மற்றவை

மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிபிஐ(எம்) சார்பில் சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு!

Temp Copy

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2023 பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;

தீர்மானம் – 1

மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிபிஐ(எம்) சார்பில் சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு!

ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள நரேந்திர மோடி அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு குழிபறிக்கும் வகையில் மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. இதை கண்டித்தும், மாநில உரிமைகளை வலியுறுத்தியும் மாபெரும் ‘மாநில உரிமைகள் பாதுகாப்பு’ மாநாட்டை சென்னையில் நடத்துவது என்றும், இந்த மாநாட்டிற்கு கேரள மாநிலத்தின் முதலமைச்சர்  தோழர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் திரு சந்திரசேகர ராவ் ஆகியோரை அழைப்பது என்றும் சிபிஐ(எம்) மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

               ஒன்றிய மோடி அரசு மாநில உரிமைகளின் மீது கொடூரமானத் தாக்குதலை தொடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வித்துறை மீதான மாநிலங்களின் உரிமைகளை முற்றாக பறிக்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தர மறுக்கிறது. ஜிஎஸ்டி வரி உட்பட மாநிலங்களின் வரி வருவாயை அபகரித்துக் கொண்டு வருகிறது. இயற்கை பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நிதியை கூட தர மறுக்கிறது. பொதுப்பட்டியலில் உள்ள அனைத்து துறைகளையும் கொஞ்சம், கொஞ்சமாக ஒன்றிய பட்டியலுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறது.

               ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டம், கொண்டு வர துடிக்கின்ற மின்சார திருத்தச் சட்டம் போன்றவைகளும் மாநில உரிமைகள் பறிப்பின் ஒரு பகுதியேயாகும்.

               தமிழ்நாடு, கேரளா உட்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளின் செயல்பாட்டை சீர்குலைத்து வருகிறது. உதாரணமாக, தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட 27 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் அடம்பிடித்து வருகிறார்.

               ஒன்றிய அரசினால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றுவதை விட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகவர்கள் போலவே செயல்படுகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில அரசினால் தயாரிக்கப்பட்ட உரையின் சில பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் படிக்க மறுத்தது அப்பட்டமான அத்துமீறலாகும்.

               மொழிவழி மாநிலங்கள் என்பதையே ஏற்காத பாஜக பரிவாரம் மாநிலங்கள் என்ற கட்டமைப்பையே சிதைக்க முயல்கிறது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒன்றியத்தின் அதிகார குவிப்பை நிகழ்த்தி வருகிறது.

               அரசியல் சாசன சட்டத்தின் 8வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை ஒன்றிய அலுவல் மொழிகளாக மாற்ற மறுக்கும் ஒன்றிய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில் மூர்க்கத்தனமாக ஈடுபடுகிறது.

               இந்தியாவின் பன்முகத் தன்மையை மறுத்து “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல்” என்று ஒற்றைத் திணிப்பில் ஈடுபட்டுள்ள ஒன்றிய அரசின் அடாவடிகளை கண்டிக்கும் வகையிலும், மாநில உரிமைகளை வலியுறுத்தியும் சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டை நடத்துவது என்று சிபிஐ(எம்) மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இம்மாநாட்டில் ஜனநாயக இயக்கங்கள், முற்போக்கு சக்திகள், பொதுமக்கள் பேராதரவு தந்து பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென சிபிஐ(எம்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.