பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையே நடந்த தாக்குதல்களையும் எதிர்த் தாக்குதல்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே, பல உயிர்களை இழந்திருக்கும் நிலையில், மேலும் பல உயிரிழப்புகளையும் துயரங்களையும் ஏற்படுத்தும் வகையில் இந்த நிலைமை தீவிரமடையக்கூடும். எனவே இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும்.
இஸ்ரேலில் உள்ள அதீத – வலதுசாரி நெதன்யாகு அரசாங்கம் பாலஸ்தீன நிலப்பகுதியை ஆக்கிரமித்து மேற்குக் கரையில் யூதக் குடியிருப்புகளை நிறுவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை, இந்த மோதலுக்கு முன்னதாக, 40 குழந்தைகள் உட்பட 248 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன தாயகத்தின் மீது அம்மக்களுக்கு உள்ள நியாயமான உரிமைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்ய வேண்டும், மேற்குக் கரையில் உள்ள அனைத்து இஸ்ரேலிய சட்டவிரோத குடியிருப்புகளும் அகற்றப்பட்டு, பாலஸ்தீன நிலங்கள் ஆக்கிரமிப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் (UNSC), இரண்டு நாடுகள் தீர்வுக்காக நிறைவேற்றிய தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி, கிழக்கு ஜெருசலம் பகுதியை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு ஐக்கிய நாடுகள் சபையையும் இந்திய அரசாங்கம் உட்பட சர்வதேச சமூகத்தையும் இந்த மோதலை உடனடியாக நிறுத்துவதை உறுதிசெய்யவும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறது.