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை) நாள்.27.10.2015-ன் படி நிவாரணத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு தமிழக அரசு இதுநாள் வரை வழங்கி வருகிறது.
உதாரணமாக, இந்த அரசாணையின் படி, இயற்கை சீற்றம் மற்றும் இடர்பாடுகளால் உயிரிழந்தோருக்கு ரூ. 4 லட்சம், 60 சதவிகிதத்திற்கு மேல் ஊனம் ஏற்பட்டால் ரூபாய் 2 லட்சம், அதற்கு கீழ் ஊனம் ஏற்பட்டால் ரூ.59,100/-, ஒரு வாரம் மருத்துவ சிகிச்சை பெற்றால் ரூ.12,700/-, அதற்கும் கீழ் ரூ.4,300/-, துணி மணிகள் இழந்தால் ஒரு குடும்பத்திற்கு ரூ.1,800/-, வீட்டு உடமைகளுக்கு ரூ.2,000/-, மானவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410/-ம், விவசாய பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ. ஹெக்டேருக்கு ரூ.13,500/-மும், வற்றாத பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18,000/-மும், பட்டு வளர்ப்பு ஹெக்டேருக்கு ரூ.7,410/-மும். நெற்பயிர்கள் ஹெக்டேருக்கு ரூ. 13,500/-மும். கால்நடைகளுக்கு ரூ. 30,000/-, ஆடு, செம்மறி இனங்களுக்கு ரூ. 3,000/-மும், கோழிக்கு ரூ. 100/-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக இடிந்த வீடுகளுக்கு ரூ.95,100/-. பகுதியாக இடிந்த வீடுகளுக்கும் ரூ. 5,200-ம் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் மீனவர்கள் மற்றும் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களும், தொகைகளும் மிகக் குறைந்த அளவே நிச்சயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மத்தியில் பரவலான கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இயற்கை சீற்றங்களால் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் உயிரிழந்தால் அக்குடும்பம் நிர்க்கதியாக நிற்கும் அவலம் உள்ளது. அதுபோல், விவசாயிகள் கடன்பெற்று பயிரிடப்படும் பயிர்கள் பாதிப்படைந்து இழப்பு ஏற்படும் போது, ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து அவர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குரியதாக உள்ளது. முழுமையாகவோ, பகுதியாகவோ வீடுகளை இழக்கும் மக்கள் இந்த தொகையை கொண்டு புதிதாக வீடு கட்டவோ, புனரமைக்கவோ முடிவதில்லை. கால்நடைகளை இழப்பவர்களுக்கும் இதே நிலைமை தான் உள்ளது.
தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கம் போன்ற காரணங்களினால் இந்த நிவாரணத் தொகையை பெற்று பாதிக்கப்பட்ட மக்கள் எந்த வகையிலும் தங்களின் பாதிப்பை ஈடுகட்ட முடியாத சூழலால் பெரும் சொல்லொணா துயரங்களுக்கும், வேதனைகளுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆன பிறகும் இதே நிவாரணம் வழங்கப்பட்டு வருவது கவலையளிப்பதாக உள்ளது.
எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இயற்கை இடர்பாடுகள் மற்றும் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணத் தொகைக்கான அரசாணையை திருத்தி (அரசாணை நிலை எண் 380, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை 27.10.2015) இரட்டிப்பாக வழங்கிடுவதற்கும், உயிரிழப்பு மற்றும் ஊனம் ஏற்படும் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்