மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் அருகமை மாவட்டங்களும், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடந்த டிசம்பர் 17-18 ஆகிய தேதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் இதற்கு முன் கண்டிராத சேதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர் மற்றும் ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம், ஏரல் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. விவசாயம், குடியிருப்புகள், வியாபார நிறுவனங்கள், கடைகள், மீனவர்கள், சிறு-குறு நிறுவனங்கள், உப்பளங்களில் ஏற்பட்டுள்ள சேதம் கணக்கிட முடியாததாகும். தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி முடங்கியுள்ளது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிவாரணத் தொகையும் அறிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள், மாநில, தேசிய மீட்பு குழுவினர், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைத்து பகுதியினரும் இரவு – பகல் பாராமல் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தென்மாவட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றனர். தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு முதலமைச்சர் பிரதமரிடம் போர்க்கால அடிப்படையில் நிவாரண நிதியினை அளித்திட நேரில் சந்தித்து வற்புறுத்தியுள்ளார்.
நிலைமை இவ்வாறிருக்க, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமலும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்ததுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் உண்மைக்கு மாறான விஷயங்களை புதுதில்லியில் செய்தியாளர்களிடம் அள்ளி வீசியுள்ளார். நிவாரண நிதி வழங்க மறுத்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு கருத்து தெரிவித்துள்ளார். தற்போது வரை தமிழகத்தைச் சார்ந்த இவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தலைகாட்டவில்லை. ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூட வரவில்லை என்பதற்கு விளக்கமளிக்கவில்லை. நிதியமைச்சரின் இத்தகையப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
மக்கள் பரிதவிக்கும் நேரத்தில் அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி பாதுகாக்க வேண்டிய உணர்வு கிஞ்சிற்றும் இன்றி ஒன்றிய அரசு மக்களை தவிக்கவிட்டிருப்பதை ஒரு போதும் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய விவாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு உடனடியாக தமிழக அரசு வற்புறுத்தியுள்ள ரூ. 21 ஆயிரம் கோடி நிதியினை வழங்கிட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை இருப்பினும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மக்களை பாதுகாக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. இதனை மேலும் தீவிரமாக தொடர வேண்டுமெனவும் மக்களுக்கு முழுமையான பாதிப்புகளை ஈடு செய்யும் வகையில் நிவாரணங்களை வழங்கிட வேண்டுமெனவும், உயிரிழந்து சுகாதார கேடுகளை ஏற்படுத்தும் கால்நடை பிரேதங்களை அப்புறப்படுத்தவும், சுகாதார பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவ முகாம்களை ஒவ்வொரு கிராமத்திலும், வார்டிலும் ஏற்படுத்தவும் தேவையானால் தமிழகம் முழுவதிலிமிருந்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை அனுப்பி மேற்கொள்ள வேண்டுமெனவும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட இடங்களில் டிசம்பர் 17, 18 தேதிகளில் நேரில் சென்று பார்வையிட்டதுடன் நூற்றுக்கணக்கான கட்சி ஊழியர்கள் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், சுகாதாரப் பணி, மருத்துவ முகாம்களை நடத்துவதற்கும் மேற்கொண்டுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கேரளம் வழிகாட்டுகிறது
அண்டை மாநிலமான கேரளாவில் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு மனித நேயத்துடன் உதவும் வகையில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மிளகாய் தூள், உடை என 18 பொருட்கள் அடங்கிய பை வழங்கிட தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், ஒன்றிய பாஜக அரசோ தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்கிடுவதற்கு பதிலாக அரசியல் காழ்புணர்ச்சியுடனும், பாராமுகத்துடன் செயல்படுவதை தமிழக மக்கள் அறிவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்