செய்தி அறிக்கை

தேர்தல் பத்திரம் – பாரத ஸ்டேட் வங்கியின் ஏமாற்று நாடகம்! உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பை அமல்படுத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

பாரத ஸ்டேட் வங்கியின் ஏமாற்று நாடகம்

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் 5 பேர் அடங்கிய அரசமைப்பு சட்ட அமர்வு, தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. தேர்தல் பத்திரம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது, வாக்காளர்கள் தகவல் அறியும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக நடைமுறையையும், வெளிப்படையான சுதந்திரமான தேர்தலையும் பாதிக்கக் கூடியது என்பது தீர்ப்பின் உள்ளடக்கம். மேலும், இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிட்ட பாரத ஸ்டேட் வங்கி, ஏப்ரல் 12, 2019 முதல் தீர்ப்பளித்த தேதி வரையிலான தேர்தல் பத்திரம் வாங்கியவர், வாங்கிய தேதி, ஆதாயம் பெற்ற அரசியல் கட்சி, மொத்த தொகை ஆகியவற்றை 2024 மார்ச் 6 ஆம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டுமென்றும், தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மார்ச் 13, 2024க்குள் அதனை வெளியிட வேண்டுமெனவும் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், காலக்கெடு முடிவதற்கு ஒருநாள் முன்னதாக, தீர்ப்பின் அடிப்படையில் விபரங்களை அளிக்க ஜூன் 30 வரை அவகாசம் வேண்டுமென பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இது பொது நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி பாஜகவின் ஊழலுக்குத் துணை போவதாகும். உச்சநீதிமன்றம் ஆணையிட்டாலும் அது அரசமைப்புச் சட்ட அமர்வாகவே இருந்தாலும் பாஜக நினைத்தால்தான் நடக்கும் என்ற நிலை இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியே நடைபெறவில்லை என்பதற்கு ஒப்பாகும். பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட சில கிளைகளில்தான் தேர்தல் பத்திரம் வாங்க முடியும். அரசியல் கட்சிகள் இதற்கென பிரத்யேகமான வங்கி கணக்கு துவங்க வேண்டும். வங்கி கணக்குகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் பாரத ஸ்டேட் வங்கி போன்ற மிகப்பெரிய வணிக வங்கி இந்த கணக்குகளை ஊழியர்கள் கையால் எழுதுவது போல கால அவகாசம் கேட்பது இந்திய மக்களை ஏமாற்றுவதற்கான மோசடி நாடகமே. மேலும், இது பாஜகவிற்கு சேவகம் செய்வதற்காக, உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு சட்ட அமர்வு ஒருமனதாக அளித்த தீர்ப்பை அப்பட்டமாக மீறும் சட்ட விரோத நடவடிக்கையாகும். பாரத ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மற்றும் மக்களின் நம்பகத் தன்மையை இழப்பதற்கு இட்டுச் செல்லும்.

பாஜக இதற்கு முன்பும், அரசமைப்பு சட்ட அமர்வு வழங்கிய டெல்லி அரசின் அதிகாரம் குறித்த தீர்ப்பையும், தேர்தல் ஆணையர்கள் நியமன தீர்ப்பையும் சட்டம் போட்டு ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. எனவே, நீதிமன்றத்தை கிள்ளுக்கீரையாக கூட மதிப்பதில்லை என்கிற பாஜகவின் ஆணவம் வெளிப்பட்டுள்ளது. இதற்கு சுயேட்சை அமைப்பான பாரத ஸ்டேட் வங்கி தலைமை துணை போயிருப்பது வெட்கக் கேடான செயல். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்த வேண்டும். அத்துடன், பாரத ஸ்டேட் வங்கியின் கோரிக்கையை நிராகரித்து, உடனடியாக விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்