செய்தி அறிக்கை

ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சுக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் அரசமைப்புச் சட்டத்திற்கு வெளிப்படையாகவும் அடாவடித்தனமாகவும் சவால்விடுத்துள்ளார்.

முஸ்லிம்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாங்கள் “மேலாதிக்கம்” (“supremacy”) உள்ளவர்கள் என்றும் கொண்டிருக்கும் சிந்தனைகளை கைவிட வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார். வரலாற்றுத் தவறுகள் என்ற பெயரில் “இந்து சமூகம்” ஆக்கிரமிக்கப் பட்டதாகவும், எனவே இந்துக்கள் “யுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்” என்றும் கூறியிருக்கிறார்.

இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் உண்மையில் அவர், மதத்தின் அடிப்படையில், நாட்டின் குடிமக்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக (அதாவது முஸ்லிம்களுக்கு எதிராக) வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட அழைப்பு விடுத்திருக்கிறார்.

உண்மையில், இவர்கள் கூறுவது “இந்து சமூகம்” அல்ல. மாறாக இது, இந்துத்துவா அணியினரின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தாலும், மோகன் பகவத் போன்றவர்களால் பல்வேறு மட்டங்களிலும் சிறு பான்மையினருக்கு எதிராக அரசமைப்புச் சட்டம் மற்றும் சட்ட உரிமைகள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுக்கப்படுவதன் மூலமும் ஒருவிதமான முற்றுகை உணர்வை உருவாக்கியிருப்பதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூகமேயாகும்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தாங்கள் இந்துக்களுக்குக் கீழானவர்கள் என்கிற ஆர்எஸ்எஸ் அமைப்பின் மதவெறி சித்தாந்தங்களை உருவாக்கிய ஹெட்கேவர் மற்றும் கோல்வால்கர் போன்றவர்களின் கூற்றுக்களை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும் என்கிற நச்சுக் கருத்தின் புதுப்பிக்கப்பட்ட கூற்றுகளேயாகும்.

இவர் உதிர்த்துள்ள கூற்றுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. இவ்வாறாக மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை அரசமைப்புச் சட்ட விழுமியங்கள் மீது இவர்களால் ஏவப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக நாட்டுப்பற்று கொண்ட மக்களும் சக்திகளும் ஒன்றுபட்டுக் குரல் எழுப்பிட வேண்டும் என்றும் அறைகூவி அழைக்கிறது.